நம்மைப் பாதுகாக்கும் தூய ஆவியானவர்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நமக்கு ஆறுதல் அளிக்கும் தூய ஆவியானவர் நம்மை ஒருபோதும் தனியாக விட்டுவிடாதவர் என்றும், உலகின் குற்றச்சாட்டுகளிலிருந்தும் தீயோனிடமிருந்தும் நம்மைப் பாதுகாக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 14 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு அல்லேலுயா வாழ்த்தொலி உரை வழங்கிய போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் தூய ஆவியின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தூய ஆவியானவர் நம்மை ஒருபோதும் தனிமையில் விடுவதில்லை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு பக்கத்தில் நின்று உதவி செய்யும் ஒரு வழக்கறிஞரைப் போல அவர் நமக்கு நெருக்கமாக இருக்கிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூய ஆவி என்பதற்கு ஆறுதல் அளிப்பவர் வழக்குரையாளர் என்னும் இரு பொருள்கள் உண்டு என்பதையும் நினைவுகூர்ந்தார்.
“அப்போது, இயேசு தம் சீஷர்களை நோக்கி: நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால், என் கட்டளைகளைக் கைக்கொள்ளுவீர்கள்; நான் தந்தையிடம் கேட்பேன், அவர் உங்களுடன் என்றென்றும் இருக்க மற்றொரு பாராக்லீட்டைத் தருவார். (யோவான் 14:15-17)"
ஆவியானவர் "உங்களில் தங்கியிருக்கிறார், உங்களோடு இருக்கிறார்" என்ற இயேசுவின் வார்த்தைகளை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூய ஆவியின் உடனிருப்பு என்பது வாழ்க்கைத் துணை, நிலையான இருப்பு என்றும் வலியுறுத்தினார்.
நாம் தவறு செய்தாலும் பொறுமையாக நம்முடன் இருக்கும் தூய ஆவியானவர் நம்மை அன்பு செய்கின்றார் நம் துன்பங்களில் நம்மைத் தனியாக விடாது உடன் இருக்கின்றார் என்றும் எடுத்துரைத்தார்.
சோதனை வேளையில் தூயஆவியானவர் நமக்கு ஆறுதலளித்து, கடவுளின் மன்னிப்பையும் வலிமையையும் பெற்றுத் தருகிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் தவறுகளை இரக்கத்துடன் அவர் திருத்துகின்றார் என்றும், நம் இதயத்துடன் பேசும் அவரது குரலில் எப்போதும் மென்மையின் அடையாளம் மற்றும் அன்பின் அரவணைப்பு அடங்கியுள்ளது என்றும் கூறினார்.
உண்மையான, எதையும் மறைக்காத நண்பர் தூய ஆவியானவர் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதை மாற்ற வேண்டும், எப்படி வளர வேண்டும் என்று நமக்கு பரிந்துரைக்கிறார் என்றும், அவர் நம்மில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது அவமானத்தையோ, அவநம்பிக்கையையோ ஏற்படுத்துவதில்லை மாறாக, நாம் எப்போதும் கடவுளுடன் இணைந்திருப்பதற்கான உறுதியைத்தருகின்றார் என்ரும் எடுத்துரைத்தார்.
மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் நிலையானதாக இருக்க வேண்டும், ஆயுதங்கள் வழியாகப் பாதுகாப்பைப் பெற முடியாது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்