CENCO ஆயர் பேரவையினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் - வத்திக்கான்
உலக துறவிகள் நாள் வழிபாட்டிற்குப் பின்னர் திருத்தந்தை 3.6 கிமீட்டர் காரில் பயணித்து கின்சாசா உள்ளூர் நேரம் மாலை 5.45 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு, 10.15 மணிக்கு திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்தார். அதன் பின் மாலை 6.30 மணிக்கு கின்சாசாவில் உள்ள இயேசு சபை அருள்பணியாளர்களைச் சந்தித்து மகிழ்ந்தார்.
கின்சாசாவில் இயேசு சபை
ஆப்ரிக்கா முழுவதிலும் உள்ள கத்தோலிக்க மக்களில் அதிக எண்ணிக்கையைக் கொண்ட காங்கோ குடியரசில் தலத்திருஅவைகளின் செயல்பாடுகள் காங்கோ மன்னர்களுக்கு கீழ் நடந்து வந்தது. மக்களையும் தலத்திருஅவைகளையும் கட்டுப்படுத்திய அவர்கள், தலத்திருஅவையின் மேம்பாடுகளுக்காக லிஸ்பன் மற்றும் உரோமில் உள்ள அருள்பணியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி இயேசு சபை மறைப்பணியாளர்கள் நான்கு பேர், 1548 ஆம் ஆண்டில், காங்கோவின் தலைநகரான எம்பன்சா-காங்கோவை அடைந்தனர். அன்று முதல் இன்று வரை ஏழை எளிய மக்கள் புலம்பெயர்ந்தோர் குடிபெயர்ந்தோர், உடல் மனம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து நிலைகளில் உள்ள மக்களுக்கும் இயேசுவின் உடனிருத்தலையும் ஆறுதலையும் அளித்து வருபவர்கள் இயேசு சபை அருள்பணியாளர்கள்.இத்தகைய சிறப்போடு கின்சாசாவில் பணியாற்றி வரும், தனது சபையின் உறுப்பினர்களான இயேசு சபை அருள்பணியாளர்களைச் சந்தித்து அவர்களுடன் தனக்குள்ள உறவைப் புதுப்பித்துக் கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயர் பேரவையினருடன் திருத்தந்தை
பிப்ரவரி 3 வெள்ளிக்கிழமை அமைதிக்கான திருத்தூதுப் பயணத்தின் நான்காம் நாளினைத் தொடங்கிய திருத்தந்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தூதரகத்தில் உள்ளூர் நேரம் காலை 6.30 மணிக்கு தனியாக திருப்பலி நிறைவேற்றினார். அதன்பின் காலை 7.45 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் நண்பகல் 12.15 மணிக்கு கின்சாசா திருப்பீடத்தூதரகத்தார்க்கு தன் நன்றியினைத் தெரிவித்து 200 மீட்டர் தொலைவில் உள்ள CENCO சென்றார். காங்கோவின் ஆயர் பேரவையான CENCO நாட்டின் 48 தலத்திருஅவை மாவட்டங்களின் ஆயர்களை ஒன்றிணைக்கும் இடமாகும். அதன் தற்போதைய தலைவரும் Kisangani உயர்மறைமாவட்டத்தின் ஆயருமான பேராயர் Marcel Utembi Tapa, துணைத்தலைவரும் Idiofa ஆயருமான José Moko Ekanga, பொதுச் செயலர் அருள்பணியாளார் Donatien N’shole. ஆகியோரையும் சந்தித்து மகிழ்ந்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடனான CENCO ஆயர்களின் சந்திப்பு உள்ளூர் நேரம் காலை 8.30மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.00 மணிக்கு நடந்தது. பேரவையின் தலைவர் திருத்தந்தையை வரவேற்று வாழ்த்தியதற்குப் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவ்வாயர் பேரவைக்கு தன் உரையினை நிகழ்த்தினார்...இறுதி செபம் பாடல்கள் மற்றும் திருத்தந்தையின் இறுதி செபம் மற்றும் ஆசீருடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்