ஹங்கேரியில் இரண்டாம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஏப்ரல் 29 சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 7 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் 10.30 மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் தனியாக திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின் திருப்பீடத்தூதரகத்திலிருந்து உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கு புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 3.5 கி.மீ. காரில் பயணம் செய்து László Batthyány-Strattmann என்னும் கத்தோலிக்க நிறுவனத்தை வந்தடைந்தார்.
கண்பார்வையற்றவர்களுக்கான கத்தோலிக்க நிறுவனமான அருளாளர் László Batthyány-Strattmann நிறுவனம், தலைநகரின் 12ஆவது மாவட்டத்தில் உள்ளது. பல அடுக்கு மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தில், பார்வையற்ற சிறார் மற்றும் சிறப்புக் கல்வித் தேவைப்படும் சிறாருக்கான ஆரம்பப்பள்ளிக்கூடம் இயங்கி வருகின்றது. மனநல நிபுணர்களின் துணையுடன், மிகவும் நவீன கல்விக் கருவிகள், பிசியோதரபி உடல்நலப்பயிற்சி கருவிகள், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் ஆகியவை உள்ளன. பார்வையற்ற சிறாருக்கான இவ்வில்லம், ஹங்கேரியின் அன்னை தெரசா", என்று 1980ஆம் ஆண்டுகளில் அழைக்கப்பட்ட அருள்சகோதரி Anna Fehér அவர்களால் துவங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் இறந்த அவர் சிறந்த கல்வியாளரும், புனித் எலிசபெத் சகோதரிகள் துறவுசபையினைச் சேர்ந்த ஹங்கேரியின் கடைசி அருள்சகோதரியுமாவார்.
ஹங்கேரியின் புனித எலிசபெத் சபை அருள்சகோதரியான Anna Fehér, கர்தினால் László Léka அவர்களின் உதவியுடன் 1982 ஆம் ஆண்டு இவ்வில்லத்தைத் துவக்கினார். பார்வையற்ற குழந்தைகளுக்கான ஓர் இல்லம், Batthyány வளாகத்தில், வெறும் 100 சதுர மீட்டர் பரப்பளவில் முதலில் உருவானது. தேவையில் இருக்கும் பல சிறாருக்கு இவ்விடம் போதுமானதாக இல்லாததால், 1989ஆம் ஆண்டில் தற்போதிருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது. செயல்பாடு குறைபாடுடையவர்கள், பார்வையற்ற சிறாருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இவ்வில்லமானது, அருள்சகோதரி அன்னாவின் உறுதி, அர்ப்பணிப்பு, பல துன்பங்கள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் நம்பிக்கை, அன்பு ஆகியவற்றுடன் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இவ்வில்லம் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு புதிய நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் வழங்கி வருகின்றது. ஹங்கேரிய ஆயர் பேரவையின் தலைமையில் "கோல்பிங்" என்றும் அழைக்கப்படும் "கோஸ்ஸிஸ்" என்ற அமைப்பால் 2016 ஆம் ஆண்டு முதல் இந்த இல்லம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
பார்வையற்ற சிறாருக்கு உதவும் கத்தோலிக்க நிறுவனத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, நிறுவனத்தின் தலைவர் வரவேற்றார். அருள் நிறைந்த மரியா பாடலுடன் ஆரம்பமான சிறிய வழிபாட்டு நிகழ்வில் பார்வையற்ற சிறுமி ஒருவர் புல்லாங்குழல் வாசிக்க அதனைத் தொடர்ந்து இரக்கம் மற்றும் நன்றிக்கான பாடல்கள் பாடப்பட்டன. அவ்வில்லத்திற்கு துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையின் திரு உருவத்தை பரிசாக அளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவக்ரள், நிகழ்வின் இறுதியில் அவ்வில்லத்தில் பணியாற்றும் பணியாளார்களை சந்தித்து வாழ்த்தி விடைபெற்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்