தேடுதல்

காங்கோ குடியரசிற்குப் பயணிக்கும் திருத்தந்தை காங்கோ குடியரசிற்குப் பயணிக்கும் திருத்தந்தை 

40வது திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்

உரோம் நகரின் Astalli மையத்தில் வாழும், காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் தென்சூடான் ஆகிய இரு நாடுகளைச் சார்ந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் குடி பெயர்ந்தோரை அவர்களது குடும்பத்தினருடன் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

சனவரி 31, செவ்வாய் காலை, தனது 40வது திருத்தூதுப் பயணமாக காங்கோ குடியரசு மற்றும் தென் சூடான் நாடுகளுக்கு செல்ல, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து பியுமிச்சினோ விமான நிலையம் புறப்பட்டார்.

புறப்படுவதற்கு முன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Astalli புலம்பெயர்ந்தோர் மையத்தில் வாழும், காங்கோ குடியரசு மற்றும் தென்சூடான் ஆகிய இரு நாடுகளைச் சார்ந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் குடி பெயர்ந்தோரை  அவர்களது குடும்பத்தினருடன் சந்தித்தார். அவர்களுடன் திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski உடனிருந்தார்.

ஃபியூமிசினோ விமான நிலையத்திற்கு வந்ததும், திருத்தந்தையின் வாகனமானது, 1961 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி காங்கோவில் கொல்லப்பட்ட 13 இத்தாலிய விமானப்படையினர்க்கான நினைவுச்சின்னமான Caduti di Kindu அருகே நின்றது. அங்கு சிறிது நேரம் நின்று,  இரத்தம் சிந்தி படுகொலையானவர்கள்,  பாதிக்கப்பட்டவர்கள், என உயிரிழந்த அனைவருக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது செபத்தை அர்ப்பணித்தார்.

நினைவுச்சின்னமான Caduti di Kindu முன் திருத்தந்தை
நினைவுச்சின்னமான Caduti di Kindu முன் திருத்தந்தை

அதன் பின் காங்கோ ஜனநாயக குடியரசிற்கு அழைத்துச் செல்லும் A359 என்னும்  இத்தாலிய விமானத்தில் தனது பயணத்தை உரோம் உள்ளூர் நேரம் காலை 8.10மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் நண்பகல் 12.40 மணிக்குத் துவக்கினார்.

தனது இந்த பயணத்தில் 12 நாடுகளைச் சார்ந்த 75 பத்திரிக்கை மற்றும் ஊடக பணியாளர்களை உடன் அழைத்துச்சென்ற திருத்தந்தை, அவர்களது சிறப்பான பணிக்காக அவர்களைப் பாராட்டினார்.  

5,420 கிலோமீட்டர் பயணத்தை 6 மணி 50 நிமிடங்கள் பயணித்து உள்ளூர் நேரம் பிற்பகல் 3.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் மாலை 7.30 மணிக்கு காங்கோ குடியரசின் தலைநகரான கின்சாசா வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

Astalli மையம் என்பது இயேசு சபை அருள்பணியாளர்களால் நடத்தப்படும் புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் மையமாகும். 600 தன்னார்வலர்களைக் கொண்டு இயங்கும் இம்மையமானது 17,000 புலம்பெயர்ந்தோர்க்கு உதவி வருகின்றது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2023, 15:05