தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மருத்துவருக்கு நன்றி தெரிவிக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மருத்துவருக்கு நன்றி தெரிவிக்கிறார்  (AFP or licensors)

முன்பை விட நலமாக இருக்கின்றார் திருத்தந்தை

திருத்தந்தை ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ள போர்ச்சுக்கல், மற்றும் மங்கோலியா திருத்தூதப் பயணங்களை மேற்கொள்ள எந்தவித இடையூறும் இல்லை - மருத்துவர் Alfieri

மெரினா ராஜ் – வத்திக்கான்

அறுவை சிகிச்சைக்கு முன்பிருந்ததை விட சிகிச்சைக்குப் பின்பு தற்போது திருத்தந்தை நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும், தனது திருத்தூதுப்பயணம் மற்றும் பிற பணிகளை தொடர்ந்து நன்முறையில் ஆற்ற முடியும் என்றும் தெரிவித்தார் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் Sergio Alfieri.

ஜூன் 16 வெள்ளிக்கிழமை காலை ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்து சாந்தா மார்த்தா இல்லம் திரும்பிய திருத்தந்தையின் உடல்நலன் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த செய்தியில் இவ்வாறு கூறினார் திருத்தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் Sergio Alfieri.

மருத்துவர்களின் ஆலோசனையின்படி, கடினமான பொருள்களைத் தூக்குதல், அதிக பளுவான வேலைகளைச் செய்தல் போன்றவற்றைத் தவிர்க்க திருத்தந்தைக்கு வலியுறுத்தியுள்ளதாகவும் அறுவை சிகிச்சைக்குப் பின் திருத்தந்தையின் உடலில் நல்ல முன்னேற்றம் காணப்படுகின்றது என்றும் கூறினார் மருத்துவர் Alfieri.

மருத்துவமனையில் அவர் இருந்த போதே சாய்வு நாற்காலியில் தன் பணியினைத் தொடர திருத்தந்தை ஏற்கனவே ஆரம்பித்து விட்டார் என்று கூறிய மருத்துவர் Alfieri அவர்கள், நன்றி, எனக்காக செபியுங்கள், நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்ற வார்த்தைகளையே அடிக்கடி உபயோகித்ததாகவும் கூறினார். 

2021ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று நடைபெற்ற பெருங்குடல் அறுவை சிகிச்சை 2023 ஏப்ரல் மாதம் நுரையீரல் தொற்று நோய் சிகிச்சை ஆகியவற்றின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு சிகிச்சை அளித்தவரான மருத்துவர் Alfieri, ஜூன் 7 அன்று நடைபெற்ற குடலிறக்க அறுவை சிகிச்சையையும் திருத்தந்தைக்கு நன்முறையில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தை ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ள போர்ச்சுக்கல், மற்றும் மங்கோலியா திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்ள எந்தவித இடையூறும் இல்லை என்று தெரிவித்த மருத்துவர் Alfieri, முன்பை விட திருத்தந்தை இப்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 June 2023, 12:09