தேடுதல்

தென்சூடானில் இரத்தம் சிந்துவதை நிறுத்துவோம் : திருத்தந்தை

இனி இரத்தம் சிந்துதல் வேண்டாம், மோதல்கள் வேண்டாம், அமைதியற்ற சூழல் வேண்டாம், அழிவு வேண்டாம். புதியவற்றை கட்டி எழுப்பவேண்டிய நேரம் இது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 3, இவ்வெள்ளியன்று, தென்சூடானின் தலைநகர் ஜூபாவில், அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுநிலை மற்றும் உலகக் கலாச்சார அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.

அன்புச் சகோதரர் சகோதரிகளே, அமைதி நிறைந்த உங்களின் பயணத்தில் இணையும் பொருட்டு ஒப்புரவின் திருப்பயணியாக உங்களிடம் நான் வந்துள்ளேன். இந்த இளம் தேசத்தைக் கடந்து செல்லும் மிகவும் பழமையான வரலாற்றைக் கொண்ட மிகப்பெரும் நைல்நதியை உருவமாக கொண்டு எனது சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

பல வளங்கள் நிறைந்த இந்த நிலம், அதன் மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் நிறைந்துள்ளது. இது புதிய மற்றும் உயிர் கொடுக்கும் ஊற்றுகளால் புதுப்பிக்கப்படவேண்டும். தென்சூடானின் மக்களுக்கு அவசியமாகத் தேவைப்படும் வளமை மற்றும் அமைதியின் தூய ஆதாரங்களாக சமுதாயத்தின் வாழ்க்கையை புதுப்பிக்க நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.

அன்பு நிறைந்த அரசு அதிகாரிகளே, நீங்கள் பணியாற்ற அழைக்கப்பட்ட இந்த மக்களின் நலனுக்காக நீங்கள் உண்மையாக உழைக்கும்போது,  அவர்களும் இந்த மண்ணின் வரலாறும் உங்களை என்றும் நினைவில் வைத்திருக்கும் என்பதை மறவாதீர். நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே இந்நாட்டின் எதிர்கால தலைமுறையினர் உங்களை மறக்கவோ, நினைக்கவோ செய்வார்கள்.

நைல்நதியின் பயணம்

நைல் நதி தன் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் அதன் ஆதாரங்களை விட்டுச் செல்வது போல, வரலாற்றின் போக்கு அமைதியின் எதிரிகளை விட்டுச் சென்று உண்மையாக அமைதிக்காக உழைத்தவர்களுக்குப் புகழைக் கொண்டுவரும். அமைதியையே நாடும் அம்மனிதருக்கு வழிமரபினர் இருப்பர் (திபா 37:37) என்ற இறைவார்த்தையும் இதனைத்தான் எடுத்துக்காட்டுகிறது.

இனி வன்முறை வேண்டாம்

இயேசு கூறிய நான்கு வார்த்தைகளை தயவுகூர்ந்து ஏற்றுகொள்ளுமப்படி உங்களை முழுமனதுடன் கெஞ்சிக் கேட்கின்றேன். அவர் கெத்செமணி தோட்டத்தில் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவரின் சீடர் ஒருவர் வாளை கையில் எடுத்தபோது, No more of this, அதாவது, இதற்குமேல் வேண்டாம் (காண்க லூக் 22:51) என்று கதறினார். அவ்வாறே நானும் கூறுகின்றேன். இனி இரத்தம் சிந்துதல் வேண்டாம், மோதல்கள் வேண்டாம், அமைதியற்ற சூழல் வேண்டாம், அழிவு வேண்டாம். புதியவற்றை கட்டி எழுப்பவேண்டிய நேரம் இது! இனி போரின் காலம் அழிந்தொழியட்டும் அமைதியான புதிய காலம் பிறக்கட்டும்.

நாடு எல்லோருக்கும் சொந்தம் என்பதே குடியரசு

நைல்நதியைக் குறித்து மீண்டும் சிந்திக்கும்போது அது வாழ்வை அடையாளப்படுத்துகிறது என்பதை உணர்வோம்.  Republic அதவாது, குடியரசு என்பது இந்நாடு எல்லாருக்கும் சொந்தம் என்பதை பிரகடனப்படுத்துகிறது. குறிப்பாக, இந்நாட்டின் அரசுப் பதவிகளைக் கொண்டிருப்போர், தங்களை முழுவதுமாகப் பொது மக்களின் நலன்களுக்காக அர்பணித்துக்கொள்ள வேண்டும். இதுதான் அதிகாரத்தின் வலிமை. எனவே, குடியரசு என்று அழைக்கப்படுவது மட்டும் போதாது, மாறாக, முதன்மையான காரியங்கள் தொடங்கி அனைத்திலும் ஒன்றிணைந்திருப்பது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்துகொள்வோம்.

அன்பு நண்பர்களே, வார்த்தைகளிலிருந்து செயல்களுக்குச் செல்ல வேண்டிய நேரம் இது. அனைவருக்கும் நம்பிக்கையை புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்பாக இந்நேரம் அமையட்டும். வேறுபாடுகளைக் களைந்துவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டும் என்பதை நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டிய நேரமிது.

முன்னோக்கிச் செல்வோம்

நைல்நதியானது முன்னோக்கிச் செல்வதற்கான வழியைப் பரிந்துரைக்கிறது. பயணித்துச் செல்லும் நதியானது தனது பாதையில் இன்னொரு நதியுடன் இணைக்கின்றது. அவ்வாறே, நமது வாழ்வின் பயணத்தில் ஒருவரையொருவர் மதிக்கவும், அறிந்துகொள்ளவும், உரையாடலில் ஈடுபடவும், இணைந்து பயணிக்கவும் இதுவே வழி என்பதையும் கற்றுக்கொள்வோம்.

ஒவ்வொரு விதமான வன்முறைக்குப் பின்னாலும், கோபமும் வெறுப்பும் இருக்கிறது. ஒவ்வொரு விதமான கோபம் மற்றும் வெறுப்பின் பின்னாலும், காயங்கள், அவமானங்கள் மற்றும் தவறுகளின் ஆறாத நினைவுகள் இருக்கின்றன. ஆகவே, இவற்றிலிருந்து விடுபட ஒரே வழி உரையாடல்தான். அதாவது,  பிறருடன் உரையாடல்களை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களையும் நம் சகோதரர் சகோதரிகளாக ஏற்று அவர்களுக்கு இடமளிப்பது என்பது இந்தச் உரையாடலின் அடையாளமாக அமைகின்றது.

சில நேரங்களில் பேரழிவுகளை ஏற்படுத்தும் நதி

இருப்பினும், ஒரு பெரிய நதி, சில நேரங்களில் நிரம்பி வழிவதுடன் பேரழிவுகளையும் ஏற்படுத்துகின்றது. இந்த நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலரின் அனுபவம் இதுதான். அவர்களுக்கு எனது உடனிருப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்க வேண்டுமென்று  கேட்டுக்கொள்கிறேன். இது காலநிலை மாற்றத்தின் விளைவு. எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக, படைப்பில் அக்கறை செலுத்தும் தொலைநோக்குப் பார்வை நமக்குத் தேவை. குறிப்பாக, இலாபவெறியால் ஏற்படும் காடழிப்பை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துவதாக நான் உணர்கின்றேன்.  

ஆற்றின் படுகை தூய்மைப்படுத்தப்பட வேண்டும்

ஆற்றில் வெள்ளம் வராமல் இருக்க, அதன் படுகையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இது மனித வாழ்வில் நிகழும் தீமைகளைக் களையவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. சமத்துவமற்ற நிதிப் பகிர்வு, பணக்காரர் ஆவதற்கான இரகசியத் திட்டங்கள், ஆதரவு ஒப்பந்தங்கள், வெளிப்படைத் தன்மை இல்லாமை ஆகிய இவை அனைத்தும் ஆற்றுப்படுகை என்னும் மனித சமுதாயத்தை மாசுபடுத்துகின்றன. இவைகள் மனித வாழ்வைத் திசை திரும்புகின்றன. ஆகவே, இவைகள் தூய்மையாக்கப்பட வேண்டும்.

கரைகள் பலப்படுத்தப்பட வேண்டும்

ஆற்றின் உயிர் கொடுக்கும் நீர் ஆபத்தின் கொடிய ஆதாரமாக மாறாமல் இருக்க, ஆற்றின் போக்கை பொருத்தமான கரைகளை ஏற்படுத்தி அதனைக் கட்டுப்படுத்துவது அவசியம். இது அப்படியே மனித வாழ்விற்கும் பொருந்தி நிற்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தடைகள் இருந்தபோதிலும், தெற்கு சூடான் உட்பட அப்பகுதியில் உள்ள பல நாடுகளில் தொடர்ந்து வளர்ந்து வரும் ஆயுதக்குவியலைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது

கடலை அடையும் நதி

இறுதியாக, வெள்ளை நைல் தெற்கு சூடானில் இருந்து வெளியேறி, மற்ற நாடுகளைக் கடந்து, நீல நைலில் கலந்து பின்னர் கடலில் பாய்கிறது. நதிகளுக்கு எல்லைகள் தெரியாது. அவைகள் வெவ்வேறு நாடுகளை இணைகின்றன. இதேபோல், பொருத்தமான வளர்ச்சியை அடைவதற்கு, அப்பகுதியில் உள்ளவர்களுடன் தொடங்கி, மற்ற நாடுகளுடன் இணைந்து நேர்மறையான உறவுகளை வளர்ப்பது முன்னெப்போதையும் விட இப்போது அவசியமானதாக உள்ளது.

தெற்கு சூடான் ஒப்புரவையும், வளர்ச்சிக்கான புதிய வழிகளையும் பெறுவதற்கு  எங்கள் இதயம் நிறைந்த செபங்களையும் ஆதரவையும் உங்களுக்கு வழங்க விரும்புகிறோம். இந்த நாட்டை அன்புகூரும் விண்ணகத் தந்தை அதற்கு அமைதி மற்றும் வளமைக்கான புதிய காலத்தை வழங்கட்டும். தென்சூடான் குடியரசை கடவுள் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 February 2023, 13:36