தவக்காலப் பயணம் ஒருங்கிணைந்த பயணம் – திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி தவக்காலத்தை திருஅவை தொடங்க உள்ளதையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தவக்காலப் பயணமும் சினோடல் என்னும் ஒருங்கிணைந்த பயணத்தைப் போலவே என்று தன்னுடைய தவக்காலச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
பிப்ரவரி 17 வெள்ளிக்கிழமை தவக்காலம் தொடங்க நான்கு நாட்களே உள்ள நிலையில் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை சினோடல் என்னும் ஒருங்கிணைந்த பயணத்துடன் ஒப்பிட்டு தனது தவக்கால செய்திகளை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தின் இரண்டாவது ஞாயிறன்று உருமாற்றத்தின் நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது என்று கூறிய திருத்தந்தை இத்தவக்காலத்தில் இயேசு நம்மைத் தனியாகத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார் என்றும், நமது அன்றாட, வழக்கமான, சலிப்பூட்டும் வாழ்க்கை மத்தியில் தவக்காலத்தில் நாம் இயேசுவோடு சேர்ந்து "உயர்ந்த மலையில் ஏறி கடவுளின் புனித மக்களுடன் வாழ அழைக்கப்படுகிறோம் என்றும் கூறியுள்ளார்.
தவக்காலமானது, துறவு, பயணம் என்னும் இரண்டால் இணைந்திருப்பது போல, ஒருங்கிணைந்த பயணமும் தனிப்பட்ட மற்றும் திருஅவை மாற்றத்தை தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்று எடுத்துரைத்த திருத்தந்தை, தாபோர் மலையில் திருத்தூதர்கள் முன் நடைபெற்ற இயேசுவின் உருமாற்றம் இரண்டு முக்கிய செய்திகளை நமக்கு எடுத்துரைக்கின்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்று வானத்திலிருந்து கேட்ட அவர் சொல்வதைக் கேளுங்கள் என்ற வார்த்தையும் மற்றொன்று, உருமாற்ற ஒளியினால் நிரப்பப்பட்ட திருத்தூதர்கள், கண்களை ஏறெடுத்து இயேசுவைத்தவிர வேறொருவரையும் பார்க்கவில்லை என்ற வார்த்தையுமாகும்.
அவர் சொல்வதைக் கேளுங்கள்
தவக்காலம் இயேசுவின் குரலுக்கு செவிசாய்க்கும் காலமாக அருளின் காலமாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நம் உடன் வாழும் மனிதர்களில் வாழும் கடவுளின் குரலுக்கு செவிமடுக்கவேண்டும், என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை
வானத்திலிருந்து வந்த குரலைக் கேட்ட சீடர்கள் முகம் குப்புற விழ, இயேசு அவர்களை எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள் என்று கூறுகின்றார் அவர்கள் நிம்ரிந்து பாரத்தபோது இயேசுவைத்தவிர வேறொருவரையும் அங்குக் காணவில்லை என்ற இறைவார்த்தைகளுக்கேற்ப, அன்றாட உழைப்பு, துன்பம், முரண்பாடு, பயம், அசாதாரண நிகழ்வுகள், அனுபவங்கள் ஆகியவற்றில் தஞ்சம் அடையாது, இயேசுவை மட்டுமே காண பாஸ்கா ஒளியின் மகிமையை எதிர்கொள்ள தவக்காலம் அழைக்கின்றது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இயேசுவோடு மலையேறுவதற்கும், அவருடைய தெய்வீக மகிமையை அனுபவிப்பதற்கும், நம்பிக்கையில் வலுப்பெறுவதற்கும், அவருடைய மக்களின் மகிமையும், நாடுகளின் ஒளியும் அவருடன் சேர்ந்து பயணத்தைத் தொடர தூயஆவியானவர் இத்தவக்காலங்களில் நம்மை ஊக்குவிக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தவக்கால துறவு என்பது, எப்பொழுதும் அருளால் உயிர்ப்பிக்கப்படும் ஒரு அர்ப்பணிப்பாகும் என்றும் நம்முடைய நம்பிக்கையின்மை மற்றும் சிலுவையின் பாதையில் இயேசுவைப் பின்தொடர்வதற்கான எதிர்ப்பை பேதுரு மற்றும் பிற திருத்தூதர்கள் போல கடக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, மலையேறுவது போல், முயற்சி, தியாகம், செறிவு தேவைப்படும் ஒரு மேல்நோக்கிப் பயணத்தை தவக்காலத்தில் மேற்கொள்ளவேண்டும் என்றும், இயேசுவும் சீடர்களும் தாபோர் மலைக்கு ஏறுவது போலவே, ஒரே குருவின் சீடர்களாகிய நாம் ஒரே பாதையில் ஒன்றாக நடப்பதால், நமது தவக்காலப் பயணமும் "சினோடலும் ஒன்றே என்றும் கூறியுள்ளார்.
இயேசுவே உண்மை வழி என்பதை நாம் அறிந்து, வழிபாட்டுப் பயணம், ஆயர் பேரவை, ஆகியவை திருஅவை மீட்பராகிய கிறிஸ்துவின் மறைபொருளில் இன்னும் ஆழமாகவும் முழுமையாகவும் நுழைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர்கள் முன்பாக உருமாறிய இயேசுவின் முகம் சூரியனைப் போல பிரகாசித்தது, அவருடைய ஆடைகள் ஒளியைப் போல வெண்மையாயின என்ற நற்செய்தியின் கூற்று, இயேசுவுடன் உயரமான மலையில் இருக்கும், மூவருக்கும் அவருடைய மகிமையைப் பார்க்க அருள் வழங்கப்படுகின்றது என்றும், இது வெளியில் இருந்து வராத, ஆனால் அவரிடமிருந்து வெளிப்பட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட பிரகாசமான ஒளி என்றும், இந்த தரிசனத்தின் தெய்வீக அழகு, சீடர்கள் தாபோர் ஏறும் எந்த முயற்சியையும் விட ஒப்பற்றது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
மலைஏறுவது கடினமாக இருந்தாலும் அதன் உச்சியில் நின்று இயற்கை அழகைப் பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகின்றதோ அதுபோல சினோடல் முயற்சியும் கடினமானதாக சோர்வை ஏற்படுத்துவதாகத் தோன்றினாலும் அதன் முடிவு நமக்கு நிச்சயம் ஆச்சரியமான பலனத்தரும் என்றும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் உருவகப்படுத்தும் வகையில் மோசே, எலியா ஆகியோர், தாபோர் மலையில் தோன்றி சீடர்களின் அனுபவம் மேலும் செழுமைப்படுத்தப்பட்டது போல, ஒருங்கிணைந்த பயணத்தில் நமது வாழ்வும் பணியும் செழிப்பாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்துவின் புதுமை என்பது பழைய உடன்படிக்கை மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும் என்றும், அது கடவுளின் மக்களுடனான வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாதது மற்றும் அதன் ஆழமான அர்த்தத்தை வெளிப்படுத்துவது போல ஒருங்கிணைந்த பயணமும் திருஅவையின் பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ள அதே நேரத்தில் புதுமைக்கும் திறந்திருக்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்