மத்தியதரைக் கடல் படகு விபத்து குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஐரோப்பிய நாடுகளில் வளமான வாழ்வைத் தேடிய மக்களுடன் மத்தியதரைக் கடல் வழியாக இத்தாலி நோக்கி வந்த படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 26, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற இந்த படகு விபத்து குறித்து ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை, உயிரிழந்தவர்களுக்காகவும், தப்பிப் பிழைத்தவர்களுக்காகவும் செபிப்பதோடு, இத்துயர நிகழ்வில் உடனடி உதவிகளை ஆற்றியவர்களுக்கு தன் நன்றியை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
தென் இத்தாலிய கலாபிரியா கடல் பகுதியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சொமாலியா மற்றும் ஈரான் நாட்டு அகதிகளை ஏற்றிவந்த படகு ஞாயிறு அதிகாலையில் கடலில் மூழ்கியதில், 12 குழந்தைகள் உடபட 59 பேர் உயிரிழந்துள்ளனர், முப்பதுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
ஏறத்தாழ 200 பேரை ஏற்றிக்கொண்டு துருக்கியிலிருந்து பயணம் செய்த இப்படகு விபத்துக்குள்ளானதில், 80 பேர் வரை உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு குழுக்களின் கூற்றுப்படி, 2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மத்தியதரைக்கடல் விபத்துக்களில் 20,000 பேர் வரை இறந்துள்ளனர், அல்லது காணாமல் போயுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்