தேடுதல்

Compagnia di Maria என்றழைக்கப்படும் மான்ஃபோர்ட் மறைப்பணியாளர்கள் சபையினருடன் திருத்தந்தை Compagnia di Maria என்றழைக்கப்படும் மான்ஃபோர்ட் மறைப்பணியாளர்கள் சபையினருடன் திருத்தந்தை   (Vatican Media)

மென்மையான இதயங்கள் கடவுளின் நெருக்கத்தை உணர்த்தும்

மனிதகுலம் அனைத்திற்கும் மன்னிப்பு, உரையாடல், ஏற்றுக்கொள்ளுதல், அமைதி ஆகியவற்றின் பாதைகளை துணிவு மற்றும் படைப்பாற்றலுடன் உருவாக்க அன்னை மரியாவின் துணையை நாடவேண்டும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இனிமையை உண்டாக்கும் மென்மை வலிமையானது என்றும், கடவுள் கனிவுள்ளவர், இரக்கமுள்ளவர், நம்முடன் நெருக்கமானவர் என்பதை மென்மையான இதயங்கள் வெளிப்படுத்துகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 20 சனிக்கிழமை வத்திக்கானின் சாந்தா கிளமெந்தினா அறையில் மரியாளின் உடன்பணியாளர்கள் (Compagnia di Maria) என்றழைக்கப்படும் மான்ஃபோர்ட் மறைப்பணியாளர்கள் சபையின் 38ஆவது பொதுப்பேரவை உறுப்பினர்கள் ஏறக்குறைய 100 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விருந்தோம்பல், பன்னாட்டுத்துவம், மென்மை ஆகிய கருத்துக்களின் அடிப்படையில் அவர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாள் போல இயேசுவை வரவேற்ற விருந்தோம்பல் குணத்திலும், சபையின் நிறுவனர் புனித லூயிஸ் மரி போல பன்னாட்டுக் கலாச்சாரத்துடன் பிறரை அணுகி, அன்னை மரியாவின் மென்மை குணத்திலும் வாழ வலியுறுத்தினார்.

திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ்

விருந்தோம்பலில் சிறந்தவரான மரியா

தந்தைக் கடவுளின் ஞானமாம் இயேசுவை வரவேற்கும் பொருட்டு, தன் வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், கனவுகள் மற்றும் விருப்பங்களை மாற்றியமைக்க துணிவுடன்  ஆண்டவரின் அழைப்பை ஏற்றுக்கொண்டவர் மரியா என்றும், நாசரேத்து, கல்வாரிமலை, சீடர்கள் இருந்த மேல் அறை போன்ற எல்லா இடங்களிலும் உடனிருந்து  இயேசுவின் உயிர்ப்பின் ஒளியைத் தாழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டவர் மரியா என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வரவேற்பு என்பது அன்னை மரியாவின் உடன்இருப்பு மற்றும் அவரது பணியின் அடிப்படை பரிமாணம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னையின் முன்மாதிரியைப் பின்பற்றி, குழுக்கள் மற்றும் கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள மக்களிடம் செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

வரவேற்பு அதிகமாகத் தேவைப்படும் புதிய சூழ்நிலைகளில் எல்லோருடனும் நம்மை நெருக்கமாக்குவதற்கு, படைப்பாற்றல் தேவை என்றும் திறந்த இதயத்துடன் வரவேற்பு வழங்கப்பட வேண்டும் என்றும் மனிதகுலம் அனைத்திற்கும் மன்னிப்பு, உரையாடல், ஏற்றுக்கொள்ளுதல், அமைதி ஆகியவற்றின் பாதைகளை துணிவு மற்றும் படைப்பாற்றலுடன் உருவாக்க அன்னை மரியாவின் துணையை நாடவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.

நாம் பேசும் நற்பண்புகள் ஒவ்வொரு நிலையிலும் மக்கள் அன்புசெய்யப்படுதல் மற்றும் மதிக்கப்படுதலை உணரும் போது செழித்து வளரும் என்றும், அன்னை மரியா தன் மென்மையான கரங்களால், நம் அனைவரையும் குழந்தைகளாக ஏற்றுக்கொள்கிறார் என்றும், அன்னை மரியா மீது உண்மையான பக்தி கொண்டு அன்பால் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2023, 13:17