திருத்தந்தையைச் சந்தித்தார் பிரேசில் நாட்டு அதிபர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிரேசில் நாட்டு அதிபர் Luiz Inacio Lula da Silva, 2022-ஆம் ஆண்டு மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக ஜூன் 21, இப்புதனன்று, வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து ஏறத்தாழ 45 நிமிடங்கள் அவருடன் உரையாடினார்.
இருவருமே ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருந்த நிலையில் இந்தச் சந்திப்பு மிகவும் சுமூகமாக நடைபெற்றது என்றும், தனது நாட்டிற்கு இரண்டாம் முறை திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளுமாறு பிரேசில் அரசுத் தலைவர் Silva அவர்கள் திருத்தந்தைக்கு அழைப்பு விடுத்ததாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.
இத்தாலியின் அரசுத் தலைவர் செர்ஜியோ மத்தரெல்லாவுடனான சந்திப்பைத் தொடர்ந்து, பிரேசில் நாட்டு அதிபர் வத்திக்கானுக்கு வந்தடைந்தார் என்றும், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கின் ஒரு சிறு அறையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களும் சிறிது நேரம் உரையாடிய பின் தங்களுக்குள் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொண்டனர் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்தது.
அதன் பிறகு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களுக்குப் பதிலாளாய் செயல்படும் பேராயர் Edgar Peña Parra அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் Silva. (அல்பேனியா பற்றிய நூல் வெளியீட்டு விழாவிற்காக கர்தினால் பரோலின் தற்போது இத்தாலியில் உள்ள உடின் நகருக்குச் சென்றிருக்கிறார்.
இந்தச் சந்திப்புகளின்போது, பிரேசில் நாட்டின் சமூக மற்றும் அரசியல் சூழல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், வறுமை மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம், பூர்வீக இன மக்களுக்கான மரியாதை, மற்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் குறிப்பிட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்