தேடுதல்

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  

மனித மாண்பை மதிக்கும் சமூக நீதி கட்டியெழுப்பப்பட

சமத்துவமின்மை மற்றும் உழைப்பு, நிலம் உறைவிடம் இன்மையே வறுமைக்கான காரணங்கள் - கர்தினால் பரோலின்

மெரினா ராஜ் - வத்திக்கான்

மனித மாண்பு, ஒருமைப்பாடு, துணைத்தன்மை என்னும் மூன்றினை அடிப்படையாகக் கொண்டு சமூகநீதி கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும், இவை மூன்றும் தனிநபர்களின் அடிப்படை உரிமைகள், நலவாழ்வு, உணர்வுகள், ஆன்மிக தேவைகள் ஆகியவற்றில் உள்ளார்ந்த மாண்பினை மதிக்க வலியுறுத்துகின்றன என்றும் கூறியுள்ளார் கர்தினால் பியத்ரோ பரோலின்.

ஜூன் 14 புதன்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான உலக தொழில் உச்சிமாநாட்டில் பங்குபெற்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தியை வாசித்தளித்தபோது இவ்வாறு கூறியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

‘‘சமூக நீதிக்கான உலகளாவிய கூட்டணி: அனைவருக்கும் சமூக நீதி‘‘ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், மனிதன் கருவில் உருவான நாள் முதல் மரணம் வரை ஒரு சமூகத்தை நிலை நிறுத்தும் நோக்கில் மனித மாண்புடன் செயலாற்ற அழைக்கப்படுகின்றார், ஒருவரோடொருவர் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படவும், அரசு மற்றும் சமூக செயல்பாடுகளில் ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான செயல்பாடுகளில் துணை நிற்கவும் வலியுறுத்தப்படுகின்றார் என்றும் மனிதமாண்பு, ஒற்றுமை, துணைத்தன்மை ஆகிய மூன்றும் இவற்றையே வலியுறுத்துகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்றுநோய் நமது வாழ்க்கை முறையில் பல அச்சம் தரும் விளைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என்றும், சுயநலம் மற்றும் அழிவுதரும் கலாச்சார உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, வந்த பாதையில் பின்தொடருங்கள் அல்லது புதிய பாதையில் செல்லுங்கள் என்ற இரண்டினை வலையுறுத்துகின்றது என்றும் கூறியுள்ளார் கர்தினால் பரோலின்.

சமூகநீதி பற்றிய அரசியல் விவாதங்களின் போது சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் எதார்த்த அனுபவங்களைக் கருத்தில் கொண்டு நம் எண்ணங்களையும் செயல்களையும் வடிவமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், மிகவும் பாதுகாப்பான அமைதியை அடைய எடுக்கும் எந்த முடிவுகளிலும், செய்யும் செயல்களிலும், பங்கேற்பாளர்களாக இருந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சமத்துவமின்மை மற்றும் உழைப்பு, நிலம் உறைவிடம் இன்மையே வறுமைக்கான காரணங்கள் என்று வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், சமூக மற்றும் தொழிலாளர் உரிமைகளை மறுத்தல், மாண்பை சிதைத்தல் போன்றவை கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைவருக்கும் நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதன் வழியாக பொது நன்மையை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், பாகுபாடு, வறுமை, வன்முறை மற்றும் அநீதியை எதிர்கொள்பவர்களுடன் தீவிரமாக நின்று செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 June 2023, 12:27