தேடுதல்

 "Progetto Policoro" அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் "Progetto Policoro" அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

தலைவர்கள் போலன்றி தந்தையர்களாகச் செயல்பட....

அதிகாரத்தை ஒரு பணியாக அல்லாமல் ஆதிக்கமாகச் செயல்படுத்துவதும், ஏழைகளை துன்புறுத்தி, பூமியின் வளங்களைச் சுரண்டி, போருடன் மோதலை எதிர்கொள்வதும் உண்மையான சமூக அரசியல் அல்ல. - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

எளிய மக்கள் அணுகக்கூடியவர்களாக அரசியல் தலைவர்கள் இருக்கவேண்டும் என்றும், தன் மக்களின் நலனுக்காக தலைவராக அல்லாமல் தந்தையாக செயல்பட்ட விவிலியத்தில் வரும் யாக்கோபின் மகன் யோசேப்பு போல ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 18 சனிக்கிழமை இத்தாலிய ஆயர் மாநாட்டின் ("Progetto Policoro") பொலிகோரோ திட்டத்தில் பங்கேற்கும் இளையோரை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2023 ஆம் ஆண்டின் கருப்பொருளாக அமைதியைத் தேர்ந்தெடுத்து செயல்படும் அவ்விளையோரிடம் நிகழ்காலத்திற்கு மிகவும் தேவையானது அமைதி என்றும், அரசியல் தோல்வியாக  எழும் போர்கள் பிறரை எதிரியாகக் கருதும் சூழலை உருவாக்குகின்றன என்றும் எடுத்துரைத்தார்.

ஆயுதப் போட்டியின் அழிவுச்செயல், மோதலுக்குத் தீர்வுகாண போரின் பயன்பாடு போன்ற கருத்தை போர் நமக்குத் தருகின்றது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசியல் தலைவர்கள் எளிய மக்கள் அணுகக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்றும், அலுவலகக் கட்டிடங்களுக்குள் முடங்கிக் கிடக்கும் அரசியலாக அவர்கள் பணி இருக்கக் கூடாது என்றும் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ்

அதிகாரத்தை ஒரு பணியாக அல்லாமல் ஆதிக்கமாகச் செயல்படுத்துவதும், ஏழைகளைத் துன்புறுத்தி, பூமியின் வளங்களைச் சுரண்டி, போருடன் மோதலை எதிர்கொள்வது உண்மையான சமூக அரசியல் அல்ல என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விவிலியத்தில் வரும் ஆகாபு அரசன் போல எளிய மக்களைத் துன்புறுத்தி மகிழும் மோசமான அரசியலை கடைபிடிக்கக் கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யாக்கோபின் மகன் யோசேப்பு, பொது நன்மைக்காக தானியக்களஞ்சியங்களை உருவாக்கி தலைவராக அல்லாமல் தந்தையாக செயல்பட்டது போல ஒவ்வொருவரும் செயல்படக் கேட்டுக்கொண்டார்.

அரசியல் தேர்தலில் ஆதரவையும் தனிப்பட்ட வெற்றியையும் பெற முயற்சிப்பதில் அல்ல மாறாக மக்களோடு இணைந்து செயல்படுவது, தொழில்முனைவோரை உருவாக்குவது, அவர்களின் கனவுகளை செழிக்கச் செய்வது, சமூகத்தின் அழகை மக்கள் உணர வைப்பது போன்றவற்றில் மகிழ்வடையவேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதன் வழியாக மக்களை அதிகமாகப் பங்கேற்கச் செய்து நாட்டின் காயங்களுக்கு மருந்தாக செயல்பட வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் அவரவர் பங்களிப்பை வழங்கவும், பங்கேற்கவும், உடனிருப்பவர்களையும் அவ்வாறு செய்ய அழைக்கவும், நோக்கம் மற்றும் பணியார்வம் கொண்டு எப்போதும் செயல்படவும் கேட்டுகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2023, 12:28