உடன்பிறந்த உறவுடன் வாழும் வாழ்வில் உள்ளது நம்பிக்கை
மெரினா ராஜ் – வத்திக்கான்
நம்பிக்கை என்பது அருங்காட்சியகம் போல கடந்த காலத்தின் நினைவாக இருக்க முடியாது என்றும் அது நற்செய்தியின் மகிழ்வில், கடவுளின் அருளால் ஒருவரை ஒருவர் உடன்பிறந்த உறவுடன் அன்பு செய்யும் வாழ்வில் அடங்கியுள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 20 சனிக்கிழமை வத்திக்கான் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் இத்தாலியின் ஸ்போலேத்தோ உயர்மறைமாவட்டத்தில் உள்ள சாந்தா மரியா அசுந்தா பேராலயத்தின் 825-ஆம் ஆண்டு யூபிலியை முன்னிட்டு உரோமிற்கு வருகை தந்திருந்த திருப்பயணிகள் ஏறக்குறைய 2500 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆலயத்தின் அழகைப் பற்றி விளக்க முடியாது அது அழகின் சாட்சியாகத் தன்னை வெளிப்படுத்துவதில் அடங்கி இருக்கின்றது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வார்த்தையால் எடுத்துரைப்பதை விட சான்றாக விளங்குவது திருஅவையில் மிக முக்கியம் என்றும் அதற்கு அடையாளமாக ஆலயத்தின் வரலாறு, பல நம்பிக்கைக் கதைகள், புனிதம், அழகு ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார்.
பழங்கால ஓவியத்தின் அழகைக் கண்டெடுத்து அதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வருபவர் போல, நம் உள்அழகு தேடப்பட வேண்டிய ஒன்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கண்களுக்கு வெளிப்படாத மறைவான செபம், பிறருக்கு உதவும் குணம், மன்னிக்கும் வலிமை போன்றவைகள் மட்டுமல்லாது மேய்ப்புப் பணியாளர்களின் தியாகங்கள், துறவறத்தாரின் வாழ்க்கை, பெற்றோர்கள், குடும்பங்கள், முதியோர்களின் சாட்சியங்கள் போன்றவையும் விலைமதிப்பற்றவைகள் என்றும் அவைகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
நம்பிக்கை என்பது அருங்காட்சியகம் போல கடந்த காலத்தின் நினைவாக இருக்க முடியாது என்றும் நற்செய்தியின் மகிழ்வில், மக்கள் சமூகத்தில், இரக்கத்தை அனுபவித்து அங்கீகரிக்கிறவர்களின் கூட்டத்தில் கடவுளால் அன்பு செய்யப்படும் உடன்பிறந்த உறவுடன் வாழ்வதில் அடங்கியுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு மட்டுமல்லாது தொலைவில் இருப்பவர்கள், நம்மிடையே இல்லாதவர்கள், நம்மைக் குறை கூறுபவர்கள், கடவுளின் அன்பை அறியாதவர்கள் போன்றவர்களுக்காக அன்னை மரியாள் போல இறைவனிடம் பரிந்து பேசுபவர்களாக நாம் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவர்கள் சோர்வு மற்றும் உலகப்பிணைப்பில் சிக்கிக்கொள்ளாது கடவுளின் அருளால் மறைவாக இருக்கும் அழகை மீண்டும் கண்டறியவும், பிறரிடம் உள்ள அழகைக் கண்டறியவும் பரிந்துரைக்கப்படுகிறார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்