தேடுதல்

வீடற்ற வறியோர் - இந்தியா  வீடற்ற வறியோர் - இந்தியா   (REUTERS)

உலக ஏழைகள் தினத்தையொட்டி திருத்தந்தையின் சிறப்புச் செய்தி

மகிழ்ச்சியில்லாதவைகளையும், துயர் தருபவைகளையும் இளையோர் ஒதுக்கி வைக்க விரும்புவதால், ஏழைகளும் பலவேளைகளில் மறுக்கப்படும் ஆபத்து உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஏழைகளின் பாதுகாவலரான புனித பதுவை அந்தோணியாரின் திருவிழாவன்று உலக ஏழைகள் தினத்திற்கான சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏழை எவரிடம் இருந்தும் உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே (தொபி 4:7) என்ற தோபித்து நூல் கூறும் வார்த்தைகளை, இவ்வாண்டு நவம்பர் 19 ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக வறியோர் நாளுக்கான தன் செய்தியின் துவக்கத்திலேயே சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் இரக்கத்தின் பலன்தரும் அடையாளமாக ஏழைகள் உள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தன் மகன் தோபியாவிற்கு தோபித்து எடுத்துரைத்த அறிவுரைகளை இச்செய்தியில் மேற்கோள் காட்டியுள்ள திருத்தந்தை, பிறரன்பு நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்த தோபித்தின் உடைமைகள் அனைத்தையும் மன்னர் பறித்துக்கொண்டதையும் இதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிறரன்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுத் திரும்பியபின் களைப்பாக தூங்கிய தோபித்தின் கண்களில் பறவை ஒன்று எச்சமிட, அவர் பார்வையையும் இழந்தது குறித்து ஆழமாக சிந்திக்க நம் விசுவாசம் நமக்கு அழைப்பு விடுக்கிறது, ஏனெனில் நம்மைத் தன் விசுவாசத்தில் பலப்படுத்தவே இறைவன் நமக்குத் துன்பங்களை வழங்குகிறார் எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துன்ப துயர்களைச் சந்தித்த தோபித்து தன் ஏழ்மை நிலையை ஏற்றுக்கொண்டதுடன் அதன் வழியாக மற்றவர்களின் ஏழ்மை நிலையை உணர்ந்தவராக உதவினார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் கட்டளைகளை மட்டும் கடைப்பிடித்தால் போதாது ஏழைகளின் துயர் துடைக்க உதவவேண்டும் என்பதை தோபித்து உணர்ந்து செயலாற்றினார் என மேலும் எடுத்துரைத்துள்ளார்.

இன்றைய உலகில் இணையதளங்கள் வழியாகப் பெறும் மாய உலகிற்கும் உண்மை நிலைகளுக்கும் இடையேயான முரண்பாடுகளால் குழம்பிப் போயிருக்கும் இளையோர், மகிழ்ச்சியில்லாதவைகளையும், துயர் தருபவைகளையும் ஒதுக்கி வைக்க விரும்புவதால், ஏழைகளும் பலவேளைகளில் மறுக்கப்படும் ஆபத்து உள்ளது என மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இயேசுவின் நல்ல சமாரியர் உவமை என்பது, கடந்த காலத்திற்கு மட்டும் உரியதல்ல, மாறாக இன்றைய நம் நிலைகளைக் குறித்தும் கேள்வி எழுப்பவல்லது என உரைத்த திருத்தந்தை, ஏழைகளின் துயர்துடைக்க நாம் ஒவ்வொருவரும் அழைப்புப் பெற்றுள்ளோம் என நினைவுபடுத்தியுள்ளார்.

திருத்தந்தை புனித 23ஆம் ஜான் அவர்களின் Pacem in Terris சுற்றுமடலின் 60ஆம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதையும், குழந்தை இயேசுவின் புனித திரேசா பிறந்ததன் 150ஆம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதையும் இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சுற்றுமடலிலும், புனித குழந்தை திரேசாவின் எழுத்துக்களிலும் ஏழைகள் மீதான அக்கறை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளவைகளையும் எடுத்தியம்பியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2023, 13:50