உள்ளங்கையின் விரல்களைப் போல ஒன்றித்திருங்கள் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமணிக்கம் - வத்திக்கான்
பிப்ரவரி 02, இவ்வியாழனன்று, காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகர் கின்ஷாசாவிலுள்ள மறைசாட்சியர் அரங்கில் இளையோர் மற்றும் மறைக்கல்வியாளர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.
அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே, இப்போது சிறிது நேரம், என்னைப் பார்க்காமல் உங்கள் கைகளைப் பாருங்கள். உங்கள் கைகளின் உள்ளங்கைகளைத் திறந்து அவற்றை உற்றுநோக்குங்கள். அன்பான நண்பர்களே, வாழ்வின் கொடையையும், சமுதாயத்தின் எதிர்காலத்தையும், இந்தப் பெரிய நாட்டின் எதிர்காலத்தையும் கடவுள் உங்கள் கைகளில் கொடுத்துள்ளார்.
உங்கள் கைகள் அனைத்தும் ஒரே மாதிரியாகத் தெரிகின்றன, ஆனால் அவை வேறுபட்டுள்ளன. உங்களைப் போன்ற கைகள் யாருக்கும் இல்லை. இது, நீங்கள் ஒரு தனித்துவமான, மீண்டும் உருவாக்க முடியாத மற்றும் ஒப்பிடமுடியாத கருவூலம் என்பதற்கான அறிகுறியாகும். வரலாற்றில் உங்கள் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. இப்போது, உங்கள் கைகளிலுள்ள ஐந்து விரல்களைக் கொண்டே உங்களின் எதிர்காலத்திற்கான வழிமுறைகளை எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.
முதலாவது பெருவிரல்
பெருவிரல்கள் நமது இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றது. இது நமது வாழ்வின் உந்து சக்தியான செபத்தை அடையாளப்படுத்துகிறது. செபம் என்பது முதன்மையான மற்றும் எதிர்காலத்திற்கான அடிப்படை மூலப்பொருள். ஏனென்றால், செபம் இல்லாமல் நம்மால் வெகுதூரம் பயணிக்க முடியாது. ஒரு மரம் எவ்வளவுதான் பெரியதாகப் பரந்துவிரிந்திருந்தாலும், அது தானாக நிலைநிற்க முடியாது. அதனை நிலைநிறுத்துவதற்கு வலமையான வேர்கள் மிகவும் அவசியம். அதனால்தான் செபத்திலும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்பதிலும் நம்பிக்கை என்னும் வேர்கள் ஆழமாக வேரூன்றப்பட வேண்டும். செபம் என்பது நாளுக்கு நாள் ஆழமாக வளரவும், நீடித்த பலனைத் தரவும், நாம் சுவாசிக்கும் மாசுபட்ட காற்றை உயிர் கொடுக்கும் ஆக்ஸிஜனாக மாற்றவும் உதவுகிறது.
இரண்டாவது ஆள்காட்டிவிரல்
பிறவற்றை குறித்துக் காட்டுவதற்கு நாம் ஆள்காட்டிவிரலைப் பயன்படுத்துகிறோம். இது குழுமத்தை அடையாளப்படுத்துகிறது. அன்பான நண்பர்களே, உங்களையே நீங்கள் தனிமைப்படுத்திக்கொண்டு உங்கள் இளமையை அழித்துக்கொள்ளாதீர்கள். இதைக்குறித்து நீங்கள் சிந்தித்தால் உண்மையில் மகிழ்ச்சி கொள்வீர்கள். காரணம் குழுமம்தான் நம்மைக் குறித்து நல்லெண்ணம் கொள்ளவும், நமது உண்மையான அழைப்புக்குப் பிரமாணிக்கமாக இருக்கவும் நல்வழியாக அமைகிறது. பிறரைக் குறித்துக் காட்டும்போது, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம் அவ்வாறு செய்யும்போது பிறரை வேறுபடுத்தி ஒதுக்கிவைக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் உங்களுக்கான குழுவில் இனணந்து கொண்டு, எனது சொந்த குழுவில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை உணரும்போதும் கவனமாக இருங்கள். ஏனென்றால், இது குழும வாழ்விலிருந்து நம்மை அது அந்நியப்படுத்திவிடும் ஆபத்து உள்ளது.
மூன்றாவது நடுவிரல்
எதிர்காலத்திற்கான நமது பெரிய எதிர்பார்ப்புகளுக்குத் தகுதியான முக்கிய மூலப்பொருளாக விளங்குவது இந்த நடுவிரல். இது நேர்மையை அடையாளப்படுத்துகிறது. ஒரு கிறிஸ்தவராக இருப்பது என்பது கிறிஸ்துவுக்கு சான்று பகர்வதாகும். இதைச் செய்வதற்கான முதல் வழி, கிறிஸ்து விரும்பியபடி நல்லொழுக்கத்துடன் வாழ்வதாகும். ஊழலின் வலையில் சிக்கிக் கொள்ளாமல் நேரிய மனதுடன் வாழவேண்டும் என்பதே இதன் பொருள்.
நேர்மை இல்லாமல், நாம் இயேசுவின் சீடர்கள் மற்றும் சாட்சிகளாக விளங்கிட முடியாது. பல நேரங்களில் நாம் கடவுளை விட நமது அகங்காரம் காட்டும் வழியில் பலவற்றை வணங்கும் உருவ வழிபாட்டாளர்களாக மாறிவிடுகிறோம். மற்றவர்க்குக்குப் பணியாற்றுவதைவிட அவர்களை பயன்படுத்துபவர்களாக ஆகிவிடுகிறோம்.
நான்காவது மோதிரவிரல்
வாழ்க்கையில் மிகப்பெரிய நிறைவைத் தரும் இலக்குகள், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு, பலவீனம், சோர்வு மற்றும் துன்பங்களை உள்ளடக்கியது என்பதை மோதிரவிரல் நமக்கு நினைவூட்டுகிறது. இவ்விரல் மன்னிப்பை நமக்கு அடையாளப்படுத்துகிறது.
ஐந்தாவதாக சுண்டுவிரல்
சுண்டுவிரல் பிறரன்பு பணியை அடையாளப்படுத்துகிறது. நான் மிகவும் சிறியவன், என்னால் என்ன செய்ய முடியும், நான் எவ்வளவு செய்தாலும் அது கடலில் ஒரு நீர்த்துளி போன்றதுதான் என்று நீங்கள் கூறலாம். ஆனால், சிறுதுளி பெருவெள்ளம்போல இதுதான் நம்மை முழுவதுமாக கடவுளை நோக்கி ஈர்க்கிறது. பிறரன்பு பணியாற்றுபவர்கள் தங்களையே சிரியவர்களாக்கிக் கொள்கிறார்கள். பூமியில் விழும் சிறிய விதை பெரிய மரமாகி கனிகளைத் தருவதுபோல் அவர்களின் நற்செயல்கள் அமைகின்றன.
ஆகவே, நன்மையைத் தொடரவும், நன்மையில் முதலீடு செய்யவும், நற்செய்தியை அறிவிக்கவும், உற்சாகமானவர்களாகவும் தகுதியுடையவர்களாகவும் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும், நீண்ட கால திட்டங்களைத் தொடங்குவதிலும் அச்சம் கொள்ளாதிருங்கள். அநீதிகளுக்கு எதிராக உங்கள் குரல்களை எழுப்ப பயப்பட வேண்டாம், ஏனென்றால் உங்கள் கரங்களில் எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலமும் உள்ளது.
இறுதியாக உங்களுக்கு ஒன்று கூற விரும்புகின்றேன். எப்போதும் மனம் தளராதீர்கள். இயேசு உங்களை நம்புகிறார், அவர் உங்களை ஒருபோதும் தனிமையில் விடமாட்டார். இன்று நீங்கள் உணரும் மகிழ்ச்சியை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். அதை ஒருபோதும் மங்கவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களை முடங்கிப்போகச் செய்யும் அவநம்பிக்கையை விட்டுவிடுங்கள். ஆப்பிரிக்கா நாடு சகோதரத்துவம், அமைதி, மற்றும் சுதந்திரத்தின் தோட்டமாகட்டும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்