மார்ச் மாதத்திற்கான திருத்தந்தையின் செபக் கருத்து

அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களைக் கேட்கவும், உளவியல் ரீதியாக அவர்களை ஆதரிக்கவும், பாதுகாக்கவும் திருஅவை எப்போதும் தயாராக இருக்கவேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருஅவையின் உறுப்பினர்கள் செய்த அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக செபிப்போம் என்றும், அவர்களின் வலி மற்றும் துன்பங்களுக்கு திருஅவையில் ஒரு உறுதியான பதிலை அவர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 02, இவ்வியாழனன்று வெளியிட்ட தனது மார்ச் மாத செபக் கருத்தில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அத்துமீறல்களுக்கு காரணமான அனைவரும், குறிப்பாகத் திருஅவை உறுப்பினர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்பது மட்டும் போதாது, அதன் காயத்தை ஆற்றுவதன் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர்கள் அனுபவித்த கொடூரங்களை சரிசெய்வதற்கும், அவை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் உறுதியான நடவடிக்கைகளும், அவர்களின் கேள்விகளுக்கு சரியான பதில்களும் இருந்தால் மட்டுமே அவர்களின் வலியும் அவர்களது உளவியல் காயங்களும் குணமடைய தொடங்கும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

திருஅவை எந்த வகையான அத்துமீறலின் துயரத்தையும் மறைக்க முயற்சிக்க முடியாது என்றும் குடும்பங்களிலோ, குழுக்களிலோ அல்லது வேறு வகையான நிறுவனங்களிலோ  அத்துமீறல்  நடக்கும்போது அதனை வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரச்சனையைத் தீர்ப்பதிலும், சமூகத்திலும் குடும்பங்களிலும் அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதிலும் திருஅவை ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களைக் கேட்கவும், உளவியல் ரீதியாக அவர்களை ஆதரிக்கவும், பாதுகாக்கவும் திருஅவை எப்போதும் தயாராக இருக்க  வேண்டும் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்வோம் என்றும் விண்ணப்பித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2023, 12:49