நல்ல சமாரியரின் வாழ்வு நமதாகட்டும் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பகிர்தலின் அடையாளமாய் விளங்கும் இரக்கத்தைத் துறக்காதீர்கள் என்றும், இது ஒருவரின் சொந்த உடலில் மற்றவரின் துயரத்தை உணர்ந்துகொள்ளும் வழியாக அமைகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 9, இவ்வியாழனன்று, பணியின்போது ஏற்படும் விபத்துகளுக்கு எதிரான காப்பீட்டுக்கான தேசிய நிறுவனத்தின் (INAIL) மேலாளர்கள் மற்றும் பணியாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லூக்கா நற்செய்தியில் இயேசு எடுத்துக்காட்டும் நல்ல சமாரியர் உவமையை எப்போதும் மனதில் நிறுத்துங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.
இன்று உங்கள் பிரசன்னம், பணியின் அர்த்தத்தைப் பற்றியும், வெவ்வேறு வரலாற்றுச் சூழல்களில், நல்ல சமாரியரின் உவமையை எவ்வாறு இணைப்பது என்பது பற்றியும் நமக்குச் சிந்திக்க உதவுகிறது என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணியின் தரத்தை உயர்த்துவது, சமூக மதிப்பீடுகள், உடனிருப்பு ஆகிய மூன்று தலைப்புகளின்கீழ் தனது சிந்தனைகளைப் அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
பணியின் தரத்தை உயர்த்துவது
இடங்கள் மற்றும் பயணத்திற்கு, சம்மந்தப்பட்ட நபரின் மையத்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்றால் பணியின் தரத்தை உயர்த்த வேண்டியது அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகிறது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விதத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்வது அவசியம் என்றும், அவற்றை ஒரு சுமையாகவோ அல்லது தேவையற்ற ஒரு செயலாகவோ பார்க்க முடியாது என்றும் கூறினார்.
சமூக மதிப்பீடுகள்
ஒரு நபர் உதவிக்காகக் கூக்குரலிடும்போதும், துயரத்தில் இருக்கும்போதும், சமூகத்தின் சாலையோரத்தில் கைவிடப்படும் ஆபத்தில் இருக்கும்போதும், உங்களைப் போன்ற நிறுவனங்களின் உடனடி மற்றும் பயனுள்ள அர்ப்பணிப்பு, நற்செய்தி உவமையின் செயல்களை நடைமுறைக்குக் கொண்டுவருகிறது என்று கூறிய திருத்தந்தை பிரானசிஸ் அவர்கள், இந்நிலையில் உற்றுநோக்குவது, இரக்கம் காட்டுவது, நெருக்கமாக இருப்பது, காயங்களைக் கட்டுவது, அவர்களைக் கவனித்துக் கொள்வதில் பொறுப்பேற்பது ஆகியவை முக்கியத்துவம் பெறவேண்டும் என்றும் எடுத்துக்காட்டினார்.
உடனிருப்பு
ஒருவர் எந்த அளவுக்குத் தான் பலவீனமானவர் என்று உணருகிறாரோ, அந்தளவுக்கு அவர் நெருக்கத்திற்குத் தகுதியானவர் என்றும், இந்த வழியில், நமது மனிதநேயம் என்ற பொதுவான பண்புக்கு எதிரான தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு, அது முழுமையான அளவில் வெளிப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்