தேடுதல்

மன்னிப்பு வேண்டும் நம்பிக்கையாளர் மன்னிப்பு வேண்டும் நம்பிக்கையாளர்   (Vatican Media)

பரிவிரக்கம் என்பது திருஅவையின் பணி :திருத்தந்தை பிரான்சிஸ்

ஒப்புரவு வழங்கும் ஒவ்வொரு திருப்பணியாளரும் பலமணி நேரங்கள் இந்தப் பணியில் செலவிடத் தயாராக இருக்கவேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம - வத்திக்கான்

இறைஇரக்கப் பணி என்பது, திருஅவையின் மறைப்பணியின் செயல்பாடுகள் மற்றும் நற்செய்தி அறிவிப்புப் பணியுடன் ஒன்றிணைந்து செல்கிறது என்றும், இவற்றின் வழியாக இயேசு நமக்குக் காட்டிய இறைத்தந்தையின் முகம் நம்மில் ஒளிர்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 23, இவ்வியாழனன்று, அப்போஸ்தலிக்க ஒப்புரவு அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒப்புரவுக் குறித்த 33-வது பாடத்தில் பங்கேற்க வந்த பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த ஒப்புரவுத் திருபாணியாளர்களை உருவாக்கி வருகின்றது என்றும் உரைத்தார்.

எவ்வித வேறுபாடுமின்றி அனைவரையும் வரவேற்பது, கிறிஸ்துவின் இதயத்தைப் போல் காயப்பட்டுள்ள இதயங்களின் குரல்களுக்குச் செவிமடுப்பது, பாவங்களை ஏற்பது, கடவுளின் மன்னிப்பை தாராளமாக வழங்குவது, அவர்களுக்காக இறைவேண்டல் செய்வது என, ஓர் ஒப்புரவுத் திருப்பணியாளரின் செயல்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் விளக்கினார் திருத்தந்தை. 

விபசாரத்தில் பிடிபட்ட பெண்ண்ணிடம் (காண்க யோவா 8:1-11) அமைதியான அணுகுமுறையைக் கொண்டு அவரை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றினார் இயேசு. அவ்வாறே, பாவமணிப்புத் தொட்டியில் அமரும் ஒவ்வொரு ஒப்புரவுத் திருப்பணியாளரும் தன்னிடம் ஒப்புரவுப் பெறுவதற்கு வரும் நம்பிக்கையாளர்களிடம் இத்தகைய அணுகுமுறையைக் கொண்டு இறைவனின் மன்னிப்பை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

ஒவ்வொரு பேராலயத்திலும் இந்த ஒப்புரவு அருளடையாளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அது சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும், ஒப்புரவு வழங்கும் ஒவ்வொரு திருப்பணியாளரும் பலமணி நேரங்கள் இந்தப் பணியில் செலவிடத் தயாராக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

பரிவிரக்கம் என்பது திருஅவையின் பணி என்றால், இந்த "அன்பின் சந்திப்பிற்கு" நம்பிக்கையாளர்களின் அணுகுமுறையை முடிந்தவரை எளிதாக்க வேண்டும் என்றும், குழந்தைகளின் முதல் பாவ அறிக்கையில் அவர்களின் குற்றங்களை உணரச் செய்வதில் ஒப்புரவுத் திருப்பணியாளர் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2023, 14:13