போர் எப்போதும் தோல்வியைத் தருகின்றது - திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
மனிதர்களின் சுய நலத்திற்காக நடத்தப்படும் போர் எப்போதும் தோல்வியை மட்டுமே தருகின்றது என்று உக்ரைன் நாட்டுத் திருப்பீடத் தூதரக அதிகாரிகளின் மனைவியர் 18 பேர் அடங்கிய குழுவைச் சந்தித்த போது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 28 புதன்கிழமை திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரையில் பங்கேற்ற பின் பிற்பகலில் திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்த இக்குழுவினர் திருப்பீடத்திற்கான உக்ரைன் நாட்டு அரசியல் பிரதிநிதி Andrii Yurash அவர்களால் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
Buenos Aires அருள்பணியாளராக இருந்து ஆயராக மாறிய ஒருவரால் தனது 11ஆவது வயதில் உக்ரைன் மொழியில் திருப்பலி நிகழ்த்த கற்றுக்கொண்டதாக அவர்களுடன் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு பரிசுகளை வழங்கிய உக்ரைன் திருப்பீடத்தூதர அதிகாரிகளின் மனைவியருக்குத் தன் நன்றியினையும் தெரிவித்தார்.
ஜூன் 27, செவ்வாயன்று, திரையிடப்பட்ட Evgeny Afineevsky என்பவரால் தயாரிக்கப்பட்ட Freedom on Fire: Ukraine’s Fight for Freedom ஆவணப்படத்தின் வெளியீட்டிலும் இக்குழு கலந்து கொண்டது. மேலும் இதே குழு இரண்டு நாட்களுக்கு முன்பு, இஸ்தான்புல்லில் முதுபெரும்தந்தை பர்த்தலோமியோவைச் சந்தித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜூன் 29, வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் சிறப்பிக்கப்பட்ட திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாத் திருப்பலியிலும் இக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்