தேடுதல்

சமூகப்பணி அருள்சகோதரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் சமூகப்பணி அருள்சகோதரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

சமூகப்பணிகள் புதிய வாழ்க்கையைக் கொடுக்கின்றன – திருத்தந்தை

மற்றவர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு இல்லை என்ற உண்மையை திருஅவை, எப்போதும் திரும்பத் திரும்ப வலியுறுத்தி சமூகப்பணி செய்வோருக்கு சவால் விடுக்கின்றது. - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

சமூகப்பணிகள், அவற்றின் வேர்களுக்கு எப்பொழுதும் உண்மையாக இருந்து, புதிய வாழ்க்கையைக் கொடுக்கின்றன என்றும், சபையின் நிறுவனர் இதயத்தில் ஒலித்த சமூகப்பணி ஆர்வம் அச்சபையின் அருள்சகோதரிகள் ஒவ்வொருவர் இதயத்திலும் ஒலிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 20, வெள்ளிக்கிழமை வத்திக்கானின் புனித கிளமெந்தினா அறையில் Margaret Slachta அவர்களால் தொடங்கப்பட்ட சமூகப்பணி அருள்சகோதரிகள் சபையின் தலைமை சகோதரி மற்றும் அருள்சகோதரிகளைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

மக்களிடமிருந்து நாம் பெறும் பரிசுகள், மற்றும், நமது சொந்த பலத்தால் நாம் கொண்டு வரக்கூடியவை என அனைத்தும் பழையதாகி, கெட்டுப்போகின்றன என்றும், ஆவியின் வரங்கள் மட்டுமே நேரம், இடம், சூழ்நிலை போன்றவற்றால் மீண்டும் உருவாக்கப்பட்டு, புதுப்பிக்கப்படுகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.பிரான்சிஸ்.  

சமூகப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த Margaret Slachta போன்று சமூக சவால்களை எதிர்கொண்டு அச்சபையின் அருள்சகோதரிகள் வாழ வேண்டுமென்றும், சபையின் நிறுவனர் இதயத்தில் ஒலித்த சமூகப்பணி ஆர்வம் அச்சபையின் அருள்சகோதரிகள் ஒவ்வொருவர் இதயத்திலும் ஒலிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார் திருத்தந்தை

சமூகப்பணி சகோதரிகளுடன் திருத்தந்தை
சமூகப்பணி சகோதரிகளுடன் திருத்தந்தை

சபையின் நிறுவனர் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற பணியார்வம், இன்றைய சூழலிலும் திருஅவையின் சமூக போதனைகள் வழியாக அரசியல் மற்றும் சமூக சூழல்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

மேலும், அர்ப்பணிப்புள்ள வாழ்க்கை வாழ்ந்தபோதும் சமூகப் பிரச்சினைகளில் தீவிரமாக ஈடுபட்ட அவர் போன்று, கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த சூழ்நிலைகள், உலகப் போர்களுக்கு வழிவகுத்த சமூக மாற்றங்கள், போன்றவற்றுடன், கடந்த காலத்தைப் போலவே இன்றும், சாட்சிகளாக இருக்க வேண்டும் என்ற அழைப்பு ஒவ்வொருவரும் பெறுதல் அவசியம் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், மற்றவர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு இல்லை என்ற உண்மையை திருஅவையும், தூயஆவியாரும், சபையின் நிறுவனரும்  எப்போதும் திரும்பத் திரும்ப வலியுறுத்தி சமூகப்பணி செய்வோருக்கு சவால் விடுவதாகவும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 January 2023, 13:14