தேடுதல்

பலவீனத்தில் வெளிப்படும் இறைவனின் அழைப்பு!

நமது பலவீனத்தில், தாழ்மையும் நேர்மையும் உள்ளவர்கள் வழியாக பெரிய காரியங்களைச் செய்யும் இறைவனிடம் நம்மை நம்பி ஒப்படைக்கிறோமா என்று சிந்திப்போம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒரு பாறையின் வலிமை, ஒரு கல்லின் நம்பகத்தன்மை மற்றும் ஒரு எளிய கூழாங்கல்லின் எளிமை அனைத்தும் புனித பேதுருவின் வாழ்வில் காணப்படுகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜூன் 29, இவ்வியாழனன்று, புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவை முன்னிட்டு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய சிறப்பு நண்பகல் மூவேளை செப உரையில், இவ்வாறு உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"உன் பெயர் பேதுரு, இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்" (மத் 16:!8) என்ற இயேசுவின் வார்த்தைகளை எடுத்துக்காட்டி தன் உரையைத் தொடங்கிய திருத்தந்தை, பேதுரு என்ற இந்த வார்த்தையானது பாறை, கல் மற்றும் கூழாங்கல் எனப் பல்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளது என்று கூறி, இம்மூன்றின் சிறப்பு அம்சங்களைக் குறித்து விளக்கினார்.

பேதுரு என்பது பாறை

பல நேரங்களில் பேதுரு வலிமையானவராகவும், நிலையானவராகவும், உண்மையானவராகவும், தாராள மனம் கொண்டவராகவும் இருக்கிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைப் பின்பற்ற எல்லாவற்றையும் விட்டுவிடுகின்றார் (காண். லூக்கா 5:11); இயேசுவை வாழும் கடவுளின் மகனாக அங்கீகரிக்கின்றார் (மத் 16:16); உயிர்த்தெழுந்தவரை நோக்கி விரைவாகச் செல்ல அவர் கடலில் குதிக்கின்றார் (காண். யோவான் 21:7), கைது செய்யப்பட்டு கசையடிக்கு முன்னும் பின்னும் உயிர்த்த இயேசுவை ஆலயத்தில் வலிமையோடும் துணிவோடும் அறிவிக்கின்றார் (காண்க திப 3:12-26; 5:25-42). என்றும், இவையெல்லாம் அவர் ஒரு பாறையாக இருந்தார் என்பதை எண்பிக்கின்றன என்றும் எடுத்துரைத்தார்.

பேதுரு என்பது கல்

பேதுரு கிறிஸ்துவின் மீது நிறுவப்பட்ட ஒரு கல் என்றும், திருஅவையைக் கட்டியெழுப்புவதற்கும், அதன் சகோதரர் சகோதரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதற்கும் புனித பேதுரு ஒரு கல்லாக விளங்கினார் (காண்க 1 பேது2:4-8; எபே 2:19-22) என்றும் உரைத்த திருத்தந்தை, அவர் நற்செய்தியின்படி அனைவரையும் ஒன்றிப்பவராக இருந்தார் (காண்க. திப 15:7-11) என்றும், முழு கிறிஸ்தவ சமூகத்திற்கும் நம்பகத்தன்மைக் கொண்ட ஒரு கல் இவர் என்றும் கூறினார்.

பேதுரு ஒரு கூழாங்கல்

அவரது சிறுமை அதாவது பலவீனம் அடிக்கடி வெளிப்படுகிறது. சில வேளைகளில் இயேசு என்ன செய்கிறார் என்று அவருக்குப் புரியவில்லை (காண்க மாற் 8:32-33; யோவா 13:6-9) என்று உரைத்த திருத்தந்தை, இயேசு கைது செய்யப்படுவதை எதிர்கொள்ளும் போது, பேதுருவை அச்சம் முந்திக்கொள்ள அனுமதித்து, அதனால்தான் இயேசுவை மறுத்தலித்தவராய், மனம் வருந்தி அழுகிறார் (காண்க லூக் 22:54-62) என்றும், சிலுவையின் கீழ் நிற்க அவருக்குத் துணிவு இல்லை என்றும் உரைத்தார்.

மேலும், Quo Vadis பாரம்பரியத்தின் படி, பேதுரு மரணத்தை எதிர்கொள்ளும் போது தப்பி ஓட முயற்சிக்கிறார், ஆனால், அப்படி செல்லும் வழியில் உயிர்த்த இயேசுவை சந்திக்கிறார் மற்றும், மீண்டும் உரோமைத் திரும்பி மரணத்தைச் சந்திப்பதற்கான மனவலிமையையும் துணிவையும் பெறுகின்றார் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை

நாம் எந்த வகையினர்?

புனித பேதுரு ஒரு பலம்பொருந்திய வலிமைவாய்ந்த மனிதர் அல்ல, நம்மைப்போன்று அவரும் ஒரு சாதாரண மனிதர்தான். தனது பலவீனத்தில்தான் இயேசுவின் அழைப்பிற்கு அவர் ‘ஆம்’ என்று சொல்கின்றார் என்றும், புனித பவுலடியாரிலும் ஏனைய புனிதர்களிடமும் வெளிப்பட்டதுபோன்றுதான் பேதுருவிடமும் பலவீனம் வெளிப்பட்டது என்றும் கூறினார் திருத்தந்தை

இந்த மூன்று நிலைலைகளையும் நாம் மனதில் நிறுத்தி நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பதைக் குறித்துச் சிந்திப்போம். பாறை போன்றா, கல் போன்றா மற்றும், கூழாங்கல் போன்றா என்று சிந்திப்போம் என அழைப்புவிடுத்த திருத்தந்தை, நமது பலவீனத்தில், தாழ்மையும் நேர்மையும் உள்ளவர்கள் வழியாக பெரிய காரியங்களைச் செய்யும் இறைவனிடம் நம்மை நம்பி ஒப்படைக்கிறோமா என்று கேள்வி எழுப்புமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2023, 14:52