தேடுதல்

திருத்தந்தையின் ஹங்கேரி திருப்பயண இலச்சினை திருத்தந்தையின் ஹங்கேரி திருப்பயண இலச்சினை 

திருத்தந்தையின் ஹங்கேரி திருப்பயண இலச்சினை, வெளியீடு

ஹங்கேரி நாட்டின் அரசு மற்றும் திருஅவை அதிகாரிகளின் அழைப்பை ஏற்று இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அந்நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகருக்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 41-வது திருத்தூதுப் பயணத்திற்குக் 'கிறிஸ்துவே நமது எதிர்காலம்' என்ற தலைப்பில் விருதுவாக்கும் அதன் இலட்சினையும் வெளியிடப்பட்டுள்ளது. 

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அந்நாட்டு தலைநகரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வார் என பிப்ரவரி 27, இத்திங்களன்று, திருப்பீடத்தின் தகவல் தொடர்பு இயக்குநர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த விருதுவாக்கும் இலட்சினையும் வெளியிடப்பட்டுள்ளது.

இலட்சினையின் மையப் பகுதி, டானூப் ஆற்றின் மீதுள்ள மிகப் பழமையான ஹங்கேரிய பாலமான புடாபெஸ்ட் சங்கிலிப் பாலத்தைக் குறிக்கிறது. தலைநகர் மற்றும் தேசத்தின் சின்னமான இது முதலில் புடா மற்றும் பெஸ்ட் நகரங்களை இணைக்க கட்டப்பட்டது. மக்களிடையே உறவு பாலங்களைக் கட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி திருத்தந்தையால் அடிக்கடி குறிப்பிடப்படும் கருத்தை இது குறிப்பிடுவதாக உள்ளது.

திருப்பீடத்தின் கொடியான மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களும், ஹங்கேரியின் தேசிய கொடியான சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களும் பாலத்தின் இரண்டு தூண்களில் சந்திக்கின்றன. இந்த இலட்சினையானது, நற்கருணை மற்றும் கிறிஸ்துவால் மீட்கப்பட்ட உலகம் இரண்டையும் குறிக்கும் ஒரு வட்டத்தால் அதன் எல்லையாக அமைந்துள்ளது.

வட்டத்தின் இடது பக்கத்தில், புடாபெஸ்டில்  2021, செப்டம்பர் 12 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய உரையை நினைவுகூரும் ஒரு சிலுவை உள்ளது,  இந்தச் சிலுவை கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே ஒரு பாலமாக மாறும் என்ற நம்பிக்கையை தரும் அடையாளமாக அமைந்துள்ளது.

வட்டத்தின் வலதுபுறத்தில், "கிறிஸ்து எங்கள் எதிர்காலம்" என்ற பொன்மொழியுடன், "ஹங்கேரியில் திருத்தந்தை பிரான்சிஸ், 28-30, ஏப்ரல் 2023" என்ற வார்த்தைகளுடன் உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2023, 13:11