தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

தூய ஆவியானவர் நம் நினைவாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார்

தூய ஆவியானவர் நம் ஆன்மாவை ஊக்கமின்மை மற்றும் சுயநலத்தின் சோதனைகளிலிருந்து பாதுகாக்கிறார் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தூய ஆவியானவர் சுட்டிக்காட்டும் இணக்கப் பாதைகளைத் தொடர நாம் ஒருபோதும் அச்சம்கொள்ளக கூடாது என்றும், அவைகள் தற்போதைய காலத்தின் தேவைகள் மற்றும் நாகரீகங்களுக்கு நம்மை இணங்க வைக்கும் உலகப் பாதைகள் அல்ல,  மாறாக, அவைகள் ஒன்றிப்பு மற்றும் பணியின் பாதைகள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 28, இப்புதனன்று, கத்தோலிக்கத் திருஅவைக்கும் கிறிஸ்துவின் சீடர்கள் என்ற கிறிஸ்தவ சபைக்கும் இடையே உரையாடலை ஊக்குவிக்கும் அனைத்துலக ஆணையத்தின் உறுப்பினர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சவால்கள் நிறைந்த இன்றைய உலகில் திருத்தூதர்கள் கொண்டிருந்த அதேபேரார்வத்தோடு நாம் ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

தூய ஆவியானவர் திருஅவையை அப்போஸ்தலிக்க மரபில் நிலைத்திருக்கச் செய்யும் நினைவாற்றலைத் தருவதோடு மட்டுமல்லாமல், திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவர்கள்  அனைவரையும் முழுமையாகக் கிறிஸ்துவின் மறையுண்மையில் ஆழமாக வழிநடத்துகிறார் என்று உரைத்த திருத்தந்தை, தூய ஆவியானவர் நம் நினைவாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டினார்.

நம் நினைவாகத் தூய ஆவியானவர்

“என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்” (காண்க. யோவா 14:26) என்று இயேசு கூறியது போன்று, நாம் இறைவேண்டலில் நெருங்கி வரும்போதும், தூய ஆவியாரின் ஏவுதலுக்கு உட்பட்ட இறைவார்த்தைகளுக்குத் திறந்த இதயத்தோடு செவிமடுக்கும்போதும், ​​அவர் நமக்குள் பேசவும் செயல்படவும் நாம் அனுமதிக்கிறோம் என்றும் விளக்கினார்.

நல்வாழ்வு வழங்கும் தூய ஆவியாரின் நினைவு நம் வாழ்க்கையில் முக்கியமானது மற்றும் கடவுளால் முடியாதது எதுவுமில்லை (காண்க. லூக் 1:37) என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்று கூறிய திருத்தந்தை, ஆவியானவர் ஒவ்வொரு நாளும் நம்மை "மேலிருந்து பிறக்க" அழைக்கிறார் (காண்க யோவான் 1:1-21), மேலும் நம் சகோதரர் சகோதரிகள் மீது அன்பு காட்ட நம்மைத் தூண்டியெழுப்புகிறார் என்றும் எடுத்துரைத்தார்.

நம் வழிகாட்டியாகத் தூய ஆவியானவர்

"உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்" (காண்க. யோவான் 16:13) என்று இயேசு கூறிய வார்த்தைகளைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, தூய ஆவியார், சகோதரத்துவ உணர்வு மற்றும் பணியில் அதை ஒருங்கிணைத்து, அதற்கு வெவ்வேறு படிநிலை மற்றும் அருங்கொடைகளை வழங்குகிறார் என்றும், மேலும் இதே வழியில் அதை வழிநடத்துகிறார் மற்றும் தனது கனிகளால் அலங்கரிக்கிறார் என்றும் விளக்கினார்.

தூய ஆவியார் கிறிஸ்தவச் சமூகத்தை துடிப்புடன் இளமையாக வைத்திருக்கிறார். ஆகவே, பணியின் உண்மையான கதாநாயகனாகிய அவரில், இயேசுவை ஆண்டவராகவும் மீட்பராகவும் அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றும், மேலும் அவருடைய பெயரைப் போற்றி, அந்த நாமத்தை மகிமைப்படுத்துவதிலும் பேருவகைகொள்வதிலும் விடாமுயற்சியுடன் இருப்பதற்கான வலிமையை அத்தூய ஆவியாரில் காண்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

தூய ஆவியானவர் நம் ஆன்மாவை ஊக்கமின்மை மற்றும் சுயநலத்தின் சோதனைகளிலிருந்து பாதுகாக்கிறார் என்றும், தூய ஆவியாரின் தூய காற்றை சுவாசிப்பதன் வழியாக, கடவுளற்ற தன்மையிலிருந்து அதாவது, இவ்வுலகக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து நம்மை நாமே குணப்படுத்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

நம்பிக்கையின் கண்களால், நம் வாழ்விலும், நம்மைச் சுற்றியுள்ள உலகிலும், தூய ஆவியாரின் பிரசன்னம், அவர் விதைக்கும் விதைகள் மற்றும் அவரது நிலையான செயல்பாட்டை, நமது சமூகங்களின் எல்லைகளுக்கு அப்பால் கூட நம்மால் அடையாளம் காண முடியும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, நாம் தூய ஆவியாருக்குக் கீழ்ப்படிந்தால், ஒப்புரவு செய்ய கடினமாகத் தோன்றும் எல்லா காரியங்களையும் அவர் நிச்சயமாக ஒப்புரவாக்குவார், ஏனென்றால் அவர் தனக்குள் இணக்கமாக இருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டினார்.

அப்படியானால், பாதை மூடப்பட்டது அல்லது துண்டிக்கப்பட்டது என்று நாம் நினைத்த இடத்தில் புதிய மற்றும் எதிர்பாராத பாதைகளைத் திறக்கும் நினைவகமாகவும் வழிகாட்டியாகவும் நாம் ஆவியிலிருந்து புதிதாகப் புறப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

ஆவியானவர் சுட்டிக்காட்டும் இணக்கப் பாதைகளைத் தொடர நாம் ஒருபோதும் அச்சம்கொள்ளக் கூடாது என்றும், அவைகள் தற்போதைய காலத்தின் தேவைகள் மற்றும் நாகரீகங்களுக்கு நம்மை இணங்க வைக்கும் உலகப் பாதைகள் அல்ல,  மாறாக, அவைகள் ஒன்றிப்பு மற்றும் பணியின் பாதைகள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2023, 14:31