தேடுதல்

திருத்தந்தையுடன் புலம்பெயந்த சிறுமி திருத்தந்தையுடன் புலம்பெயந்த சிறுமி  

புலம்பெயர்த்தோரின் மாண்பைப் போற்றுவோம் : திருத்தந்தை

இணைந்து பயணிப்பதன் வழியாக மட்டுமே நாம் நீண்ட தூரம் பயணித்து நமது பயணத்தின் பொதுவான இலக்கை அடைய முடியும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நம் எதிர்காலத்தை நாம் பிறந்த நாட்டிலோ அல்லது பிற இடத்திலோ கட்டியெழுப்ப எந்த இடத்தில் முடிவு செய்தாலும், வேறுபாடு இல்லாமல், யாரையும் ஒதுக்காமல், அனைவரையும் வரவேற்க, பாதுகாக்க, ஊக்குவிக்க மற்றும் ஒருங்கிணைக்க ஒரு சமூகம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 11, இவ்வியாழனன்று, 2023-ஆம் ஆண்டிற்கான 109-வது உலகப் புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் தினத்திற்கு வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இடம்பெயர்ந்து செல்வதற்கான முடிவு எப்போதும் தன்னிச்சையானதாக அமையவேண்டும், ஆனால், பலவேளைகளில் அப்படி அமைவதில்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.

சுதந்திரமாக வெளியேறுவது, சுதந்திரமாக தங்குவது (Free to leave, free to stay) என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலிய ஆயர் பேரவையால் சமகால இடம்பெயர்வு இயக்கங்களால் முன்வைக்கப்படும் சவால்களுக்குப் பதிலிறுப்பு செய்யும் ஒரு தலைப்பாக அமைந்துள்ளது என்று நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்தச் சுதந்திரம் என்பது ஒரு பரவலாகப் பகிரப்பட்ட மேய்ப்புப் பணிக்கான அக்கறையை வெளிப்படுத்துவதாகப் பார்க்கின்றேன் என்றும் உரைத்துள்ளார்.

எகிப்தில் திருக்குடும்பம்

திருக்குடும்பம் கட்டாயத்தின் பேரில் எகிப்து நாட்டிற்குப் புலம்பெயர்ந்து சென்ற சூழலை (மத் 2:13) எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மோதல்கள், இயற்கைப் பேரழிவுகள் அல்லது இன்னும் எளிமையாக ஒருவரின் சொந்த நிலத்தில் ஒரு மாண்புடைய மற்றும் வளமான வாழ்க்கை வாழ முடியாத இலட்சக்கணக்கான மக்களை வெளியேற கட்டாயப்படுத்துகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

எகிப்தில் இஸ்ரயேல் மக்கள்

கடுமையான பஞ்சம் யாக்கோபு மற்றும் அவரது முழு குடும்பத்தையும் எகிப்தில் அடைக்கலம் தேடக் கட்டாயப்படுத்தியது என்றும், அங்கு அவரது மகன் யோசேப்பு அவர்கள் உயிர்வாழ்வதை உறுதி செய்தார் என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறுத்தல்கள், போர்கள், வளிமண்டல நிகழ்வுகள் மற்றும் மோசமான வறுமை ஆகியவை மக்களின் இன்றைய கட்டாய இடம்பெயர்வுக்கான மிகவும் வெளிப்படையான காரணங்களாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் புலம்பெயர்ந்தோர் வறுமை, பயம் அல்லது விரக்தியின் காரணமாக வெளியேறுகிறார்கள் என்றும், இந்தக் காரணங்களை நீக்கி, கட்டாய இடம்பெயர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அனைவரும் அழைக்கப்படுகிறோம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தொடக்க கால கிறிஸ்தவர்கள்

ஒன்றுகூடி வருதல், இறைவேண்டல் செய்தல், பகிர்தல் ஆகிய தொடக்க கால கிறிஸ்தவர்களின் வாழ்வுமுறையை (திப 2:44-45) எடுத்துக்காட்டி பேசிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வழியில் மட்டுமே ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாகவோ அல்லது குடும்பங்களுக்குள்ளாகவோ மாண்புக்குரிய மற்றும் நிறைவான வாழ்க்கைக்கான வாய்ப்பை வழங்க முடியும் என்றும் விளக்கியுள்ளார்.

இதன் அடிப்படையில், வெளிப்படையான, நேர்மையான, தொலைநோக்கு மற்றும் அனைவருக்கும் பணியாற்றும் நோக்கமுடன், நல்ல அரசியல் விழுமியங்களைக் கடைப்பிடிக்க அழைக்கப்பட்ட அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் இதில் முக்கிய பொறுப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2025 யூபிலி ஆண்டு நினைவாக

‘யூபிலி ஆண்டில் அவரவர் தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்லவேண்டும்’ (லேவி 25:13) என்ற இறைவார்த்தையை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2025-ஆம் ஆண்டின் யூபிலி ஆண்டை நாம் நெருங்கும்வேளை, யூபிலி கொண்டாட்டங்களின் இந்த அம்சத்தை நாம் நினைவில் கொள்வது நல்லது என்று நினைவூட்டியதுடன், சொந்த நாட்டில் அமைதியாகவும் மாண்புடனும் வாழும் உரிமையை அனைவரும் அனுபவிப்பதை உறுதிசெய்ய தனிப்பட்ட நாடுகளும் அனைத்துலகச் சமூகமும் உறுதிசெய்யும் கூட்டு முயற்சிகள் தேவை என்றும் உரைத்துள்ளார்.

உண்மையில், உலகின் வளங்கள் வரம்பற்றவை அல்ல என்பதால், பொருளாதார ரீதியாக ஏழ்மையான நாடுகளின் வளர்ச்சியானது, அனைத்து நாடுகளிடையேயும் நாம் உருவாக்கக்கூடிய பகிர்வு திறனைப் பொறுத்தது என்றும், இந்த உரிமைக்கு உத்தரவாதமளிக்கும் வரை, இன்னும் பலர் சிறந்த வாழ்க்கையைத் தேடுவதற்காகப் புலம்பெயர்ந்தே ஆக வேண்டும் என்ற சூழலில் உள்ளதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை.

மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு

‘மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு’ (மத் 25:35-36) என்ற தலைப்பில் இயேசு விவரிக்கும் உவமையை எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வார்த்தைகள் புலம்பெயர்ந்தோரில் ஒரு சகோதரரையோ சகோதரியையோ துயரத்தில் பார்க்காமல், கிறிஸ்துவே நம் கதவைத் தட்டுவதைப் போல பார்க்க வேண்டும் என்றும், இதன் விளைவாக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இடம்பெயர்வு என்பது ஒரு தன்னிச்சையான முடிவின் பலனாக இருப்பதை உறுதிசெய்ய நாம் உழைத்தாலும், ஒவ்வொரு புலம்பெயர்ந்தவரின் மாண்பிற்கும் அதிகபட்ச மரியாதை காட்ட நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் கூறினார்.

ஒன்றிணைந்த பயணம் (synodal path)

ஒரு திருஅவையாக நாம் மேற்கொண்டுள்ள ஒன்றிணைந்து பயணிக்கும் பாதை (synodal path) என்பது, மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களில், அவர்களிலும் பல புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோரை நம் சகோதரர் சகோதரிகளாக ஏற்று அன்புகூர்வதற்கு அழைப்புவிடுக்கிறது என்றும், இணைந்து பயணிப்பதன் வழியாக மட்டுமே நாம் நீண்ட தூரம் பயணித்து நமது பயணத்தின் பொதுவான இலக்கை அடைய முடியும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2023, 14:51