தேடுதல்

வத்திக்கானில் முதியவர்கள் வத்திக்கானில் முதியவர்கள்   (Vatican Media)

திருஅவைக்கும், சமூகத்திற்கும் முதியவர்கள் தேவை : திருத்தந்தை

தாத்தா பாட்டி மற்றும் முதியவர்களுக்கான உலக தினம் அவர்களுக்கும் முழு திருஅவைக்கும் விலைமதிப்பற்ற நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அன்னை மரியா எலிசபெத்துக்குச் செய்ததைப் போல இளைஞர்கள் முதியவர்களின் இதயங்களில் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து அவர்களின் அனுபவங்களிலிருந்து ஞானத்தைப் பெற வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை மாதம் 23-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தாத்தா பாட்டி மற்றும் முதியவர்களுக்கான மூன்றாம் உலக தினத்திற்கான செய்தியில் இவ்வாறு  கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் காலத்தில் அடிக்கடி வருந்தத்தக்க வகையில் நடப்பது போல, முதியவர்களைக் கைவிடவோ அல்லது வாழ்க்கையின் விளிம்பிற்குத் தள்ளவோ ​​கூடாது என்று இறைவன் விரும்புகிறார் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

'தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்' (லூக் 1:50) என்பது, தாத்தா பாட்டி மற்றும் முதியவர்களுக்கான மூன்றாம் உலக தினத்தின் கருப்பொருளாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது இளம் வயது மரியாவுக்கும் அவரது வயதான உறவினர் எலிசபெத்துக்கும் இடையிலான மகிழ்ச்சியான சந்திப்பிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது (காண்க லூக். 1:39-56) என்றும் கூறியுள்ளார்.

இளைஞர்கள், வயதானவர்களுடனான தங்கள் உறவுகளின் வழியாக, நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளவும், மிகப் பெரிய வரலாற்றின் ஒரு பகுதியாக இருப்பதன் அழகை அங்கீகரிக்கவும் அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்ந்து கொள்வார்கள் என்று இறைவன் நம்புகிறார் என்றும் தனது செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

ஒரு வயதான நபருடன் மேற்கொள்ளும் நட்பு என்பது,  இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை நிகழ்காலத்தின் அடிப்படையில் மட்டும் பார்க்கவும், எல்லாமே அவர்கள் மற்றும் அவர்களின் திறன்களைப் பொறுத்தது அல்ல என்பதை உணர்ந்து கொள்ளவும் உதவும் என்றும் கூறியுள்ளார்.

வயதானவர்களைப் பொறுத்தமட்டில், அவர்களின் வாழ்க்கையில் ஒரு இளைஞனின் இருப்பு என்பது, அவர்களின் அனுபவம் இழக்கப்படாது மற்றும் அவர்களின் கனவுகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்கும் என்றும் உரைத்துள்ளார்.

கடவுளின் செயல்படும் வழியை சிறப்பாகப் பாராட்ட, நமது வாழ்க்கை முழுமையாக வாழ வேண்டும் என்பதையும், நமது மிகப்பெரிய நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் உடனடியாக அடையப்படுவதில்லை, மாறாக, வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியின் செயல்முறை, உரையாடல் மற்றும் பிறருடன் உறவுகொள்வதன் வழியாகவே அவைகளை அடையமுடியும் என்பதையும் நினைவில் கொள்வோம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

கடவுளின் அன்பான திட்டம் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் வரை பரவியுள்ளது என்றும், அது தலைமுறைகளைத் தழுவி இணைக்கிறது என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளைஞர்களைப் பொறுத்தவரை, இது விரைவான நிகழ்காலத்திலிருந்து விடுபட தயாராக இருப்பதைக் குறிக்கிறது என்றும், வயதானவர்களைப் பொறுத்தவரை, உடல் வலிமையின் இழப்பைப் பற்றி சிந்திக்காமல், தவறவிட்ட வாய்ப்புகளைப் பற்றி வருத்தத்துடன் சிந்திக்க வேண்டும் என்பதையும் குறிப்புதாக விளக்கியுள்ளார்.

ஆகவே, நாம் அனைவரும் முன்னோக்கிப் பார்ப்போம்! கடவுளின் பேரருளால் அவர் நம்மை வடிவமைக்க அனுமதிப்போம். காரணம், இதுவே தலைமுறைதோறும் மந்தநிலையிலிருந்தும் கடந்த கடந்த காலத்தில் வாழ்வதிலிருந்தும் நம்மை  விடுவிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இதை உணர்ந்தவர்களாக, நமது தாத்தா பாட்டி மற்றும் வயதானவர்களை உள்ளடக்கிய ஒரு உறுதியான முடிவை எடுக்க அனைவரையும் அழைப்பதாகவும், அவர்களை ஒருபோதும் கைவிடக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் முதியவர்களின் இருப்பு என்பது விலைமதிப்பற்ற ஒன்றாகும், ஏனென்றால் நாம்  ஒரே பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் மற்றும் அதன் வேர்களைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள மக்களின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை நாம் எடுக்கும் தீர்க்கமான முடிவு நமக்கு நினைவூட்டுகிறது என்றும் உரைத்துள்ளார் திருத்தந்தை.

திருஅவைக்கும், சமூகத்திற்கும் முதியவர்கள் தேவை, ஏனென்றால் அவர்கள் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பத் தேவையான கடந்த காலத்தை நிகழ்காலத்தில் ஒப்படைக்கிறார்கள். ஆகவே, அவர்களைக் கௌரவிப்பதுடன், அவர்களின் உறவை நாம் இழக்காமல் இருக்க வேண்டும் என்றும், அவர்களை ஒதுக்கி வைப்பதை ஒருபோதும் நம் அனுமதிக்கக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை.

நாம் சிறப்பிக்கவிருக்கும் தாத்தா பாட்டி மற்றும் முதியவர்களுக்கான உலக தினம் என்பது, அவர்களுக்கும் முழு திருஅவைக்கும் ஒரு சிறிய, ஆனால், விலைமதிப்பற்ற நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை,

இந்த நாளைக் கொண்டாடவும், இளையோர் மற்றும் முதியவர்களுக்கிடையிலான மகிழ்ச்சியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட சந்திப்பின் தருணமாக இதனை மாற்றவும்  மறைமாவட்டங்கள், பங்குத்தளங்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூகங்களுக்கு அழைப்புவிடுப்பதாகக் கூறித் தனது தாத்தா பாட்டி மற்றும் முதியவர்களுக்கான உலக தின செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2023, 14:28