ஏமன் நாட்டில் அமைதிக்கான முயற்சி நடந்து வருகிறது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பல ஆண்டுகளாக பயங்கரமான போரால் காயாம்பட்டுள்ள ஏமன் நாட்டிற்காகவும், இப்போரில் கொல்லப்பட்டவர்களுக்காகவும், இன்றளவும் துயருற்றுக் கொண்டிருக்கின்ற மக்கள் மற்றும் குழந்தைகளுக்காகவும் சிறப்பாக இறைவேண்டல் செய்யுமாறு திருப்பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 19, இப்புதனன்று, தான் வழங்கிய புதன் பொது மறைக்கல்வி உரையில் திருப்பயணிகளிடம் இவ்வாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த வார்த்தைகள் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டிற்கு நம்பிக்கை தருவதாக அமைத்துள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 17, இத்திங்களன்று, ஐ.நா.வின் பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் உரையாற்றுகையில், ஏமன் நாட்டில் அண்மைய ஆண்டுகளில் அமைதிக்கான நேர்மறையான முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், நீடித்த அமைதியை அடைய எதிர்க் கட்சிகள் தங்கள் பொறுப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஏமனுக்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதர் ஹான்ஸ் கிரண்ட்பெர்க்.
ஏமனில் போரிடும் தரப்பினருக்கு இடையே ஒரே நேரத்தில் கைதிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட கைதிகளை நாடு திரும்ப சவுதி அரேபியா அனுமதித்துள்ள நிலையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சவூதி தலைமையிலான கூட்டமைப்புகள் கைதிகள் விடுதலை என்பது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்று கூறியுள்ளது.
இருப்பினும், 2022-ஆம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அவையின் போர் நிறுத்த ஒப்பந்தம் வியத்தகு முறையில் உயிரிழப்புகளைக் குறைத்துள்ளது என்றும் அக்டோபரில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தபோதிலும், அதன் பின்னர் போரின் தாக்கம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மோதல்களால் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருள்கள் அவசரமாகத் தேவைப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. மேலும் 32 இலட்சம் குழந்தைகள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதாக யுனிசெஃப் நிறுவனமும் கூறியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்