நீதி இல்லாத அமைதி உண்மையான அமைதி அல்ல - திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
அமைதிக்கான ஒவ்வோர் அர்ப்பணிப்பும் நீதிக்கான அர்ப்பணிப்பைக் குறிக்கின்றது என்றும், நீதி இல்லாத அமைதி உண்மையான அமைதி அல்ல என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 25 சனிக்கிழமையன்று வத்திக்கான் நகர நீதித்துறையின் 94 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதன் உறுப்பினர்களை வத்திக்கானில் சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நீதி என்பது ஒரு கற்பனை அல்ல. கடவுளுக்கான ஒவ்வொரு கடமையையும் நேர்மையாகவும் உண்மையாகவும் நிறைவேற்றுவது என்றும் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவது என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீதி, ஒவ்வொருவருக்கும் தகுதியானதை வழங்கும் நல்லொழுக்கம் என்றும், பொதுவான வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கு அனைவருக்கும் இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார்
நீதி என்பது தனிப்பட்ட மனமாற்றத்தின் வழியாக வளர்க்கப்பட வேண்டிய ஒரு நற்பண்பு என்றும், விவேகம், துணிவு நிதானம் ஆகிய மற்ற முக்கிய நற்பண்புகளுடன் ஒன்றாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை, நம்பிக்கையின் உண்மை அழகில் கடவுளின் இரக்கம், மற்றும் அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பு ஒருபோதும் தோல்வியடையாது, மிகவும் உயர்வானது ஆழமானது, எப்போதும் நம் கைகளைப் பிடித்து ஆதரித்து நம்மை உயர்த்துகிறது, வழிநடத்துகிறது என்பதை மறந்து விடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்
போர் மற்றும் மோதல்களால் அமைதி மற்றும் நீதிக்கான ஏக்கம் நம்மில் வளர்கின்றது என்றும் அமைதியையும் நீதியையும் கட்டியெழுப்புவதற்கு சாட்சியமளிக்க வேண்டிய அவசியம் நம் மனசாட்சியில் வலுப்பெறுகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரக்கமும் நீதியும் மாற்று வழிகள் அல்ல, மாறாக அவைகள் ஒன்றாக நடக்கின்றன, ஒரே முடிவை நோக்கி சமநிலையில் செல்கின்றன என்றும், இரக்கம் என்பது நீதியை இடைநிறுத்துவது அல்ல, அதை நிறைவேற்றுவது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நீதியின் பாதை உடன்பிறந்த உறவை சாத்தியமாக்குகிறது, அதில் அனைவரும் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும், குறிப்பாக பலவீனமானவர்கள். உண்மையை நோக்கிய இந்த விழிப்புணர்வையும் பதற்றத்தையும் எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க அனைவரும் உழைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்