தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் திருவழிபாட்டுக்கையேடு தயாரிப்பிற்கு உதவும் மறைமாவட்ட அருள்பணியாளார்களின் பிரதிநிதிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் திருவழிபாட்டுக்கையேடு தயாரிப்பிற்கு உதவும் மறைமாவட்ட அருள்பணியாளார்களின் பிரதிநிதிகள்  (Vatican Media)

கிறிஸ்துவே வாழ்வின் மையம் என்பதை உணர்த்தும் வழிபாட்டுக்கையேடுகள்

திருஅவை வழிபாட்டு நிகழ்வுகளில் தலைமையேற்போர் அல்ல மாறாக வழிபாட்டுக்கு உதவும் புத்தகங்களே தலைவராக இருந்து செயல்படுகின்றன - திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருவழிபாட்டு நிகழ்வுகளில் வழிபாட்டுக் கையேடுகள்தான் தலைமை தாங்குபவர்களை விட முக்கியமான பணியைச் செய்கின்றன என்றும், இத்தகைய வழிபாட்டுக் கையேடுகளை ஆழ்ந்த அறிவுடன் மட்டுமன்றி ஆழமான மேய்ப்புப்பணி உணர்வுடனும்  தயாரிக்க உதவிசெய்ய வேண்டும் என கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 20 வெள்ளிக்கிழமை, வத்திக்கானில் புனித அன்செல்மோ பாப்பிறைக் கல்லூரி நடத்திய முழுமையில் வாழ்தல் ("Vivere in pienezza l'azione liturgica" ) என்னும் பயிற்சியில் பங்கேற்ற, திருவழிபாட்டுக்கையேடு தயாரிப்பிற்கு உதவும் மறைமாவட்ட அருள்பணியாளார்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வழிபாட்டுக் கையேடுகள், விடாமுயற்சியுடன் நடத்தப்படும் சடங்கை முன் வைக்காமல் அவ்வழிபாட்டின் பொருளையும் ஆற்றலையும் புரிந்து கொள்ள உதவுகின்றன என்று எடுத்துரைத்த திருத்தந்தை, சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே நம் வாழ்வின் மையம் என்பதை இக்கையேடுகள் தங்கள் செயலால் வலியுறுத்துகின்றன எனவும் சுட்டிக்காட்டினார்.

அருள்பணியாளர்களுடன் திருத்தந்தை
அருள்பணியாளர்களுடன் திருத்தந்தை

திருவழிபாடு நிகழ்வில் கலந்துகொள்தல், கொண்டாடுதல், வாழ்தல், என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்தல் போன்றவற்றின் வழியாக ஒவ்வோர் ஆண்டும் அதன் அழகு, எளிமை, ஒழுங்கு ஆகியவற்றை அடைகின்றோம் என எடுத்துரைத்த திருத்தந்தை, ஒரு பெரிய இசைக்குழுவில் இருப்பதைப் போல, ஒவ்வொருவரும் திருவழிபாட்டில் தங்களது பகுதி, அசைவுகள், சைகைகள், உச்சரிக்கும் செபங்கள் அல்லது பாடும் பாடல்களை அறிந்திருக்க வேண்டும் எனவும், இதனால் வழிபாட்டு முறை புகழ்ச்சியின் இசைக்கச்சேரியாக, சிம்பொனியாக உருமாறும் எனவும் வலியுறுத்தினார்.

வழிபாட்டுக் கையேடுகளால் மக்களின் பயனுள்ள பங்கேற்பு ஊக்குவிக்கப்படுகின்றது என வலியுறுத்திய திருத்தந்தை, இரண்டாம் வத்திக்கான் சங்கக் கொள்கைகளின்படி மக்களை கிறிஸ்துவிடமும் கிறிஸ்துவை மக்களிடமும் கொண்டு செல்லவும், வழிநடத்தவும், சமூகத்தின் நன்மை மற்றும் மேய்ப்புப்பணி பராமரிப்பைக் கண்முன் கொண்டு செயல்படவும் வேண்டுமென வலியுறுத்தினார்.

மேலும், இவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படும்போது, கிறிஸ்து நம்மைச் சந்தித்து நம் இதயத்தைத் தொடுவதை உணர முடியும் என்றும், இதனைப் புறக்கணித்தால் ஆற்றலும் அழகும் அர்த்தமுமில்லாத வெறும் சடங்குகளாக மட்டுமே அவை நமக்கு காட்சியளிக்கும் எனவும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 January 2023, 13:08