தேடுதல்

துயருறும் மக்களோடு திருஅவையும் இணைந்து துன்புறுகிறது...

சமுதாயத்தில் பெயரும் புகழும் பெற்று முன்னேறுவதற்கும், அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கும் ஆயர் பதவியை ஒரு வாய்ப்பாகக் கருதக் கூடாது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 2, இவ்வியாழனன்று,  காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகரான கின்ஷாசாவிலுள்ள காங்கோ கத்தோலிக்க ஆயர்பேரவையின் தலைமையகத்தில் ஆயர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.

அன்புக்குரிய சகோதர ஆயர்களே, உங்களோடு இந்த நாள்களைக் கழிப்பதில் நான் பெரிதும் மகிழ்கின்றேன். ஒரு திருஅவையாக நாம் நற்செய்தியின் தூய காற்றை சுவாசிக்க வேண்டும், உலகத்தின் மாசுபடிந்த காற்றை அகற்ற வேண்டும், நம்பிக்கையின் இளம் இதயத்தைப் பாதுகாக்க வேண்டும்.

இந்த மண்ணின் கிறிஸ்தவ சமூகத்திற்கு மற்றொரு முகம் இருப்பதை நான் அறிவேன். அதன் மக்களுக்காகத் துயருறும் ஒரு திருஅவை, அம்மக்களின் வாழ்க்கை, மகிழ்ச்சி மற்றும் துயரங்களுடன் இணைந்து துடிக்கிறது. மக்களின் உடல் சார்ந்த மற்றும் ஆன்மிகக் காயங்களைத் தழுவி, கிறிஸ்துவின் அருகிலிருந்து வாழ்வளிக்கும் மற்றும் நலமளிக்கும் தண்ணீரால் அவர்களைப் புனிதப்படுத்துவதில் அக்கறை கொண்ட ஒரு திருஅவையாக இருக்கின்றது. அநீதிகளும் வன்முறைகளும் நிறைந்த இந்தச் சமூகத்தில் மக்களின் தூரங்களை நான் அறிகின்றேன். அதேவேளையில், இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் அவர்கள் நம்பிக்கையை இழக்காமல் அதனை ஆழமாகத் தழுவிக்கொள்வதைப் பார்க்கின்றேன்.

இந்த நெருக்கடியான சூழலில் நமது பணிகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று எழும் கேள்விக்குறித்து சிந்திக்கும்போது இறைவாக்கினர் எரேமியாவின் வாழ்வு என் நினைவுக்கு வருகின்றது. கடவுள் ஒருபோதும் தம் மக்களைக் கைவிடமாட்டார் என்றும், தொலைந்துபோன மற்றும் மீட்க முடியாத சூழ்நிலைகளில் கூட அமைதிக்கான திட்டங்களை அவர் மேற்கோள்வார் என்றும் நம்பி அவர் தனது வாழ்நாளைக் கழித்தார்.

நெருக்கடியான வேளைகளில் கடவுளின் நெருக்கத்தை முதலில் அனுபவித்தவர் எரேமியா. மேலும் இந்த வழியில் மட்டுமே அவர் நம்பிக்கையின் வலிமையான இறைவாக்குரைத்தலை மற்றவர்களுக்குக் கொண்டு வர முடிந்தது. உங்கள் ஆயர் பணியும் இந்த இரண்டு நிலைகளுக்கிடையே மேற்கொள்ளப்படுவதால் இதுகுறித்து இப்போது உங்களோடு என் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

கடவுளுடன் நெருக்கமாக இருப்பது

முதலாவதாக, கடவுளுடன் நெருக்கமாக இருப்பது. “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன் (எரே 1:5 என்ற இந்த வார்த்தைகள்தான் நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் கடவுள் எழுதும் அன்பின் பிரகடனம். இது யாராலும் அழிக்க முடியாத ஒன்று என்பதுடன் வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு மத்தியில், ஆறுதலின் ஆதாரமாக இருக்கின்றது.

கடவுளுடைய மக்களின் மேய்ப்பர்களாகப் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ள நாம், கடவுளுடைய இந்த நெருக்கத்தில் நம்பிக்கை வைப்பதும், செபத்தில் நம்மை உருவாக்குவதும், அவருடைய முன்னிலையில் நேரத்தை செலவிடுவதும் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்துகொள்வோம். இந்த வழியில் மட்டுமே நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள் நல்ல மேய்ப்பர்களாகிய நம்மிடம் நெருங்கி வருகின்றனர். மேலும் இந்த வழியில் மட்டுமே நாம் நல்ல மேய்ப்பர்களாகவும் மாறுகின்றோம், ஏனென்றால், இயேசுவின் துணையின்றி நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதையும் அறிந்துகொள்வோம். (காண்க யோவா 15;5)

நாம் ஒருபோதும் நம்மைத் தன்னிறைவு பெற்றவர்கள் என்று நினைக்க வேண்டாம், சமுதாயத்தில் பெயரும் புகழும் பெற்று முன்னேறுவதற்கும், அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கும் ஆயர் பதவியை ஒரு வாய்ப்பாகக் கருதக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, உலகத்தின் தீய ஆவிக்கான கதவை நாம் ஒருபோதும் திறக்கக்கூடாது, ஏனென்றால், இது நமது சொந்த நலனுக்காக ஆயர் பணியின் மேற்கொள்ளத் தூண்டுகிறது.

ஆகவே, ஆயர் நண்பர்களே, நம் மக்கள் மத்தியில் கடவுளுக்கும் அவருடைய அன்புக்கும் நம்பகமான மற்றும் போதிக்கும் ஆற்றல்மிக்க சாட்சிகளாக இருப்பதற்கு, இறைவனுடனான நமது நெருக்கத்தைப் போற்றுவோம். நம் வழியாகத்தான் மக்களை ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் எண்ணெயால் அருள்பொழிவு செய்ய விரும்புகிறார்! காங்கோ மக்களிடம் கடவுள் சொல்ல விரும்புவதை எடுத்துரைக்கும் குரல்கள் நீங்கள்தான். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள் (காண்க இச 7:6)

மக்களின் இறைவாக்கினராதல்

இரண்டாவதாக, மக்களின் இறைவாகினாராதல் என்பது குறித்து சிந்திப்போம். இப்போது மீண்டும் எரேமியாவின் வாழ்வை உற்றுநோக்குவோம். கடவுளின் அன்பான மற்றும் ஆறுதலான வார்த்தையைப் பெற்ற பிறகு, அவர் மக்களினங்களுக்கு இறைவாக்கினராக ஏற்படுத்தபட்டார் (காண்க. எரே 1:5). வன்முறை மற்றும் ஊழல் நிறைந்த சூழலில் சான்று பகிர்வதற்கும், இருளுக்குள் ஒளியைக்  கொண்டுவருவதற்கும் அவர் அனுப்பப்பட்டார்.

கடவுளின் வார்த்தை என்பது நமக்குள்ளே பற்றி எரியும் நெருப்பு, அதுவே நம்மை வெளியே செல்லத் தூண்டுகிறது! அப்படியானால், மனிதரை இறைவனின் அன்புத் தீயால் பற்றி எரியச் செய்யவும், திருத்தூதுசார் பேரார்வத்துடன் மக்களை எல்லா இடங்களுக்கு அனுப்பவுமே நாம் ஆயர்களாக ஏற்படுத்தப்பட்டுள்ளோம்.

அப்படியானால், வெறுப்பு மற்றும் சுயநலம், கோபம், பகைமை மற்றும் வன்முறை ஆகிய நச்சுச் செடிகளைப் பிடுங்கி எரிவதற்கு நாம் அழைக்கப்படுகிறோம். பணத்திற்கும் ஊழலுக்கும் எழுப்பப்பட்ட பலிபீடங்களை உடைத்தெரியவும் நீதி, உண்மை மற்றும் அமைதியின் அடிப்படையில் உடன்பிறந்த உறவு நிலைக்கான ஒரு வாழ்வைக் கட்டியெழுப்பவும், நிலைவாழ்விற்கான விதைகளை விதைக்கவும் நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். இவ்வழைப்பே மக்களை ஒடுக்குமுறைகள், புறந்தள்ளுதல் முறைகேடுகள், வன்முறைகள், இரத்தம் சிந்துதல் ஆகியவற்றிலிருந்து விடுதலைப் பெறச் செய்யும்.

சாந்தமும் மனத்தாழ்மையும் கொண்டு, தீமையையும் மரணத்தையும் வென்றவராகிய நல்லாயன் இயேசுவின் பிரசன்னம், இந்த மாபெரும் நாட்டில் மாற்றங்களைக் கொணர்ந்து எப்போதும் உங்கள் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் இருப்பதாக! நான் உங்கள் அனைவரையும்  முழு மனதுடன் ஆசீர்வதிக்கிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 February 2023, 13:38