தேடுதல்

ஹங்கேரியில் திருத்தந்தை - முதல் நாள் பயண நிகழ்வுகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 29 கிமீ பயணம் செய்து உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்தை உள்ளூர் நேரம் காலை 8 மணிக்கு வந்தடைந்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை தனது 41ஆவது திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலைச் சுற்றி தங்குமிடமின்றி நடைபாதைகளில் வசிக்கும் மக்கள் 15 பேரைச் சந்தித்தார். அவர்களுடன் திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski உடனிருந்தார்.

ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து உரோம் உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் முற்பகல் 11.00 மணிக்கு தனி வாகனத்தில் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 29 கிமீ பயணம் செய்து உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்தை உள்ளூர் நேரம் காலை 8 மணிக்கு வந்தடைந்தார். பியுமிச்சினோ பகுதியைத் தன்னுள் கொண்டிருக்கும் Porto-Santa Rufina மறைமாவட்ட ஆயர் Gianrico Ruzza அவர்கள் விமான நிலையம் வந்திருந்து திருத்தந்தைக்குத் தன் வாழ்த்துக்களை வழங்கினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அதன்பின், A320 என்னும் இத்தாலிய விமானத்தில் ஹங்கேரியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கினார். 990 கிமீ தூரத்தை 1மணி 50 நிமிடங்களில் கடந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் ஹங்கேரிக்கு வான்வழியாக பயணம் செய்யும் போது கடக்கும் நாடுகளான இத்தாலி, குரோவாசியா, ஹங்கேரி ஆகியவற்றின் அரசுத்தலைவர்களுக்கு தன் வாழ்த்துச்செய்தியினையும் அனுப்பியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 April 2023, 11:37