திறந்த இதயத்தோடும் விரித்த கைகளோடும் உரையாடுவோம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இதயத்தோடு பேசுதல் : பிறரன்பில் உண்மையை செயலாக்குதல், என்ற மையக்கருத்துடன், இவ்வாண்டின் சமூகத்தொடர்புக்கான செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வாண்டு மே 21ஆம் தேதி, பெந்தகோஸ்தே ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக சமூகத்தொடர்புத் தினத்திற்கென, சமூகத்தொடர்பாளர்களின் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் விழாவான சனவரி 24, செவ்வாய்க்கிழமையன்று செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சென்று பார்த்து செவிமடுத்தல் குறித்து கடந்த ஆண்டில் சிந்தித்த நாம், இதயத்தோடு பேசுதல் குறித்து இவ்வாண்டில் தியானிப்போம் என 57வது உலக சமூகத்தொடர்பு நாளுக்கான இவ்வாண்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மற்றவர்களுக்கு தூய இதயத்துடன் செவிமடுப்பதன் வழியாகவே, அன்பில் உண்மையைப் பின்பற்றி நம்மால் பேசமுடியும் என கடந்த ஆண்டு மற்றும் இவ்வாண்டின் மையக்கருத்துக்களை இணைத்துக் காட்டியுள்ள திருத்தந்தை, திறந்த இதயத்தோடும் விரித்த கைகளோடும் தகவல் தொடர்பில் ஈடுபடுவதற்கான அர்ப்பணம் ஒவ்வொருவருக்கும் உரியது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருஅவையின் மறைவல்லுனர்களுள் ஒருவராகிய புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் அவர்கள் உயிரிழந்த 400 ஆண்டுகளுக்குப்பின் இந்த சமூகத்தொடர்பு தினத்தைச் சிறப்பிக்கும் இவ்வேளையில், திருத்தந்தை 11ஆம் பயஸால் புனித டி சேல்ஸ், கத்தோலிக்கப் பத்திரிகையாளர்களின் பாதுகாவலாராக அறிவிக்கப்பட்டதன் நூறாமாண்டையும் தற்போது சிறப்பிக்கின்றோம் என்பதையும் நினைவூட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கால்வினிஸ்ட் கிறிஸ்தவ சபையுடன் மிகப்பெரும் முரண்பாடுகளை கத்தோலிக்க திருஅவை கண்டுவந்த காலத்தில், ஜெனிவாவின் ஆயராக இருந்த டி சேல்ஸ், பொறுமையான பேச்சுவார்த்தைகள், தாழ்ச்சி, மனிதாபிமானம் ஆகியவைகள் வழியாக கடவுளின் இரக்கம்நிறை அன்பின் சான்றாக விளங்கினார் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி உரைக்கிறது.
ஒருவர் மற்றவருக்கு செவிமடுப்பதே மற்றவர்களுக்கு நாம் கொடுக்கவல்ல மிகச்சிறந்த பரிசு என சமூகத்தொடர்பு நாளுக்கானத் தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்சார்பு எண்ணங்களின்றி, கவனமுடன், திறந்த மனதுடன் ஒருவருக்கு செவிமடுப்பதன் வழியாகவே கனிவுடனும், கருணையுடனும், நெருக்கத்துடனும் நாம் மற்றவர்களுடன் உரையாடமுடியும் என மேலும் கூறியுள்ளார்.
செவிமடுப்பதில் தாழ்ச்சியையும், உரையாடுவதில் கனிவையும் அடிப்படையாகக் கொண்ட சமூகத்தொடர்பு முறை என்பது, உண்மை மற்றும் பிறரன்பிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும் எனக்கூறும் திருத்தந்தை, இன்றைய காலக்கட்டத்தில் அமைதிக் கலாச்சாரத்துடனும், பேச்சுவார்த்தைகளுக்குரிய மனப்பான்மையுடனும், ஒப்புரவுடனும் செயலாற்றவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்