தேடுதல்

Saba Orbeliani பல்கலைக் கழகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் திருத்தந்தை Saba Orbeliani பல்கலைக் கழகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் திருத்தந்தை   (VATICAN MEDIA Divisione Foto)

கல்வி வழி ஒளியேற்றுவோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

ஒளி பார்ப்பதற்கு மட்டுமல்ல, மாறாக, மக்களைச் சுற்றிப் பார்க்க வைப்பதற்கும், பல்வேறு நற்காரியங்களை செய்வதற்கும் கலாச்சார எல்லைகளைக் கடந்து பணியாற்றுவதற்கும் உதவுகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகில் வெறுப்பு என்ற இருள் அழுத்தமாக இருக்கும்போது, ​​நன்மை பயக்கும் நமது வெளிச்சத்தின் தேவை அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 13, இத்திங்களன்று, ஜார்ஜியாவின் Saba Orbeliani பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், மறதியும் அலட்சியமும் எல்லாவற்றையும் இருட்டாகவும் தெளிவற்றதாகவும் மாற்றும் அதேவேளையில், கலாச்சாரமும் கல்வியும் கடந்த கால நினைவை மீட்டெடுத்து நிகழ்காலத்திற்கு ஒளியூட்டுகின்றன என்றும் எடுத்துரைத்தார்.

ஜார்ஜிய மொழியில் ‘ganatleba’ என்ற சொல் மிகவும் அர்த்தமுள்ளது என்பதை நான் அறிந்தேன், இது ஒளி என்ற வார்த்தையிலிருந்து வருகிறது என்றும்,  இது அறியாமையின் இருளிலிருந்து அறிவின் ஒளிக்கு மாறுவதைத் தூண்டுகிறது என்றும், இது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்றும்  சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜார்ஜியாவின் மக்கள், மகிழ்ச்சியும், துணிச்சலும், வரவேற்கும் மற்றும் வாழ்க்கையை நேசிப்பவர்கள் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதன் காரணமாகவே, அம்மக்களின் நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தின் காரணமாக இருள் நிறைந்த காலங்களிலும் நேர்மறையான அணுகுமுறையை வளர்த்துக் கொள்ள முடிந்தது என்றும் பாராட்டினார்.

இந்நாட்டின் வளர்ச்சியில் கத்தோலிக்கத் திருஅவையின் பங்களிப்பு அளப்பரியது என்றும், இப்பங்களிப்பே பயனுள்ள கலாச்சார வழிகளைச் செய்ல்படுத்தியுள்ளதுடன், நாட்டின் வரலாறும் பயனடைய வழிவகுத்துள்ளது என்றும் விவரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், அந்தப் பங்களிப்பின் தொடர்ச்சியாக நீங்கள் செயல்படுகிறீர்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகிழ்ச்சியான மற்றும் ஆக்கபூர்வமான வழியில், கத்தோலிக்கச் சமூகத்தின் பணியை ஜார்ஜிய மண்ணில் வளர்ப்பது நல்லது, அது அனைவருக்கும் பலன் தரும் விதையாக இருக்கும் என்றும் நம்பிக்கையூட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2023, 14:49