தேடுதல்

திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் இறுதி அஞ்சலி திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் இறுதி அஞ்சலி  

திருத்தந்தை பெனடிக்ட் அடக்கப்பெட்டியினுள் வைக்கப்பட்டுள்ள பொருட்கள்

திருத்தந்தையின் பால்யம், நாணயங்கள், பதக்கங்கள், மற்றும் அவரது வரலாற்றுக் குறிப்புக்கள் அடக்கப்பெட்டியினுள் வைக்கப்பட்டுள்ளன.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மறைந்த முன்னாள் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களின்  இறுதிச் சடங்குகள் பக்தியுள்ள முறையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவரது அடக்கப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பொருள்கள் பற்றிய குறிப்புக்களைத் திருப்பீடம் தெரிவித்துள்ளது. 

சனவரி 05, இவ்வியாழனன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் அடிநிலக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட, திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களின் அடக்கப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பொருள்கள் பற்றிய தகவல்களைத் திருப்பீடம் வெளியிட்டுள்ளது.  

திருத்தந்தையின் பால்யம், அவரது உருவம் அச்சிடப்பட்ட நாணயங்கள், பதக்கங்கள், மற்றும் எதிர்கால தலைமுறையினர் அவரைக் குறித்து அறிந்துகொள்ளும்படி, இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட அவரது வரலாற்றுக் குறிப்புக்களைக் கூறும் (Rogito) ரோஜிதோ ஆகியவை உலோக உருளைக்குள் வைத்து அடக்கப்பெட்டியினுள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பலியின் முடிவில் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களின் உடல், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முதலில் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்குப் பெருங்கோவில் உள்புறமாக எடுத்து வரப்பட்டு, சைப்ரஸ் மரம், துத்தநாகம் மற்றும் ஓக் ஆகியவற்றால் செய்யப்பட்ட மூன்றடுக்குப் பாரம்பரிய அடக்கப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.

திருப்பலியில் பங்கேற்ற மக்கள் கூட்டத்தினரில் ஒரு பகுதியினர்
திருப்பலியில் பங்கேற்ற மக்கள் கூட்டத்தினரில் ஒரு பகுதியினர்

விரைவில் புனிதர் 

திருத்தந்தையின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட மக்கள் "santo subito" அதாவது, ,விரைவில் புனிதர்  என்ற வரிகளை எழுதி உயர்த்திப்பிடித்தும், குரல் எழுப்பியும் மகிழ்ந்தனர். 2005-ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் இறுதிச்சடங்கின்போது வத்திக்கான் வளாகத்தில் கேட்கப்பட்ட இவ்வொலிகள் இரண்டாம் முறையாகத் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களின் இறுதிச்சடங்கின்போதும் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2023, 13:45