சீனக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் சீனக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்  

ஷாங்காய் மறைமாவட்டத்திற்கு மாற்றப்பட்ட ஆயர் Joseph Shen Bin

ஷாங்காய் மறைமாவட்டத்தில் ஏறத்தாழ 1,50,000 கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவர்கள் 40 பங்குத்தளங்களைச் சேர்ந்தவர்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம்

சீன ஆயர்  Joseph Shen Bin அவர்கள் ஹைமென் மறைமாவட்டத்திலிருந்து ஷாங்காய் மறைமாவட்டத்திற்கு மாற்றப்பட்டது குறித்துத் திருப்பீடம் ஊடகங்களிலிருந்து அறிந்துகொண்டதாகத்  திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 4, இச்செவ்வாய் காலை, சீனாவின் ஷாங்காய் மறைமாவட்டத்தில் ஆயர்  Shen Bin பொறுப்பேற்றுக் கொண்டதாகவும், ஆயரை இடமாற்றம் செய்வதற்கான சீன அதிகாரிகளின் முடிவு குறித்து சில நாட்களுக்கு முன்பு திருப்பீடத்திற்குத் தெரிவிக்கப்பட்டது என்றும்,  இச்செய்தியை அதேநாளில் ஊடகங்களிலிருந்து தெரிந்துகொண்டதாகவும் கூறிய திருப்பீடச் செய்தி தொடர்பகத்தின் இயக்குனர் Matteo Bruni, இதுகுறித்து  தற்போதைக்குத் தான் எதுவும் கூற விரும்பவில்லை என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஹைமென் மறைமாவட்டத்தின் ஆயர் Shen Bin, ஷாங்காய் மறைமாவட்டத்தை வழிநடத்துவதற்காக சீனாவின் ஆயர் பேரவையால் நியமிக்கப்பட்டதாகவும், ஆயர் Shen Bin-னும் சீன ஆயர் பேரவையின் தலைவராக உள்ளார் என்று ஆசிய செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளது. 

ஷாங்காய் மறைமாவட்டத்திற்கு 10 ஆண்டுகளாக ஆயர்  நியமிக்கப்படாத நிலையில் அதன் ஆயராக ஷென் பின் பதவியேற்றது வத்திக்கானின் அனுமதியின்றி நடந்ததாகவும்,  ஆயர்கள் நியமனம் தொடர்பான திருப்பீடம் -சீனா ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாகவும் ஆசிய செய்தி நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

ஆயர் ஷென் பின் 2010-ஆம் ஆண்டு முதல் திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட ஹைமெனின் ஆயராக இருந்தார். ஷாங்காய் மறைமாவட்டத்தில் ஏறத்தாழ 1,50,000 கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவர்கள் 40 பங்குத்தளங்களைச் சேர்ந்தவர்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2023, 13:40