தேடுதல்

பாப்பிறை அறிவியல் கல்விக்கழகத்தினருடன் திருத்தந்தை பாப்பிறை அறிவியல் கல்விக்கழகத்தினருடன் திருத்தந்தை   (ANSA)

உலகளாவிய ஒன்றிப்பை வளர்த்தெடுப்போம் : திருத்தந்தை பிரான்சிஸ்

நீதி மற்றும் அனைத்துலக ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக உழைக்கும் அனைவரின் முயற்சிகளையும் திருஅவை ஆதரிக்கிறது : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நாம் வாழும் இவ்வுலகில் எல்லாமே ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்பதை அதிக அளவில் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது என்றும், இன்றைய பிரச்சனைகளுக்கு உலகளாவிய நெருக்கடியின் ஒவ்வொரு அம்சத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் திறன் கொண்ட பார்வை நமக்குத் தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 10, இப்புதனன்று, "உணவு மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள்: அறிவியல் மற்றும் அவற்றின் தடுப்பு மற்றும் தணிப்புக்கான கொள்கைகள்" என்ற தலைபில் நிகழும் கலந்துரையாடல் மாநாட்டில் பங்கேற்கும் பாப்பிறை அறிவியல் கல்விக்கழகத்தினருக்கு வழங்கிய உரையில் இவ்வாறு உரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள கருப்பொருள் இன்றையச் சூழலுக்கு உகந்ததாக உள்ளது, ஏனெனில், கல்வி சார்ந்த விவாதத்திற்கு மட்டுமல்ல, ஆரோக்கியமான ஊட்டச்சத்து மற்றும் போதுமான உணவு கிடைக்காத நமது சகோதரர் சகோதரிகள் பலரின் துன்பத்தைப் போக்க தொலைநோக்குப் பார்வைகொண்டுள்ள அதிகாரிகளுக்கும் அரசியல் நடைமுறைகளுக்கும் இது வேண்டுகோள் விடுக்கிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இது ஒரு அவசர சவாலாக உள்ளது, ஏனென்றால் இயற்கைப் பேரழிவுகள், ஆயுத மோதல்கள் ஆகியவற்றால் அடிக்கடி ஏற்படும் ஆபத்தான சூழ்நிலைகள், அரசியல் அல்லது பொருளாதார ஊழல் மற்றும் பூமியின் சுரண்டல் யாவும்  நமது பொதுவான இல்லத்தின் வளர்ச்சிக்கும், உணவு உற்பத்திக்கும் இடையூறாக இருப்பதுடன், விவசாய அமைப்புகளின் பின்னடைவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்த மக்களின் ஊட்டச்சத்து விநியோகத்தை ஆபத்தான முறையில் அச்சுறுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அதேவேளையில், இந்தப் பல்வேறு நெருக்கடிகள் கோவிட்-19 பெருந்தொற்றின் நீண்டகால விளைவுகளால் மோசமடைந்துள்ளன என்பதையும், இதனால் ஏற்பட்ட நமது தவறான நடவடிக்கைகள் நமது சகோதர ஒற்றுமையை வீழ்ச்சியடையச் செய்துள்ளதற்கு நாமே சாட்சிகளாக இருக்கின்றோம் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த அர்த்தத்தில், தொழில்நுட்ப தீர்வுகளில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலாக உலகளாவிய ஒற்றுமையின் அணுகுமுறையை வளர்ப்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதை நினைவூட்டுவதன் வழியாக, தற்போது நாம் அனுபவித்து வரும் நெருக்கடிகளிலிருந்து வெளிவர இந்தக் கலந்துரையாடல் மாநாடு உதவும் என்று தான் நம்புவதாகவும் உரைத்துள்ளார் திருத்தந்தை

இது சம்பந்தமாக, நெருக்கடிகளுக்குப் பதிலளிப்பது மட்டுமல்லாமல், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம், மக்களிடையே நீதி மற்றும் அனைத்துலக ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக உழைக்கும் அனைவருடனும் சேர்ந்து உங்கள் முயற்சிகளைத் திருஅவை  முழு மனதுடன் ஆதரித்து ஊக்குவிக்கிறது என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 May 2023, 14:35