தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

உலகம் முழுவதும் நீதியும் அமைதியும் பாய்ந்தோடட்டும் : திருத்தந்தை

ஒரு நதி அதன் சுற்றுப்புறங்களுக்கு வாழ்வின் ஆதாரமாக இருப்பது போலவே, பயணிக்கும் திருஅவையும் நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமிக்கும் அதன் அனைத்து குடிமக்களுக்கும் வாழ்வின் ஆதாரமாக இருக்க வேண்டும் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைச் சந்திக்கும் ஏழைகள் மற்றும் நம் குழந்தைகளுக்கு எதிரான இந்த அநீதியைத் தடுக்கக் குரல் எழுப்புவோம் என்றும், சமூகம் மற்றும் இயற்கை குறித்த இந்தக் கண்ணோட்டங்களுக்கு இணங்க செயல்படுமாறு நல்லெண்ணம் கொண்ட அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியன்று சிறப்பிக்கப்படவிருக்கும் படைப்பின் பராமரிப்புக்கான உலக இறைவேண்டல் தினச் செய்தியை மே 25, இவ்வியாழனன்று வழங்கியுள்ள வேளை, அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, "நீதியும் அமைதியும் பாய்ந்தோடட்டும்" என்பது இந்த ஆண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்புசார் கூட்டத்தின் கருப்பொருளாகும், இது, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக! (5:24) என்ற இறைவாக்கினர் ஆமோஸ் வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்டது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வார்த்தைகளில் கடவுளின் விருப்பத்தை அவர் வெளிப்படுத்துகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

மனிதநேயம் மற்றும் இயற்கையுடன் சரியான உறவைப் பேணிக்காத்து, நாம் கடவுளுக்கு  ஏற்புடையவற்றைத் தேடும்போது (மத் 6:33), நீதியும் அமைதியும் ஒருபோதும் தோல்வியடையாத தூய நீரின் ஓட்டத்தைப் போல பாய்ந்து, மனிதகுலத்தையும் அனைத்து உயிரினங்களையும் வாழ்விக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

நீதி மற்றும் அமைதியின் வலிமைமிக்க நதிக்கு நாம் எவ்வாறு பங்களிக்க முடியும்? குறிப்பாக, கிறிஸ்தவ சமூகங்களாக, நமது பொதுவான இல்லத்தை மீண்டும் ஒருமுறை உயிர்ப்பிக்க நாம் செய்ய என்ன செய்யலாம்? என்ற கேள்விகளுக்கு விடைதேடும்போது நமது இதயங்களையும், நமது வாழ்க்கை முறைகளையும், நமது சமூகங்களை ஆளும் பொதுக் கொள்கைகளையும் மாற்றத் தீர்மானிப்பதன் வழியாக இதைச் செய்ய வேண்டும் என்ற மூன்று காரியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

நம் இதயங்களை மாற்றுவோம்

முதலாவதாக, நம் இதயங்களை மாற்றுவதன் வழியாக வலிமைமிக்க நதியில் இணைவோம் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேறு எந்தயொரு மாற்றமும் நிகழ இது அவசியம் என்றும்; படைப்புடனான நமது உறவைப் புதுப்பித்தல், அதனால் அதை சுரண்ட வேண்டிய ஒரு பொருளாக நாம் பார்க்காமல், அதை நம் படைப்பாளரின் புனிதமான கொடையாகப் போற்றுவோம் என்றும் புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் உரைத்த வார்த்தைகளையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

மேலும், சுற்றுச்சூழலை மதிக்கும் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையானது கடவுளுடனும், இன்று மற்றும் நாளைய நமது சகோதர சகோதரிகளுடனும், அனைத்து இயற்கையுடனும், நம்முடனும் என்ற நான்கு உறவுகளை உள்ளடக்கியது என்பதை நாம் உணர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

நமது வாழ்வு முறையை மாற்றுவோம்

இரண்டாவதாக, நமது வாழ்க்கை முறையை மாற்றுவதன் வழியாக இந்த வலிமைமிக்க ஆற்றின் ஓட்டத்தில் இணைவோம் என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் அருளுடனும், உதவியுடனும், குறைந்த கழிவுகள் மற்றும் தேவையற்ற நுகர்வு ஆகியவற்றால் குறிக்கப்பட்ட வாழ்க்கை முறைகளை பின்பற்றுவோம், குறிப்பாக உற்பத்தி செயல்முறைகள் நச்சுத்தன்மையுடையதாகவும், நீடிக்க முடியாததாகவும் இருக்கும் நிலையை மாற்றுவோம் என்றும், அனைவரும் வலிமையுடன் வாழும் பொருட்டு நம் பழக்கவழக்கங்கள் மற்றும் பொருளாதார முடிவுகளைப் பற்றி நம்மால் முடிந்தவரை கவனத்துடன் இருப்போம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மிதமான மற்றும் மகிழ்ச்சியான நிதானத்துடன் வளங்களைப் பயன்படுத்துதல், கழிவுகளை அப்புறப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புள்ள பொருட்கள் மற்றும் பணிகளை அதிகமாகப் பயன்படுத்துதல் ஆகிய நேர்மறையான தெளிந்து தேர்தல்கள் வழியாகக் கடவுளின் தொடர்ச்சியான படைப்பில் ஒத்துழைப்போம் என்றும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை

நமது பொதுக் கொள்கைகளை மாற்றுவோம்

மூன்றாவதாக, இந்த வலிமையான நதி தொடர்ந்து பாய்வதற்கு, நமது சமூகங்களை ஆளும் பொதுக் கொள்கைகளை மாற்றி, இன்றும் நாளையும் இளைஞர்களின் வாழ்க்கையை வடிவமைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சலுகை பெற்ற சிலருக்கு அவதூறான செல்வத்தை ஊக்குவிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் இதனால் பலருக்கு ஏற்படும் இழிவான நிலைமைகள் யாவும், அமைதி மற்றும் நீதிக்கு குந்தகம் விளைவிக்கின்றன என்றும் விளக்கியுள்ளார்

வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை துபாயில் நடைபெறும் COP28 உச்சிமாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள் அனைவரும் அறிவியலைக் கேட்டு, புதைபடிவ எரிபொருளின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவர விரைவான மற்றும் சமமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதனைக் கருத்தில்கொண்டே அக்டோபர் 2021-இல் தொடங்கிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் செயல்முறையானது, தனிப்பட்ட அல்லது சமூக அளவில் பங்கேற்கும் அனைவரையும் பிரதிபலிப்பு மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றின் வலிமையான நதியில் ஒன்றிணைக்க அழைக்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

ஒரு நதி அதன் சுற்றுப்புறங்களுக்கு வாழ்வின் ஆதாரமாக இருப்பது போலவே, நமது பயணிக்கும் திருஅவையும்  நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமிக்கும் அதன் அனைத்து குடிமக்களுக்கும் வாழ்வின் ஆதாரமாக இருக்க வேண்டும் என்றும், ஒரு நதி அனைத்து வகையான விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் உயிர் கொடுப்பதைப் போலவே, பயணிக்கும் திருஅவையானது அது அடையும் ஒவ்வொரு இடத்திலும் நீதியையும் அமைதியையும் விதைத்து உயிர் கொடுக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2023, 14:40