தேடுதல்

புனிதர்கள் பேதுரு பவுல் போன்று, திருத்தூதர்களாக இருங்கள்!:

இறைவனைப் பின்பற்றி, தொடர்ந்து பணிவுடன் அவரைத் தேடுவதன் வழியாகத் திருஅவையாக வளர்வது நல்லது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உயிர்வாழ்வதற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவது போல, திருஅவைக்கு நற்செய்தி அறிவிப்புத் தேவைப்படுகிறது என்றும், கடவுளின் அன்பையும் நற்செய்தியின் மகிழ்ச்சியையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் திருஅவை வாழ முடியாது என்றும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜூன் 29, இவ்வியாழனன்று, வத்திகான் புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற புனித பேதுரு, பவுல் பெருவிழாத் திருப்பலில் ஆற்றிய மறையுரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைப் பின்பற்றுவதில் சீடர்களாகவும், நற்செய்தியை அறிவிப்பதில் திருத்தூதர்களாகவும் இருங்கள் என்றும், இறைமக்கள் அனைவருடனும் இணைந்து எல்லா இடங்களிலும் நற்செய்தியின் அழகைக் கொண்டு வாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? (மத் 16:15) என்று இயேசு தன் சீடர்களிடம் எழுப்பிய கேள்விதான் எல்லாவற்றிலும் முக்கியமான மற்றும் தேவையான கேள்வி என்றும் கூறிய திருத்தந்தை, எனக்கு இயேசு யார்? என் வாழ்க்கையில் இயேசு யார்? என்ற இரண்டு கேள்விகளை நமக்கு நாமே எழுப்ப வேண்டும் என்றும்,  இந்தக் கேள்விகளுக்கு இவ்விரண்டு திருத்தூதர்களும் எப்படிப் பதிலளித்தார்கள் என்பதைக்  குறித்து சிந்திக்கவும் திருப்பயணிகளுக்கு அழைப்புவிடுத்தார்.

என்னைப் பின்பற்றி வா

நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?  என்ற இயேசுவின் கேள்விக்கு, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று கூறிய புனித பேதுருவின் பதில் இயேசுவைப் பின்பற்றுவதில் அடங்கி இருந்தது என்று எடுத்துரைத்த திருத்தந்தை, இயேசுவைப் பின்பற்றி, அவரோடும், அவருக்குப் பின்னாலும் சிலகாலம் நடந்த சிலிர்ப்பூட்டிய அனுபவத்திற்குப் பிறகுதான், பேதுரு ஆன்மிக முதிர்ச்சியை அடைந்தார் என்றும், இது இறையருளால் நம்பிக்கைகுரிய ஒரு பணியைத் அவருக்குத் தெளிவுபடுத்தியது என்று கூறினார்.

பேதுரு இயேசுவைப் பின்பற்றும்பொருட்டு அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டார் என்றும், இதனை அவர் உடனடியாக செய்தார் என்றும் நற்செய்திக் கூறுகிறது (மத் 4:20) எனவுரைத்த திருத்தந்தை, ‘நான் யோசித்துவிட்டு பிறகுக் கூறுகிறேன்’ என்று பேதுரு இயேசுவிடம் கூறவில்லை, எதிர்வரும் நன்மை தீமைகள் குறித்தும் அவர் கணக்கிடவில்லை, மாறாக, அவர் வலைகளை விட்டுவிட்டு அவரை உடனடியாகப் பின்பற்றினார் என்றும் குறிப்பிட்டார்.

பேதுரு ஒரு சீடராக, இயேசுவைப் பின்பற்றுபவராக, அவருடைய அடிச்சுவடுகளில் நடப்பவராக, நாளுக்கு நாள் அனைத்தையும் கற்றுக் கொள்ளக்கூடியவராக இருந்தார் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, "நீ என்னைப் பின்தொடர்ந்து வா" (யோவான் 21:22) என்பதுதான் பேதுருவிடம் இயேசு கூறியதாக நற்செய்திகளில் பதிவுசெய்யப்பட்டுள்ள இறுதியான வார்த்தைகள் என்றும் சுட்டிக்காட்டினார்.

இயேசுவைப் பின்பற்றுவதன் வழியாக மட்டுமே நாம் ஒவ்வொரு நாளும் அவரை அறிந்து கொள்கிறோம் என்றும், அவருடைய சீடர்களாக, அவருடைய வார்த்தைகளைக் கேட்பதன் வழியாக மட்டுமே நாம் அவருடைய நண்பர்களாகி, மாற்றம் தரும் அவருடைய அன்பை அனுபவிக்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

நற்செய்தியை அறிவி

பேதுருவின் பதில் அவரை இயேசுவைப் பின்பற்ற அழைத்தது என்றால்,  பவுலடியாரின் பதில் நற்செய்தியை அறிவிக்க அழைப்புவிடுத்தது என்றும். கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணமுடன் தமஸ்கு நகர் நோக்கிப் புறப்பட்ட புனித பவுல் இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்பட்டபோது, அவர் இயேசுவில் மீட்பின் மறையுண்மை நிறைவேறியதைக் கண்டுகொண்டார் என்றும் விளக்கினார் திருத்தந்தை.

கிறிஸ்துவைப் பற்றிய உன்னத அறிவோடு ஒப்பிடுகையில், மனிதர் மற்றும் மதம் குறித்து அவர் பெற்ற முந்தைய அனைத்தையும் குப்பையெனக் கருதினார் (பிலி 3:7-8) என்று கோடிட்டுக்காட்டிய திருத்தந்தை,  புனித பவுலடியார் நிலம் மற்றும் கடல், பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களைக் கடந்து சென்று இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும்பொருட்டு, அவர் தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தார் என்றும் உரைத்தார்.

எந்தளவுக்கு அவர் இயேசுவைக் குறித்து அதிகம் அதிகம் போதித்தாரோ அந்தளவுக்கு அவர் கிறிஸ்துவைக் குறித்த அறிவைப் பெற்றுக்கொண்டார் என்றும்,  மற்றவர்களுக்குக் கிறிஸ்துவின் வார்தைகளை அறிவித்ததன் வழியாக அவர் கடவுள் குறித்த மறைபொருளின் ஆழத்தை அறிந்துகொண்டார் என்றும் உரைத்த திருத்தந்தை, இதனால்தான், "நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!" (1 கொரி 9:16) என்றும், “கிறிஸ்துவே எனக்கு ஆதாயமே" (பிலி1:21) என்றும் அவரால் கூற முடிந்தது எனவும் கூறினார் திருத்தந்தை.

எல்லா இடங்களிலும் நற்செய்தியை அறிவிப்போம்

நாமும் அவ்வாறே, இறைவனைப் பின்பற்றி, தொடர்ந்து பணிவுடன் அவரைத் தேடுவதன் வழியாகத் திருஅவையாக வளர்வது நல்லது என்றும், உலக காரியங்களில் மகிழ்ச்சியைத் தேடாமல், அவ்வுலகில் நற்செய்தியை அறிவிப்பதிலும், கடவுளின் பிரசன்னத்திற்கு மக்களின் இதயங்களைத் திறப்பதிலும் மகிழ்ச்சியைக் காணும் ஒரு திருஅவையாக நாம் மாறுவது மிகவும் நல்லது என்றும் வலியுறுத்தினார்.

நமது நகரங்களில், நமது குடும்பங்களில், நமது உறவுகள் மற்றும் சுற்றுப்புறங்களில், நமது குடிமைச் சமூகங்களில், திருஅவை மற்றும் அரசியல் வாழ்க்கையில், முழு உலகிலும், குறிப்பாக, வறுமை, சிதைவு மற்றும் ஓரங்கட்டப்படுதல் ஆகியவை ஆழமாக வேரூன்றி உள்ள இடங்களில் ஆண்டவராகிய இயேசுவைப் பணிவுடனும் மகிழ்ச்சியுடனும் அறிவிப்போம் என்றுக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2023, 14:46