இரண்டாம் தவட்ரோஸ் அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் இரண்டாம் தவட்ரோஸ் அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  

நமது நட்பு தடையின்றி தொடர்ந்து வளரட்டும் : திருத்தந்தை

கத்தோலிக்க மற்றும் காப்டிக் கிறிஸ்தவத்தின் முன்னோடிகளின் சந்திப்பு முழு ஒற்றுமையை நோக்கிய நமது திருஅவைகளின் பயணத்தில் பலனைத் தருவதை நிறுத்தவில்லை : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறிஸ்தவ ஒன்றிபுசார் பயணத்தில், எப்போதும் முன்னோக்கிப் பார்ப்பது முக்கியம் என்றும், இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்?" என்று எப்போதும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 11, இவ்வியாழனன்று, அலெக்ஸாண்டிரியாவின் தேசத்தந்தையும், எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவையின் தலைவருமான முதுபெரும்தந்தை இரண்டாம் தவட்ரோஸ் அவர்களுடன் நடந்த உரையாடலின்போது இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காப்டிக் மற்றும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு இடையேயான உறவை மீண்டும் நினைவு கூர்ந்தார்.

ஏற்கனவே பயணித்த பாதையில் நாம் மகிழ்ச்சியடைவதற்கும், நமக்கு முன் சென்ற முன்னோடிகளின் ஆர்வத்தைப் பெறுவதற்கும் குறிப்பாக, மனச்சோர்வு ஏற்படும் காலங்களில் இதனை எப்போதும் நினைவில் கொள்வது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய நினைவுகொண்டாத்தின் நோக்கம் நன்றி செலுத்துவதும் மன்றாடுவதும் ஆகும் என்று உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1973-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை, திருத்தந்தை புனித ஆறாம் பால் மற்றும் முதுபெரும்தந்தை மூன்றாம் ஷெனௌடா ஆகியோருக்கு இடையே நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு என்பது, புனிதர்களான பேதுரு மற்றும் மாற்கு இருவருக்குமிடையே நிலவிய உறவுகளில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறித்தது என்றும் எடுத்துரைத்தார்.

கத்தோலிக்க மற்றும் காப்டிக் கிறிஸ்தவத்தின் முன்னோடிகளின் சந்திப்பு எவ்வாறு முழு ஒற்றுமையை நோக்கிய நமது திருஅவைகளின் பயணத்தில் பலனைத் தருவதை நிறுத்தவில்லை என்பதையும் இச்சந்திப்பின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

1973-இல் நடந்த அந்தச் சந்திப்பின் நினைவாகவே, 2013 மே 10-ஆம் தேதி, நீங்கள் தலைமைப் பொறுப்பேற்ற சில மாதங்களுக்குப் பிறகும், நான் காத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியாளாராகப் பொறுப்பேற்ற சில வாரங்களுக்குப் பிறகும், முதல் முறையாக என்னை இங்குச் சந்தித்தீர்கள் என்று நினைவு கூர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், அந்தச் சந்திப்பின் அழகிய தருணத்தில், ஒவ்வொரு மே 10-ஆம் தேதியும் காப்டிக் மற்றும் கத்தோலிக்கர்களுக்கு இடையேயான நட்பு தினத்தை கொண்டாட நீங்கள் முன்மொழிந்தீர்கள் என்றும், இது எங்களுடைய திருஅவையில் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 May 2023, 14:52