புனித அல்போன்சின் எண்ணங்களைக் கொண்டிருங்கள் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம்
இறைவனே வரலாற்றின் முடிவு மற்றும் கிறிஸ்துவில் புதுப்பிக்கப்பட்ட மனித இனம், கடவுளின் குடும்பமாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளது என்றும், இதுவே நம்து பணியின் குறிக்கோளாக அமைந்துள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 23, இவ்வியாழனன்று, புனித அல்போன்ஸ் : ஏழைகளின் மேய்ப்பர் மற்றும் திருஅவையின் மறைவல்லுநர் என்ற மையக்கருத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கும் பாப்பிறை Alphonsian கல்விக்கழகத்தின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை
கடவுளின் அன்பே நமது வழிகாட்டி, நமது தனிப்பட்ட தேர்வுகள் மற்றும் நமது இருத்தலியல் பயணத்தின் வழிகாட்டி என்பதுதான் ஒவ்வொரு இறையியல் பாடத்தின் அடித்தளமாக அமைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித அல்போன்ஸ் வாழ்விலிருந்து பல்வேறு இறையியல் சிந்தனைகளையும், அவரது வாழ்வியல் நெறிமுறைகளையும் எடுத்துக்காட்டி அவர்களுக்கு விளக்கினார்.
நாம் வாழும் சமுதாயத்தின் சிக்கலான கட்டமைப்பிற்குள் மனத்தாழ்மையுடனும், அறிவார்ந்த முறையிலும் நாம் நுழைய முயல்வோம் என்றும், அதன் இயக்கவியலை நன்கு அறிந்துகொள்வதற்கும், நம் காலத்தின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த வழியில் போதுமான முதிர்ச்சிக்கான பாதைகளை முன்மொழிவதற்கும் முயற்சிப்போம் என்றும் எடுத்துக்காட்டினார்.
புனித அல்போன்சின் பணிக்கு ஏற்ப, அவரின் எண்ணங்களையும், நோக்கங்களையும் பிரதிபலிப்பதன் வழியாக உங்கள் கலந்துரையாடலைத் தொடங்கியுள்ளீர்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய உலகில், நம் சகோதரர் சகோதரிகளின் உண்மைத் துயரங்களை அறிந்துகொண்டால் மட்டுமே நலமான பணிகளை வழங்கி நற்செய்திக்குச் சான்று பகர்ந்திட முடியும் என்றும் எடுத்துரைத்தார்.
மேலும், சுற்றுச்சூழல் நெருக்கடி, சுற்றுச்சூழல் மாற்றம், போர், புதிய மாற்றங்களை உருவாக்கும் அளவிற்கு மக்களின் வாழ்க்கையை சீரமைக்கும் திறன் கொண்ட நிதி அமைப்பு, மக்களுக்கு இடையே உடன்பிறந்த உறவை கட்டியெழுப்புவதற்கான சவால் ஆகியவை குறித்த ஆராய்ச்சி மற்றும் உரையாடலுக்கு உங்களின் இந்தக் கலந்துரையாடல் உங்களைத் தூண்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்