தேடுதல்

நிகழ்வில் பங்கேற்றோர் நிகழ்வில் பங்கேற்றோர்  (AFP or licensors)

ஏதேன்ஸ் அருங்காட்சியகத்திற்கு சிற்பத்துண்டுகள் நன்கொடை

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சைப்ரஸ் மற்றும் கிரேக்கத்திற்குத் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கிரேக்க நாட்டு முதுபெரும்தந்தை இரண்டாம் எரோணிமுஸ் அவர்களுக்கு பார்த்தீனன் ஆலய சிற்பப்பகுதிகளை நன்கொடையாக வழங்க விரும்பினார் .

மெரினா ராஜ் – வத்திக்கான்

வத்திக்கான் அருங்காட்சியகங்களில் 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்ட பழங்கால பெருமை மிக்க கிரேக்க பார்த்தீனன் ஆலய சிற்பத்தின் பகுதிகளை மீண்டும் ஏதென்ஸிற்கு நன்கொடையாக கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தையும் ஏதேன்ஸின் பேராயருமான இரண்டாம் எரோணிமுஸ் அவர்களுக்கு வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 24, வெள்ளிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட பார்த்தீனன் கிரேக்க ஆலய சிற்பத்தின் பகுதிகள் ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிகழ்விற்குத் தலைமை தாங்கிய கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை இரண்டாம் எரோணிமுஸ் அவர்கள், சிற்பத்துண்டுகளை அக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தில் உள்ள பார்த்தீனான் கட்டிடக்கலை சிற்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைத்ததற்காகத் தனது மிகுந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து மகிழ்ந்துள்ளார்.

மேலும், திருத்தந்தையின் இந்த முன்முயற்சியானது பல நிலைகளில் நேர்மறையான விளைவுகளைக் கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும், கிறிஸ்தவர்களாகிய நம்மிடையே இருக்கும் உடன்பிறந்தஉறவால் உருவாக்கப்பட்ட பலன்களின் உறுதியைக் காட்டுகிறது என்றும், உண்மை, அன்பு, பரஸ்பர மரியாதை, புரிதல் ஆகியவற்றால் வழிநடத்தப்படுகிறது என்றும் கூறியுள்ள முதுபெரும்தந்தை அவர்கள் நல்லெண்ணமும், அவற்றைத் தீர்க்கும் மனப்பூர்வமான விருப்பமும் இருந்தால், நமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் சாத்தியமாகும் என்பதை இச்செயல் வெளிப்படுத்துகின்றது என்றும் கூறியுள்ளார்.

சிற்பத்துண்டுகள்
சிற்பத்துண்டுகள்

உலகின் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாகத் திகழும் பார்த்தீனன் ஆலய சிற்பங்களின் பகுதிகளை மீண்டும் ஒன்றிணைப்பதன் வழியாக, "உண்மை மீட்டெடுக்கப்பட்டது" கடந்த கால காயங்கள் குணமடைகின்றன என்பதையும் நினைவு கூர்ந்த முதுபெரும்தந்தை அவர்கள் திருத்தந்தையின் இச்செயல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சைப்ரஸ் மற்றும் கிரேக்கத்திற்குத் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏதென்ஸின் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் பேராயரான கிரேக்க நாட்டு முதுபெரும்தந்தை இரண்டாம் எரோணிமுஸ் அவர்களுக்குப் பார்த்தீனன் ஆலய சிற்பப்பகுதிகளை நன்கொடையாக வழங்க விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரேக்க நாட்டிற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Jan Romeo Pawłowski, கிறிஸ்தவ ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கான திருப்பீடத்துறையின் செயலரான ஆயர் Brian Farrell, துணைச்செயலர் பேரருள்திரு. Andrea Palmieri, வத்திக்கான் அருங்காட்சியத்தின் இயக்குனர் பேராசிரியர் Barbara Jatta ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கிரேக்க மக்களுடன் நட்பு மற்றும் ஒற்றுமையின் அடையாளம், ஒரே திருஅவை, கலாச்சாரம் மற்றும் சமூகத்திற்கான செயல்பாடு என்றும் கூறியுள்ள ஆயர் Brian Farrell அவர்கள், நமது தலத்திருஅவைகளுக்கிடையேயான நட்பு மற்றும் ஆன்மீக நெருக்கத்தை இச்செயல் உறுதிப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் நம்முடைய பல்வேறு கலாச்சாரங்களும், கலைகளும் எப்போதும் மக்களிடையே உரையாடலுக்கும் சந்திப்பிற்கும் ஒரு சிறப்பு வழிமுறையாக இருக்கும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாட்டை நல்லெண்ணம் கொண்ட மக்கள் இந்நிகழ்வில் காணலாம் என்றும், நமது வரலாறுகளின் அற்புதமான பன்முகத்தன்மை, சாதனைகள், அமைதி, உடன்பிறந்த உறவிற்கான உலகளாவிய விருப்பம், போன்றவற்றை வெளிப்படுத்துகின்றது என்றும், அமைதிக்கு வழிவகுத்து புரிதலையும் ஒற்றுமையையும் வளர்த்து ஒருவரையொருவர் வளப்படுத்த வழிவகை செய்கின்றது என்றும் கூறியுள்ளார் ஆயர் Brian Farrell.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2023, 13:23