பாதுகாவலியான இறையன்னையின் கிரேக்க கத்தோலிக்க ஆலயம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
பாதுகாவலியான இறையன்னையின் கிரேக்க கத்தோலிக்க ஆலயமானது தலைநகரின் 7ஆவது மாவட்டத்தில், ரோஜாக்கள் வளாகத்தில் அமைந்துள்ளது. 1881ஆம் ஆண்டில் கியோஸோ சிக்லரின் (Győző Czigler) வடிவமைப்பில், புதிய உரோமன் பாணியில் கட்டப்பட்டது. முதலில் மாவட்டத்தின் உரோமன் கத்தோலிக்க பங்கு ஆலயமாக இருந்தது. நாளடைவில் வழிபாட்டாளர்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்ததால், வளாகத்தின் மையத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பு பெரிய ஆலயத்தைக் கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1904 ஆம் ஆண்டில், காலியாக உள்ள இப்பகுதி கிரேக்க-கத்தோலிக்க திருஅவையிடம் ஒப்படைக்கப்பட்டது. 1905 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி, எஸ்டெர்கோமின் கர்தினால் பேராயர் Ferenc Kolos Vaszary அவர்கள், புடாபெஸ்டின் கிரேக்க-கத்தோலிக்க பங்குதளத்தை அதிகாரப்பூர்வமாக நிறுவினார். 1905ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் நாள் முதல் கிரேக்க வழிபாடு கொண்டாடப்பட்டது. கிரேக்க-கத்தோலிக்க தலத்திருஅவைக்கு என்று ஒரு கட்டிடமானது 1920களில் கட்டப்பட்டது. கட்டுமானம் முடிந்ததும், 1929 ஆம் ஆண்டில் கிரேக்க-கத்தோலிக்க பாரம்பரியத்தின் படி உள்புற வேலைப்பாடுகள் அக்கால சிறப்புமிக்க கலைஞர்களால் தொடங்கப்பட்டன. 1932 இல், இம்மானுவேல் பெட்ராசோவ்ஸ்கி மற்றும் ஓவியர் இஸ்த்வான் டகாக்ஸ் ஆகியோரிடம் ஆலயத்தின் உட்புற பணிகள் மேற்கொள்ள கேட்கப்பட்டன. கட்டிடத்தின் இரு பக்கங்களையும் அலங்கரிக்கும் ஓவியங்கள் (Béla Kontuly) பெலா கொன்டுலியிடமும் முக்கிய வாயிலின் சித்தரிப்புகள் ஃபெரென்க் லோரிடமும் ஒப்படைக்கப்பட்டன. 1933ஆம் ஆண்டில் பக்கவாட்டு பலிபீடங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டு 1957ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. ஆலயத்தின் மேற்கூரைக்கு மேல் ஒரு சிறிய முகப்பு கோபுரம் உள்ளது. ஆலயத்தின் உட்புற அலங்காரங்கள், கண்ணாடி ஜன்னல்கள், சுவர் ஓவியங்கள், பலிபீட ஓவியங்கள் அனைத்தும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இருந்த புனிதமான கலைப் பொருட்களினால் உருவாக்கப்பட்டு சிறப்பு பெற்றுத் திகழ்கின்றன. இரண்டாம் உலகப் போரின் போது சிறிதளவில் சேதத்தை சந்தித்த இவ்வாலயமானது, படிப்படியாக சரி செய்யப்பட்டது.
ஹங்கேரியின் கிரேக்க கத்தோலிக்க ஆலயமானது 2015 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், மறுஒருங்கிணைக்கப்பட்டு பெருநகர ஆலயமாக உயர்த்தப்பட்டது. பைசண்டைன் வழிபாட்டுக் கத்தோலிக்கர்களுக்கான Hajdúdorog Eparchia வை டெப்ரெசனைத் தலைமையகமாகக் கொண்ட ஒரு பெருநகர ஆலயமாக உயர்த்தினார், மேலும் Hajdúdorog Eparchia ஆயராக இருந்த ஆயர் Fülöp Kocsis ஐ பெருநகர பேராயராக நியமித்தார். 2018 ஆம் ஆண்டில் பசிலியன் துறவியான ஆபெல் ஏ. ஸ்ஸோஸ்காவை பெருநகர பேராயராக நியமித்தார். ஹங்கேரியில் உள்ள கிரேக்க கத்தோலிக்க ஆயர்கள் வாக்களிக்கும் உரிமையுடன் ஹங்கேரிய ஆயர் பேரவையில் உறுப்பினர்களாக உள்ளனர். பெருநகரமான sui iuris கிரேக்க-கத்தோலிக்க திருஅவையை உள்ளூர் இலத்தீன் திருஅவையிலிருந்து முற்றிலும் சுதந்திரமானதாக ஆக்குகிறது. வழிபாட்டு முறைகளில், ஹங்கேரிய கிரேக்க கத்தோலிக்க திருஅவை ஹங்கேரிய தேசிய மொழியைப் பயன்படுத்துகிறது.
இறையன்னை கிரேக்க கத்தோலிக்க ஆலயத்தினை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Hajdúdorog பெருநகர உயர்மறைமாவட்ட பேராயர் அவர்களால் வரவேற்கப்பட்டார். சிறிய செப வழிபாட்டில் அவர்களுடன் பங்கேற்று தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்து திருப்பீடத்தூதரகம் திரும்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
6.8 கிமீ காரில் பயணம் செய்து உள்ளூர் நேரம் 12.15 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் மாலை 3.45 மணிக்குத் திருப்பீடத்தூதரகம் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மதிய உணவினை தனியாக உண்டு இளைப்பாறினார்.
ஏப்ரல் 29 சனிக்கிழமை காலை குடிபெயர்ந்தோர் மற்றும் ஏழைகளைச் சந்தித்து தனது இரண்டாம் நாளுக்கான முதல் உரையை ஆற்றிய திருத்தந்தை மாலை 4.30 மணிக்கு ஹங்கேரி இளையோருக்கான இரண்டாம் உரையை தேசிய விளையாட்டரங்கத்தில் ஆற்ற உள்ளார். மேலும் மாலை 6.00 மணிக்கு இயேசு சபை அருள்பணியாளர்களை திருப்பீடத்தூதரகத்தில் சந்தித்து தனது இரண்டாம் நாள் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்