ஹங்கேரியில் திருத்தந்தைக்கு வரவேற்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
உரோம் உள்ளூர் நேரம் காலை 10.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.30 மணிக்கு ஹங்கேரியின் புடாபெஸ்ட் Ferenc Liszt பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். விமானத்தை விட்டு இறங்கும் முன் ஹங்கேரி நாட்டிற்கான திருப்பீடத்தூதர் பேராயர் Michael W. Banach, எஸ்டெர்கோம் புடாபெஸ்ட் மறைமாவட்ட பேராயரான கர்தினால் Péter Erdő, ஆகியோர் திருத்தந்தையை விமானத்திற்குள் சென்று வரவேற்றனர். விமானத்தில் இருந்து இறங்கிய பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை துணை அரசுத்தலைவர், அரசு சார்பில் வரவேற்க, இரு சிறார் பாரம்பரிய முறைப்படி உடையணிந்து கலாச்சார முறைப்படி உப்பும் ரொட்டியும் கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதியைச் சென்றடையும் முன் துணை அரசுத்தலைவர், அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
ஹங்கேரி உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.00 மணிக்கு தனி வாகனத்தில் 24.3 கி.மீ பயணம் செய்து, ஹங்கேரியின் Palazzo Sándor மாளிகை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Sándor மாளிகை
புடாவின் கோட்டை அரணாக உள்ள சாண்டோர் மாளிகை, 2003 ஆம் ஆண்டு ஜனவரி 22 முதல் அரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமாக செயல்பட்டு வருகின்றது. மிகவும் ஆடம்பரமான பிரம்மாண்டமான இந்த மாளிகையானது, 1803 மற்றும் 1806க்கும் இடையில், மிகவும் செல்வ வளம் கொண்ட பிரபுத்துவக் குடும்பமான சாண்டோர் குடும்பத்திற்காக முதலில் கட்டப்பட்டது. ஹங்கேரிய பாரம்பரியத்தின் மிக முக்கியமான கட்டிடக் கலைஞர்களில் ஒருவரான புகழ்வாய்ந்த Mihaly Pollack என்பவரின் வடிவமைப்பின்படி கட்டப்பட்டது இப்பிரமாண்ட மாளிகை. இந்த மாளிகையின் வரலாற்றின் பெரும்பகுதியைப் பார்த்தோமானால், அரசுக்கட்டிடமாகவும், 19 வெவ்வேறு அரசுத்தலைவர்கள் உட்பட அதிகாரிகள் தங்குவதற்காகவும் பயன்படுத்தப்பட்டதாக அறியவருகிறோம். இரண்டாம் உலகப் போரின் போது மிகவும் பாதிக்கப்பட்டு சிதிலமடைந்த இம்மாளிகை, 1989ஆம் ஆண்டில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இருப்பினும், Ferenc Potzner என்பவரின் வடிவமைப்பில் மாளிகையின் உட்புற மறுசீரமைப்பானது 2000 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் தொடங்கப்பட்டு வசந்த காலத்தில் நிறைவடைந்தது. பரோக் எனப்படும் கலைவடிவப்பாணியில் உருவாக்கப்பட்ட மாளிகையின் உள்புறம் மாளிகையின் முகப்பை விட மிக ஆடம்பரமாக அழகாகக் காணப்படுகின்றது. இம்மாளிகையில் ஊதா அறை, (ப்ளூ ஹால்) முக்கியமான பெரிய கூட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது; இளஞ்சிவப்பு அறை (சலோன் ரோஸ்ஸோ), மாளிகையின் மிக நேர்த்தியான ஆடம்பரமான அறையாகும். கண்ணாடியாலான அறை, ஆடம்பரமான வரவேற்பு அறையாகவும், அரசுசார் நிகழ்வுகள் மற்றும் அரசுத் தூதர்கள் கூட்டங்களின் இரவு உணவுக்கான அறையாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஹங்கேரியில் பாரம்பரிய கலாச்சார நாள் கொண்டாட்டத்தின்போது, இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில், அதாவது ஆண்டுக்கு ஒரு முறை பொதுமக்களுக்காக இம்மாளிகைத் திறக்கப்படுகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்