மனிதர்களுக்குள் உறவு பாலங்களை அமைப்போம் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஏப்ரல் 28, இவ்வெள்ளியன்று ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.
அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே, உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன். என்னைக் குறித்துக் கூறிய உங்களின் கனிவான வார்த்தைகளுக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்.
‘நமது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் அடையாளமாக அமைந்துள்ள டானூப் நதியால் நாம் அன்புடன் அரவணைக்கப்படுகிறோம்’ என்று கூறியுள்ளார் உங்களின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான A. JÓZSEF. இதன் அடிப்படையில் புடாபெஸ்ட் நகரையே எனது தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, வரலாற்றின் நகரம், பாலங்களின் நகரம் மற்றும் புனிதர்களின் நகரம் என்ற மூன்று தலைப்புகளின் கீழ் சில சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
01. புடாபெஸ்ட் வரலாற்றின் நகரம்
முதலாவதாக, வரலாற்றின் காலம் என்ற தலைப்பில் சிந்திப்போம். அமைதியின் காலத்தில் பிறந்திருந்தாலும், கடந்த காலங்களில் நிகழ்ந்த படையெடுப்புகள் மட்டுமல்ல, மாறாக, அண்மைய காலங்களில், நாத்சி மற்றும் கம்யூனிச சர்வாதிகாரங்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் மிகவும் மோசமான மோதல்களையும் அனுபவித்திருக்கிறது இந்நகரம்.
1956-இல் நடந்த சம்பவங்களை நம்மால் எப்படி மறக்க முடியும்? இரண்டாம் உலகப் போரின் போது, அதன் பல்லாயிரக்கணக்கான மக்கள் நாடு கடத்தப்பட்டனர், யூத வம்சாவளியைச் சேர்ந்த மீதமுள்ள மக்கள் தனிப்பட்ட பகுதிகளில் அடைக்கப்பட்டு அதிகளவில் படுகொலைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஆயினும்கூட, அந்த நாள்களில் இந்நகரை மீண்டும் கட்டியெழுப்புவதில் பல நேர்மையாளர்களின் அர்ப்பணம் நிறைந்த பணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக, திருப்பீடத் தூதர் பேராயர் Angelo Rotta அவர்களின் அர்ப்பணம் நிறைத்த பணிகளைப் பற்றி இப்போது நினைக்கிறேன். இந்நகரை மீண்டும் கட்டியெழுப்புவதில் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும், முழுமையான அர்ப்பண உணர்வால் இது சாத்தியமாயிற்று.
இதன் விளைவாக, புடாபெஸ்ட் இன்று அதிக யூத மக்கள்தொகை கொண்ட ஐரோப்பிய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும், சுதந்திரத்தின் மதிப்பை ஒப்புக் கொள்ளும் ஒரு நாடு, சர்வாதிகாரங்களுக்கு எதிரான போராட்டத்தில், இவ்வளவு பெரிய விலையை செலுத்தி, அதன் கருவூலமாகப் போற்றப்படும் மக்களாட்சி மற்றும் அமைதிக்கான கனவைப் பாதுகாப்பதில் மிகவும் விழிப்புடன் உள்ளது.
எவ்வாறாயினும், நாம் தற்போது வாழும் உலகில், சமூகத்தின் அரசியல் மற்றும் பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான உணர்வுமிக்க தேடலானது கடந்த காலத்திலிருந்தே ஏக்கமுள்ள ஒரு நினைவாகத் தொடர்கிறது. இதன் அடிப்படையில் பார்க்கின்றபோது, தனிப்பட்ட நலன்களைப் பின்தொடர்வதன் விளைவாக மட்டுமே அமைதி ஒருபோதும் வராது, ஆனால், பெருவளர்ச்சியை மையப்படுத்தி அதாவது, அனைவரின் வளர்ச்சியையும் மையப்படுத்தி செயல்படுத்தப்படும் திட்டங்களே நிலையான நீடித்த அமைதியைக் கொணர முடியும்.
இந்த வரலாற்றுத் தருணத்தில், ஐரோப்பா மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதாவது, தொலைதூரத்தில் உள்ளவர்களை ஒன்றிணைப்பது, மற்ற மக்களை வரவேற்பது மற்றும் யாரையும் நிரந்தர எதிரியாகக் கருத மறுப்பது ஆகிவற்றை செயல்படுத்துவதில் தனது பங்களிப்பைச் செய்ய அது அழைக்கப்படுகிறது.
02. புடாபெஸ்ட் பாலங்களின் நகரம்
இரண்டாவது புடாபெஸ்ட் பாலங்களின் நகரம் என்ற தலைப்பில் நாம் சிந்திப்போம். இந்நகரை மேலிருந்து பார்க்கும்போது, பல பகுதிகளை ஒன்றிணைக்கும் பாலங்களில் டானுப் அதன் தனித்துவத்தைக் காட்டுகிறது, அதன் வடிவத்தை பெரிய நதியின் வடிவத்துடன் பொருத்துகிறது. இயற்கை சூழலுடனான இந்த இணக்கம், தேசம் காட்டும் சூழலியல் மீதான பாராட்டுக்குரிய அக்கறையை கவனிக்க என்னை வழிநடத்துகிறது. பலதரப்பட்ட எதார்த்தங்களை இணைக்கும் அந்தப் பாலங்கள், ஒரே மாதிரியான ஒற்றுமையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றன.
புடாபெஸ்டில், நகரத்தை உருவாக்கும் இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குறிப்பிடத்தக்க வகைகளில் இது காணப்படுகிறது. நாடுகளுக்கிடையே உறவு பாலங்களை உருவாக்குவதற்காகக் கட்டப்பட்ட இந்த 27 பாலங்களும், ஐரோப்பாவிற்கு ஒவ்வொருவரின் தனித்துவம் குறையாமல் அனைவரின் பங்களிப்பும் தேவைப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
இதன் அடிப்படையில் கிறிஸ்தவ நம்பிக்கை ஒரு ஆதாரமாக இருக்க முடியும், என்றும், ஹங்கேரி அதன் குறிப்பிட்ட கிறிஸ்தவ ஒன்றிப்புசார் தன்மையை வளர்ப்பதன் வழியாக, பல்வேறு நாட்டவரிடையே உறவு பாலங்களைக் கட்டக்கூடியதாக செயல்பட முடியும் என்பதையும் அறிந்துகொள்கிறோம்.
சிறந்த இறைவேண்டல் தலமாகவும், உடன்பிறந்த உறவின் பாலமாகவும் விளங்கும், இந்த நாட்டின் மிகப்பெரிய ஆன்மிக நினைவுச் சின்னங்களில் ஒன்றான பன்னோன்ஹால்மாவின் புகழ்பெற்ற புனித மார்த்தீன் பெனடிக் சபை துறவு இல்லத்தின்மீது என் எண்ணங்கள் மிகுந்த அன்புடன் திரும்புகின்றன.
03. புடாபெஸ்ட் புனிதர்களின் நகரம்
மூன்றாவதாக, புடாபெஸ்ட் புனிதர்களின் நகரம் என்ற தலைப்பில் நமது சிந்தனைகளைத் தொடர்வோம். இயற்கையாகவே, ஹங்கேரியின் மன்னர் புனித முதலாம் ஸ்தேவான் பற்றி நாம் நினைக்கிறோம், அவர் ஐரோப்பாவின் கிறிஸ்தவர்கள் முழு ஒற்றுமையுடன் இருந்த காலத்தில் வாழ்ந்தார். அவரது திருவுருவம் புடா கோட்டைக்குள் இருந்து இந்நகரைப் பாதுகாக்கிறது, அதேவேளையில், தலைநகரின் மையத்தில் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பேராலயம், ஹங்கேரியின் முதுபெரும் தந்தை இல்லமான ஸ்ட்ரிகோனியோவுடன் (Esztergom) இணைந்து, நாட்டினைக் கவர்ந்திழுக்கும் ஒரு மதக் கட்டிடமாகத் திகழ்கின்றது.
ஹங்கேரிய வரலாறு தொடக்கத்திலிருந்தே புனிதத்தால் குறிக்கப்பட்டது. மன்னரின் புனிதத்தன்மை மட்டுமல்ல, அவரது மனைவி அருளாளரான Gisela மற்றும் அவரது மகன் புனித Emeric ஆகியோரின் வாழ்வும், மற்றும் முழுக் குடும்பமும் புனிதத் தன்மையின் அடையாளமாக விளங்குகின்றது, குறிப்பாக, மன்னர் புனித முதலாம் ஸ்தேவான், 'அன்பின் பயிற்சி உயர்ந்த மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்' என்று கூறுவதன் வழியாக, அவர் உண்மையான கிறிஸ்தவ உணர்வைக் காட்டுகின்றார்.
மேலும் கனிவுடன் இருங்கள், அதனால் நீங்கள் ஒருபோதும் நீதியை எதிர்க்க மாட்டீர்கள் என்று கூறுவதன் வழியாக, உண்மையையும் கனிவையும் பிரிக்கமுடியாததாக இணைக்கிறார் மன்னர் புனித முதலாம் ஸ்தேவான். இது நம்பிக்கையின் ஒரு சிறந்த போதனையாகும். கிறிஸ்தவ மதிப்புகளை இறுக்கம் மற்றும் நெருக்கமான மனப்பான்மையால் முன்மொழிய முடியாது, ஏனென்றால், கிறிஸ்துவின் உண்மை சாந்தத்தையும் கனிவையும் வலியுறுத்துகிறது.
உங்கள் மண்ணின் மகளான புனித எலிசபெத், இருபத்திநான்கு வயதில் தன் உடைமைகளை எல்லாம் துறந்து, அவற்றை ஏழைகளுக்குப் பங்கிட்டுவிட்டு இறைபதம் சேர்ந்தார். தன் நல்வாழ்வின் இறுதிவரை, நோயாளர்களுக்குத் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இன்று நற்செய்திக்குச் சிறந்ததொரு சாட்சியாக விளங்குகின்றார்.
கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள், நம்பிக்கையின் அடிப்பைடையில் நற்செய்தியால் ஈர்க்கப்பட்ட மனிதநேயத்தை வளர்ப்பதற்கும், தந்தையின் அன்பான குழந்தைகளாக நம்மை ஏற்றுக்கொண்டு சகோதரர் சகோதரிகளாக ஒருவரையொருவர் அன்புகூர்வதற்கும், ஒருவருக்கொருவர் சான்றுபகர்வதற்கும் அழைக்கப்படுகிறார்கள்.
மோதல்கள், வறுமை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றிலிருந்து விரக்தியில் தப்பி ஓடும் நமது சகோதரர் சகோதரிகளில் கிறிஸ்துவின் பிரசன்னத்தை நாம் காணும்போது, சாக்குபோக்கு சொல்லாமல் பிரச்சனைகளைத் தாமதமின்றி எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. இவற்றைத் தனிப்பட்டவிதத்தில் அல்ல, மாறாக, ஒரு சமூகமாக, ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும், ஏனென்றால், தற்போதைய சூழ்நிலையில், அதன் விளைவுகள் விரைவில் அல்லது பின்னர், நம் அனைவராலும் உணரப்படும் என்பதை நம் மனதில் கொள்வோம்.
இந்தச் சவால், குறிப்பாக, இயேசுவைப் பின்பற்றுபவர்கள் மற்றும் நற்செய்திக்குச் சான்று பகர்ந்தவர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களைப் பின்பற்ற விரும்புவோர் ஒரு பதிலிறுப்பை வழங்க அழைக்கிறது. இங்கு உங்களின் தந்தையர்களாகவும் அன்னையர்களாகவும் வாழ்ந்த பல்வேறு சமயங்களைச் சேர்ந்த அந்நேர்மையாளர்களுடன் இணைந்து, என் இதயத்திற்கு மிகவும் பிரியமான இந்த நாட்டின் எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைக்க விரும்புகிறேன். இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்