தேடுதல்

ஜோர்டனின் பல்சமய ஆய்வுகளுக்கான  நிறுவனத்தினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் ஜோர்டனின் பல்சமய ஆய்வுகளுக்கான நிறுவனத்தினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (VATICAN MEDIA Divisione Foto)

ஒன்றிணைதல், வேறுபடுதல் இரண்டையும் குறித்த விழிப்புணர்வுத் தேவை

எல்லாமே மரணத்துடன் முடிவடைவதில்லை. நிலைவாழ்வு உண்டு என்று நம்புகிறோம், அங்கு நம் செயல்களுக்குக் கடவுளிடம் கணக்குக் கொடுத்து வெகுமதி அல்லது தண்டனையைப் பெறுவோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நம் கடவுளுக்கு மகிமையையும், இவ்வுலகின் திருப்பயணத்தில் நாம் சந்திக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அளிக்கும் நல்லதொரு வாழ்வைக் கட்டியெழுப்புவதில் நமது பொதுவான அர்ப்பணிப்பு அமையவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 4, இவ்வியாழனன்று, மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கான திருப்பீடத் துறை  மற்றும் ஜோர்டனின் பல்சமய ஆய்வுகளுக்கான  நிறுவனத்திற்குமிடையே  "கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் இடையே ஆக்கப்பூர்வமான பொதுமைகள்". என்ற தலைப்பில் நிகழும் ஆறாவது உரையாடலின் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

இளவரசர் எல் ஹசன் பின் தலாலின் அறிவொளி பெற்ற தலைமையின் கீழ், ஜோர்டனின் பல்சமய ஆய்வுகளுக்கான நிறுவனமானது, அரபு கிறிஸ்தவ பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை அதன் முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இது சம்பந்தமாக, தான் மேலும் நன்றியை மட்டுமே தெரிவிக்க முடியும், ஏனென்றால் இது நேற்றைய மற்றும் இன்றைய கிறிஸ்தவ குடிமக்களுக்கு நன்மை பயப்பது மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு முழுவதும் மிகவும் மாறுபட்ட மற்றும் இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் மரபுகள் கொண்ட  இந்தப்  பாரம்பரியத்தை பாதுகாக்கிறது மற்றும் பலப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

நீங்கள் பயிற்சி பெற்று ஊக்குவிக்கும் உரையாடல் பலனளிக்க வேண்டுமெனில், நேர்மை மற்றும் ஒருவருக்கொருவரான மரியாதை ஆகியவற்றின் பாணியும், ஒன்றுபடுதல் மற்றும் வேறுபாடுகள் இரண்டையும் பற்றிய விழிப்புணர்வும் தேவை என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

அனைத்திற்கும் மேலாக, மத-ஆன்மிக அளவிலும், நெறிமுறை-தார்மீக அளவிலும்  நம்மை ஒன்றிணைக்கும் விடயங்களில் ஒருவர் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்த அர்த்தத்தில், ஒரே கடவுளை வணங்குதல், இறைவேண்டல் செய்தல், நோன்பிருத்தல், திருப்பயணம் மேற்கொள்ளுதல், இரக்கம், பகிர்வு, ஆதரவற்றோர் மற்றும் துன்பங்களைக் கவனித்தல்,  கைவிடப்பட்டோர், கைம்பெண்கள், நோயுற்றோர், முதியோர், இடம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர்மீதான அக்கறை வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் திருத்தந்தை.

எல்லாமே மரணத்துடன் முடிவடைவதில்லை, நிலைவாழ்வு உண்டு என்று நம்புகிறோம், அங்கு நம் செயல்களுக்குக் கடவுளிடம் கணக்குக் கொடுத்து வெகுமதி அல்லது தண்டனையைப் பெறுவோம் என்பதையும் உணர்ந்துகொள்வோம் என்றும் உரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2023, 14:43