தேடுதல்

மனுவுரு எடுத்தல்வழி கடவுள் நம்முடன் ஒன்றறக் கலந்திருக்கிறார்

இப்பூமிக்கு மழைத் தேவைப்படுவதுபோல, மனிதராகிய நமக்கு நம்பிக்கை தேவைப்படுவதால், நம்பிக்கையின் அன்னையாக விளங்கும் மரியாவிடம் இறைவேண்டல் செய்வோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 1, இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த மரியா-இறைவனின் தாய் என்ற பெருவிழாத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை.

நம்பிக்கை தரும் அன்னை மரியா

கடவுளின் தூய அன்னையே! என்பது கி.பி.431-இல் நடைபெற்ற எபேசு திருச்சங்கத்தில் எழுந்த கத்தோலிக்க நமபிக்கையாளர்களின் ஆர்ப்பரிப்பின் பேரொளியாகும். ஒரு மனிதக் குழந்தைக்குத் தாய் கிடைத்திருப்பது போல நம் கடவுளுக்கு ஒரு தாய் கிடைத்திருக்கிறார். நமது மனிதத்தன்மை கடவுளின் மனிதத்தன்மையே என்பதை இக்கருத்து எடுத்துக்காட்டுகிறது.

அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே, அன்னை மரியாவிடம் கடவுள் மனுவுரு எடுத்ததன் வழியாக, வெறும் வார்த்தைகளால் அல்ல, செயல்களால், தூரத்திலிருந்து அல்ல, நம் அருகிலிருந்து, நம் உடலில் ஒன்றறக் கலந்தவராகக் கடவுள் இருக்கிறார்.

'கடவுளின் தூய அன்னையே!' என்ற தலைப்பில் எண்ணற்ற புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், இவ்வார்த்தைகள் கடவுளின் புனித மக்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களிலும் இதயங்களிலும் நுழைந்து அவர்தம் இன்ப துன்பங்களின்போது எழும் எளிய  இறைவேண்டலாக வெளிப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் தூய அன்னையே, கடவுளின் தாயே, பாவிகளாகிய எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற வார்த்தைகள் நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் நாம் உச்சரிக்கும் வலிமைமிகு சொற்களாக அமைந்து பலன் தருகின்றன.

நாம் கூறும் இவ்வார்த்தைகளை அன்னை மரியா கேட்டு அதற்குப் பதில்மொழி தருகிறார். நமது விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு, தன் திருக்கரத்தில் தாங்கியுள்ள நமக்காக மனுவுருவெடுத்த இயேசுவிடமிருந்து கனிந்த அன்பை நமக்குத் பெற்றுத்தருகின்றார். இப்பூமிக்கு மழைத் தேவைப்படுவதுபோல, மனிதராகிய நமக்கு நம்பிக்கை தேவைப்படுவதால், நம்பிக்கையின் அன்னையாக விளங்கும் மரியாவிடம் இறைவேண்டல் செய்ய இப்புத்தாண்டின் தொடக்க நாள் நம்மைத் தூண்டுகிறது.

நம் அன்னையிடம் இறைவேண்டல் செய்வதற்கு வலிமையில்லாமல் தவிக்கும் அவரின் பிள்ளைகளுக்காகவும் உலகெங்கிலும் உள்ள பல சகோதரர் சகோதரிகளுக்காகவும் வேண்டுவோம். அதிலும் குறிப்பாக, உக்ரைனில் போர் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளால் இந்த விடுமுறை நாட்களை இருளிலும் கடுகுளிரிலும் கழிப்பதுடன், கொடிய வறுமையிலும் பயத்திலும், வன்முறையிலும், வேதனைகளிலும் மூழ்கித் துயருறும் அம்மக்களுக்காக செபிப்போம். மேலும், அமைதியை இழந்துள்ள அனைவருக்காகவும், அமைதியின் இளவரசரை இப்புவிக்குப் கொணர்ந்த அன்னை மரியாவிடம் இறைவேண்டல் செய்வோம்.

இடையர்கள் சென்றார்கள்

இன்றைய நற்செய்தி வாசகம் 'சென்றார்கள்' 'கண்டார்கள்' என்ற இரண்டு மையக்கருத்துக்களை முன்வைக்கின்றன. முதலாவதாக, எளிமையையும் ஏழ்மையையும் தங்கள் வாழ்வில் கொண்டிருந்த இடையர்கள், தங்களின் முக்கிய செயல்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆர்வமுடன் சென்று குழந்தை இயேசுவைக் கண்டனர். அதாவது, அவர்கள் தங்கள் பயணங்களில் சவால்கள், துயரங்கள், கடினமான சூழல்கள் என எதைக் குறித்தும் அச்சம் கொள்ளாது துணிவுடன் இயேசுவைக் காணச் சென்றனர்.

அன்பானவர்களே, கடவுளையும் அவர் தரும் அமைதியையும் பெற விரும்பினால், நாமும் ஓரிடத்தில் மட்டுமே நில்லாது, எழுந்து விரைவாகச் சென்று நமது இலக்கை அடையத் துணியவேண்டும். எண்ணற்ற மக்கள் துயற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், கணணிகளுக்கு முன்னாள் அமர்ந்து நேரங்களை விரயமாக்கிக் கொண்டிராமல், அவர்களுக்கு உதவ முன்வருவோம்.

பாதிக்கப்பட்டு துயருற்றுக் கொண்டிருக்கும் மக்கள் அனைவரும், நமது அன்றாடக் காரியங்களையும் வசதி வாய்ப்புகளையும் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, கடவுள் விரும்பும் புதிய காரியங்களுக்கு நமது மனங்களைத் திறக்கவும் தாழ்மையான மனதுடன் அவர்களுக்குத் துணிவுடன் பணியாற்றவும் நம்மை அழைக்கிறார்கள். ஆகவே, சகோதரர் சகோதரிகளே, இடையர்களைப் பின்பற்றி நாமும் விரைந்து சென்று பிறரன்புப் பணிகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வோம்.

இடையர்கள் கண்டர்கள்

இரண்டாவதாக, இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும், யோசேப்பையும், குழந்தையையும் கண்டார்கள் என்று பார்க்கின்றோம். இடையர்களைப் போன்று நாமும் நம்மைச் சுற்றி நிகழ்வதைக் காணவேண்டும். அவர்கள் எதையும் கூறாமல், எதையும் கேட்காமல், எதையும் செய்யாமல் அமைதியில் திளைத்திருந்தார்கள். இப்புத்தாண்டில் நாமும் பரபரப்பான நம் பணிகள் மத்தியில் அமைதியான மனதுடன் நம்மைச் சுற்றி நிகழ்வதை உற்றுநோக்குவோம்.

மிகவும் பரபரப்பான நம் பணிகள் மத்தியில் எத்தனை முறை நாம் கடவுளை உற்றுநோக்கி இறைவேண்டல் செய்வதற்கு, அவரது வார்த்தைகளைக் கேட்பதற்கு, அவரை வழிபடுவதற்கு, அவருடன் உடன் இருப்பதற்கு மறந்திருக்கின்றோம் என்பதையும், இதையேதான் நாம் மற்றவர்களுக்கும் செய்கின்றோம் என்பதையும் எண்ணிப் பார்ப்போம்.

நமது கதவிற்கு அருகில் உள்ளவர்களையும், நாம் வாழும் அதே கட்டிடங்களில் வசிப்பவர்களையும், நம் பயணத்தின்போது நாம் நாள்தோறும் சந்திப்பவர்களையும் நாம் உற்றுநோக்குகின்றோமா என்பதை இக்கணம் நினைத்துப் பார்ப்போம். ஆகவே, அன்புச் சகோதரர் சகோதரிகளே, இடையர்களைப் பின்பற்றி, நம்மைச் சுற்றி நிகழ்வதை உற்றுநோக்கக் கற்றுக்கொள்வோம்.

இப்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து, கடவுளின் தூய அன்னையே! கடவுளின் தூய அன்னையே! கடவுளின் தூய அன்னையே! என்று மூன்று முறை அன்னை மரியாவை அழைப்போம்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2023, 15:03