சமுதாயத்தின் எதிர்காலமாக விளங்குவது குடும்பம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிறப்பு விகிதத்தின் சவால் என்பது நம்பிக்கையை அடிப்டையாகக் கொண்டது. ஆனால் நம்பிக்கை என்பது எதிர்காலத்தைப் பற்றிய தெளிவற்ற நேர்மறையான உணர்வு அல்ல. அது மாயையோ உணர்ச்சியோ அல்ல அது ஒரு உறுதியான நற்பண்பு என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 12, இவ்வெள்ளியன்று, மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான இத்தாலிய அமைப்பு (States General of Natality) நடத்தும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிறப்பு விகிதமும், வரவேற்பும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதால் ஒருபோதும் அதனை எதிர்க்கக் கூடாது என்றும், சமூகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறது என்பதை அது நமக்கு வெளிப்படுத்துகிறது என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு மகிழ்ச்சியான சமூகம் என்பது, இயற்கையாகவே உருவாக்கும் மற்றும் ஒருங்கிணைக்கும் ஆசைகளை வளர்கிறது என்றும், அதேவேளையில், மகிழ்ச்சியற்ற சமூகம் தங்களிடம் உள்ளதை எல்லா நிலையிலும் பாதுகாக்க முயற்சிக்கும் தனிநபர்களின் சொத்தாக மாறிப்போகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.
பிறப்பு விகிதத்தின் சவால் என்பது நம்பிக்கையை அடிப்டையாகக் கொண்டது. ஆனால், நம்பிக்கை என்பது எதிர்காலத்தைப் பற்றிய தெளிவற்ற நேர்மறையான உணர்வோ, மாயையோ உணர்ச்சியோ அல்ல அது ஒரு உறுதியான நற்பண்பு என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது சரியான் விதத்தில் தெளிந்து தேர்வு செய்யப்படுகிறது என்றும் கூறினார்.
ஒவ்வொரு நபரின் நன்மைக்கான அர்ப்பணிப்பால் நம்பிக்கை ஊட்டம்பெறுகிறது என்றும், நம் வாழ்க்கைக்கும் மற்றவர்களின் வாழ்க்கைக்கும் அர்த்தத்தை வழங்குவதில் நாம் பங்கேற்கிறோம் மற்றும் ஈடுபடுகிறோம் என்பதை உணரும்போது நம்பிக்கை என்பது வளர்ச்சிடைகிறது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
ஊட்டமளிக்கும் நம்பிக்கை என்பது வார்த்தையின் மிக உயர்ந்த அர்த்தத்தில் சமூக, அறிவுசார், கலை, அரசியல் நடவடிக்கை என்றும் இது ஒருவரின் திறன்களையும் வளங்களையும் பொது நலனுக்கான பணியில் அர்பணிக்கச் செய்வதுடன் எதிர்காலத்தை விதைக்கிறது என்றும், நம்பிக்கை மாற்றத்தை உருவாக்குகிறது மற்றும் எதிர்காலத்தை மேம்படுத்துகிறது என்றும் தெளிவுபடுத்தினார் திருத்தந்தை.
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான இவ்வமைப்பை இப்போது அதன் மூன்றாவது பதிப்பில், நம்பிக்கையை உருவாக்கும் தளமாக நான் கருதுகிறேன் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பதிப்பு, அடிப்படையை செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்குப் பல நிலைகளில், நம்பிக்கையின் ஒரு பெரிய கூட்டணியை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் உரைத்தார்.
மீண்டும் பிறக்கத் தொடங்குவது எப்படி என்று சிந்திக்கும்போது, அது உடல் ரீதியாக மட்டுமல்ல, உள்ளத்தளவிலும் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையை ஒளிரச் செய்வதாகும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏற்கனவே வரலாறு எல்லாவற்றையும் எழுதிவிட்டது என்று அவநம்பிக்கை கொள்ளாமல், “பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன்” (காண்க எசா 43:19) என்ற இறைவாக்கின்படி நம்பிக்கைக்கான பாதைகளை இணைந்து தேடுவோம் என்றும் விவரித்தார்.
பிறப்பு விகிதத்தை புதுப்பித்தல் என்பது இளைஞர்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும் சமூக ஒதுக்கீட்டின் வடிவங்களை சரிசெய்வதாகும் என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது அனைவருக்குமான ஒரு பணி என்றும், குழந்தைகள் என்பவர்கள் தனிப்பட்ட சொத்துக்கள் அல்ல, ஆனால், அனைவரின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் மக்கள், மனித மற்றும் தலைமுறை செல்வத்தைக் கொண்டு வருகிறார்கள் என்பதையும் நாம் உணர்ந்திடல் வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
உங்களின் தொழில்முறை திறன் மற்றும் திறமையின் பலனாக, நல்ல தீர்வுகளைக் காண இங்கு வந்துள்ள நீங்கள், நம்பிக்கையை மீளுருவாக்கம் செய்யும், இத்தாலிக்கும், ஐரோப்பாவிற்கும், புத்துணர்வையும் வாழ்வையும் தரும் செயல்முறைகளைத் தொடங்கும் மாபெரும் பணிக்கு நீங்கள் அழைக்கப்பட்டுள்ளதாக உணர்ந்திடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்