தேடுதல்

புனித முதலாம் ஸ்தேவான் பேராலயம்

ஹங்கேரியின் புனித ஸ்தேவான் பேராலயம் 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. புகழ்பெற்ற ஹங்கேரிய கட்டிடக் கலைஞர்களான Ferenc Török மற்றும் Mihály Balázs ஆகியோரால் இன்றைய நவீன கட்டிடடமாக 1991ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு முழுமை பெற்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை தனது 41ஆவது திருத்தூதுப் பயணமாக ஹங்கேரிக்கு சென்றிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலையில் அரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரையும் அவர்களின் குடும்பங்களையும் சந்தித்து உரையாடிய பின்னர், அந்நாட்டிற்கான தன் முதல் உரையையும் வழங்கினார். பின் ஹங்கேரி திருப்பீடத் தூதரகத்தில் சிறிது ஓய்வுக்குப்பின், உள்ளூர் நேரம் மாலை 4.40 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 8.10 மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் இருந்து ஹங்கேரியின் துணைப்பேராலயமான புனித முதலாம் ஸ்தேவான் பேராலயம் நோக்கிக் காரில் புறப்பட்டார்.

ஹங்கேரி திருப்பீடத்தூதரகம்

ஹங்கேரியின் திருப்பீடத்தூதரகமானது Hegyvidék என்னும் ஹங்கேரியின் XIIவது மாவட்டத்தில் அமைந்துள்ளது, இது நகரத்தின் மிகவும் வளமையான குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். டானூப் நதியின் மேற்குக் கரையில் உள்ள புடாவின் மிகவும் பசுமையான மற்றும் மலைப்பாங்கான பகுதியில் இத்திருப்பீடத்தூதரகம் அமைந்துள்ளது. 1920ஆம் ஆண்டில் ஹங்கேரிக்கும் திருஅவைக்கும் இடையில் உறவுகள் நிலைநிறுத்தப்பட்டபோதிலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில்,, கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலத்தில் அதிகமாக இவ்வுறவு பாதிக்கப்பட்டது. அதன்பின்  1990ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. புகழ்பெற்ற ஹங்கேரிய கட்டிடக் கலைஞர்களான Ferenc Török மற்றும் Mihály Balázs ஆகியோரால் இன்றைய நவீன கட்டிடடமாக 1991ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு முழுமை பெற்றது.

புனித முதலாம் ஸ்தேவான் பேராலயம்
புனித முதலாம் ஸ்தேவான் பேராலயம்

ஹங்கேரியின் புனித ஸ்தேவான் பேராலயம்

ஹங்கேரியின் முதல் மன்னரான புனித முதலாம் ஸ்தேவான் பெயரில் கட்டப்பட்ட இப்பேராலயமானது (Szent István Bazilika), ஹங்கேரியின் 5வது மாவட்டத்தில், புடாபெஸ்ட் நகரின் மையத்தில், பெஸ்ட் பகுதியில் அமைந்துள்ளது. எஸ்டெர்கோம்-புடாபெஸ்ட் உயர் மறைமாவட்டத்தின் துணைப்பேராலயமாகவும், எஸ்டெர்கோமின் பெருங்கோவிலாகவும் விளங்குகின்றது. 1850ஆம் ஆண்டு எஸ்டெர்கோம் மற்றும் ஈகர் பேராலயங்களை உருவாக்கிய ஜோசப் ஹில்டின் திட்டத்தின் அடிப்படையில் புனித ஸ்தேவான் பேராலயத்தின் கட்டுமானப் பணியானது 1851 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1867 ஆம் ஆண்டில் கட்டிடக் கலைஞர் ஜோசப் ஹில்டின் மரணத்திற்குப் பிறகு, கட்டிடப் பணிகளானது அக்காலத்தில் மிகவும் பிரபலமான கட்டிடக்கலைஞரான (Miklós Ybl) மைக்லோஸ் Ybl  அவர்களிடம் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள கட்டிடப்பணிகளுடன் நவீன முறையில் மறுமலர்ச்சியுடன் இவரால் பலசெயல்கள் மேற்கொள்ளப்பட்டன. 1868 ஆம் ஆண்டில் பேராலயத்தின் கோபுரம் கட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து பேராலய வழிபாட்டு கட்டிடத்தின் பணிகள் 1906ஆம் ஆண்டில் நிறைவடைந்தன.

மூன்றாவது கட்டிடக் கலைஞரான ஜோசப் கௌஸரின் வழிகாட்டுதலின் கீழ், பேரரசர் முதலாம் பிரான்சிஸ்கோ ஜோசப்  முன்னிலையில் இவ்வாலயம் புனிதப்படுத்தப்பட்டது. புடாபெஸ்டின் பாதுகாவலரான கத்தோலிக்க மன்னர் புனித முதலாம் ஸ்தேவான் இறந்த 900 வது ஆண்டு நிறைவையொட்டி, 1938 ஆம் ஆண்டில் துணைப்பேராலயமாக உயர்த்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, ​​இப்பேராலயமும் நகரத்தின் பெரும்பகுதிகளைப் போலவே, கடுமையான சேதத்தை சந்தித்தது. பேராலயத்தின் அனைத்து மேற்கூரை அமைப்புகளையும் மாற்ற வேண்டியிருந்தது. எனவே 1983 ஆம் ஆண்டு முதல் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு முழுமையாக புதுப்பிக்கப்பட்டு,  2003 ஆம் ஆண்டு நிறைவடைந்தன. 96 மீட்டர் உயரமுள்ள இப்பேராலயம், ஹங்கேரியின் பாராளுமன்ற கட்டிடத்திற்கு இணையான உயரம் கொண்டுள்ளது. 96 மீட்டர் (315 அடி) உயரத்தில் உள்ள இப்பேராலயம் ஹங்கேரியின் இரண்டு உயரமான கட்டிடங்களில் ஒன்றாகும். ஹங்கேரியின் பாராளுமன்றமும் பேராலயமும் ஒரே அடி உயரத்தில் கட்டப்பட்டிருப்பது  அரசு நிர்வாகத்திற்கும், ஆன்மீகத்திற்கும் ஒரே முக்கியத்தும் கொடுப்பதை வலியுறுத்துகிறது. பேராலயத்தின் கோபுரத்தில் கிரேக்க சிலுவை வடிவம் வைக்கப்பட்டுள்ளது. பேராலயத்தின் வெளிப்புறத்தில் பன்னிரண்டு திருத்தூதர்களின் உருவச் சிலைகள் பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் முகப்பில் ஒரு பெரிய செர்லியானா கலைவடிவ வளைவும், மையத்தில் ‘வழியும் உண்மையும் வாழ்வும் நானே’ என்ற இறைவார்த்தைகள் இலத்தீன் மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆலயத்தில் வெளிப்புறத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்
ஆலயத்தில் வெளிப்புறத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆலயத்தின் பிற இரண்டு கோபுரங்களுக்குள்ளும் நாட்டின் மிகப்பெரிய 90 டன் எடை கொண்ட மணி உட்பட ஆறு மணிகள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோபுரத்தின் ஆடம்பரமான உட்புறமானது, 55 வகையான ஹங்கேரிய பளிங்கு கற்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது, கரோலி லோட்ஸ் என்னும் பிரபலக் கலைஞரின் அற்புதமான மொசைக் வண்ண வேலைப்படுகளால் ஆலயத்தின் மையத்தில் உள்ள திருப்பலிப் பீடப்பகுதியும் ஆலயத்தின் நீளமான வலப்புற மற்றும் இடப்புற பகுதிகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சிறந்த ஹங்கேரிய கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பிற முக்கியமான கலைப் படைப்புகளாலும், இவ்வாலயம் நிறைந்துள்ளது.  எல்லாவற்றிற்கும் மேலாக 1905 ஆம் ஆண்டுகால இசைக்கருவி இவ்வாலயத்தின் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஹங்கேரிய மக்களால் மிகவும் விரும்பப்பட்டு வணங்கப்படும் நினைவுச்சின்னங்களைக் கொண்ட Santa Destra என்னும் சிற்றாலயம் மிகச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இவ்வாலயத்தில் தான் ஹங்கேரியின் முதல் கத்தோலிக்க மன்னரான புனித முதலாம் ஸ்தேவான் அவர்களின் வலக்கை புனிதப் பொருளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. பேராலயத்தின் கோபுரத்திற்கு செல்ல அடித்தளத்தில் இருந்து 65 மீட்டர் உயரம் வரை செல்ல மின்தூக்கி வசதியும் உள்ளது. கோபுரத்தின் உச்சியிலிருந்து, முழு நகரத்தின் அற்புதமான காட்சியை அனுபவிக்க முடியும்.

பேராலயம் இருக்கும் இடம் 18 ஆம் நூற்றாண்டில் ஹெட்ஸ்-திரையரங்கம் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. விலங்குகளுக்கான சண்டைகள் நடத்தப்படும் இடமாக இருந்த இவ்விடமானது புதிதாக மாவட்டமாக உருவாக்கப்பட்ட பின்னர், நகரின் செல்வந்தர் ஒருவரால் (János Zitterbarth) தற்காலிக ஆலயம் ஒன்று இவ்விடத்தில் எழுப்பப்பட்டது. பின் 1810 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், ஏறக்குறைய ஆயிரம் பேர் ஒன்றிணைந்து நம்பிக்கை கொண்ட மக்களிடத்தில் நிதி திரட்டி லிபோட்வாரோஸ் பங்கை உருவாக்கினர். ஹங்கேரியின் மிக முக்கியமான கட்டிடங்களுள் ஒன்றாக சிறந்து விளங்கும் இப்பேராலயம் மிகவும் குறிப்பிடத்தக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும், கருதப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 April 2023, 12:02