இந்திய இரயில் விபத்து குறித்த திருத்தந்தையின் கவலை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஜூன் மாதம் 2ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை இந்தியாவில் ஏறக்குறைய 300 பேரின் உயிர்களைப் பலிவாங்கிய இரயில் விபத்து குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மூவொரு கடவுள் திருவிழாவான ஜூன் 4, ஞாயிற்றுக்கிழமையன்று உரோம் நகர் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் முவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக செபிப்பதாகவும், காயமடைந்த அனைவரின் அருகாமையில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கோரமண்டல் விரைவு வண்டி, ஹவுரா அதிவிரைவு வண்டி, சரக்கு இரயில் என மூன்று இரயில்கள் ஒடிசா மாநிலம் பாலசோர் என்ற இடத்தில் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் ஏறக்குறைய 300 பேர் உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உயிரிழப்புக்களுடன் ஏறக்குறைய 1200 பேர் காயமடையவும் காரணமாகியுள்ள இந்த பெரும் விபத்துக் குறித்த விசாரணைகள் இந்திய அரசால் துவக்கப்பட்டுள்ளன.
மேலும், இவ்வுலகில் போருக்குப் பலியாகிவரும் மக்களை, குறிப்பாக உக்ரைனில் துயருறும் மக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்காகச் செபிப்பதாகவும் தெரிவித்தார்.
போரால் பெருந்துன்பங்களை அனுபவித்துவரும் மக்கள் அனைவரையும் அன்னைமரியின் பாதுகாப்பில் ஒப்படைப்பதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்