தேடுதல்

Rome call அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் Rome call அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

நீதி, அமைதி, உடன்பிறந்தஉறவின் முன்னுதாரணம் ROME CALL

நன்னெறி கல்வி மற்றும் சட்டங்களை உள்ளடக்கிய ROME CALL ஒப்பந்தம் மனித குடும்பத்தின் நன்மைக்கு வழிவகுக்கும் வழிகளைத் தேடுவதில் தைரியத்துடனும் விவேகத்துடனும் தொடர்ந்து செயல்பட வேண்டும் - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

அனைவரின் பொதுநலன், பொதுஇல்லமாகிய இப்பூமிப்பந்தைப் பாதுகாத்தல், கலாச்சாரத்தை ஊக்குவித்தல், நீதி, அமைதி, உடன்பிறந்த உணர்வு போன்றவற்றிற்கு முன்மாதிரியாக ROME CALL AI ETHICS ஒப்பந்தம் உள்ளது என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 10 செவ்வாய்க் கிழமை வத்திக்கானின் புனித கிளமெந்தினா அறையில் Renaissance அமைப்பினர் மற்றும் வாழ்விற்கான திருப்பீட பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ROME CALL AI ETHICS ஒப்பந்தம் குறித்த நிகழ்வின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

2020 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இவ்வொப்பந்தம் ஆபிரகாம் வாரிசுகளான கிறிஸ்தவம், யூதம், இஸ்லாமியம் போன்றவற்றிற்கு இடையே இணக்கத்தையும் ஈடுபாட்டையும் வளர்த்துள்ளதாகவும், உலகில் நீதி, அமைதிக்கான பணியில் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, உடன்பிறந்தஉறவு போன்றவற்றை வெளிப்படுத்துவதில் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.    

அன்றாட வாழ்வின் ஒவ்வொரு  நிகழ்விலும், தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வில் நன்னெறியுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு அதிகரித்து வருகிறது எனவும்,  உலகத்தையும் நம்மையும் நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் இவ்வறிவு செயல்படுத்தப்படுகின்றது எனவும் திருத்தந்தை கூறினார்.

ROME CALL  நிகழ்வில் பங்கேற்ற தலைவர்கள்
ROME CALL நிகழ்வில் பங்கேற்ற தலைவர்கள்

தொழில்நுட்பத்தின் முடிவுகள் உண்மையில், யாரும் விலக்கப்படாமல், எல்லா மனிதர்களுக்குமான  வளர்ச்சியை உருவாக்கவும், மிகவும் பலவீனமானவர்கள் மற்றும் விலக்கப்பட்டவர்களுக்காக  பணியாற்றவும் உதவுகின்றதா என்று கேள்வி எழுப்பப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் திருத்தந்தை கூறினார்.

மனித வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் அனைவருக்கும் பொதுவான உரையாடலை வலுப்படுத்துதல் போன்றவற்றிற்கு ROME CALL அமைப்பு ஒரு பயனுள்ள கருவியாக இருக்கும் எனவும், மனிதஉரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட பிரதிபலிப்பு இக்காலத்திற்கு மிக அவசியமாகத் தோன்றுகின்றது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

உண்மையில், டிஜிட்டல் உலகின் உருமாற்றங்களின் ஆழம் மற்றும் வேகம் எதிர்பாராத சிக்கல்களை எழுப்பி, தனிப்பட்ட மற்றும் கூட்டு நெறிமுறைகளில் புதிய நிபந்தனைகளை விதிக்கின்ற நிலையிலும், ROME CALL அமைப்பின் இணைப்புக்கள் டிஜிட்டல் மானுடவியலை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் எனவும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

நன்னெறி, கல்வி மற்றும் சட்டம்.

நன்னெறி கல்வி மற்றும் சட்டங்களை உள்ளடக்கிய ROME CALL ஒப்பந்தம் மனித குடும்பத்தின் நன்மைக்கு வழிவகுக்கும் வழிகளைத் தேடுவதில் தைரியத்துடனும் விவேகத்துடனும் தொடர்ந்து செயல்பட அவ்வமைப்பினரை திருத்தந்தை வாழ்த்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 January 2023, 13:27