விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறையின் புதிய தலைவர்
மெரினா ராஜ் – வத்திக்கான்
விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத் துறையின் தலைவராக பேராயர் Víctor Manuel Fernández அவர்களை நியமித்து, இறையியல் மீது அதிக மதிப்பு கொண்ட அவர், அத்தகைய இறையியல் பார்வையில் கடவுளின் மக்களுடன் எவ்வாறு உரையாட வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 1 சனிக்கிழமை விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறையின் தலைவராக பேராயர் Víctor Manuel Fernández அவர்களை நியமித்துள்ள நிலையில் அவரது புதிய பணிக்காகவும் பொறுப்பிற்காகவும் கடிதம் ஒன்றின் வழியாக வாழ்த்தினை வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத்தின் விவிலிய மற்றும் தத்துவ இயல் பன்னாட்டு துறையின் தலைவராகவும் விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத் துறையின் தலைவராகவும் இதுவரை பணியாற்றிய இயேசு சபை அருள்பணியாளர் கர்தினால் Luis Francisco Ladaria Ferrer, அவர்களுக்குத் தன் நன்றியினையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்மைக் குறை கூறும், விமர்சிக்கும் மனிதர்களுக்கல்ல, மாறாக நமது நம்பிக்கைக்குக் காரணமாக அமையும் போதனைகளை பாதுகாப்பதே நமது முக்கிய நோக்கம் என்றும், புதிதாக பணியினை ஏற்க இருக்கும் பேராயர் தனது பணியில் இறையியல் அறிவை மேம்படுத்திக் கோட்பாட்டுப் பிழைகளை அகற்றவும் வித்தியாசமான முறையில் செயல்படவும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Buenos Aires இறையியல் கல்லூரியின் தலைவர், அர்ஜெண்டினா ஆயர் பேரவையின் விசுவாசம் மற்றும் கலாச்சார அவையின் தலைவர் என பல பொறுப்புக்களில் திறம்பட செயலாற்றியுள்ள பேராயர் Fernández அவர்கள், சிறார் முறைகேடு தொடர்பான ஒரு குறிப்பிட்ட பிரிவில் செயல்பட மிகவும் திறமையான நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்பணியில் தனிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்டு பேராயத்தின் முக்கிய நோக்கத்திற்காக நம்பிக்கையுடன் செயல்படவும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.
புத்திசாலித்தனத்தை அதிகரிப்பது, நற்செய்தி அறிவிப்புப் பணியில் நம்பிக்கையை பரப்புவது போன்றவற்றால் ஒளி இருப்பதை புரிந்துகொள்வதற்கான அளவுகோலாக செயல்பட வேண்டும் என்றும், அறிவியலின் முன்னேற்றம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில்முகமாக செயல்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
திருஅவையின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையின் விளக்கம், உண்மையைப் புரிந்துகொள்வதில் வளர வேண்டும்" என்றும், தத்துவ, இறையியல், மேய்ப்புப்பணி சிந்தனைகளின் வெவ்வேறு கோடுகள், மரியாதை மற்றும் அன்பில் ஆவியானவரால் ஒத்திசைக்கப்படுவதற்கு நம்மை அனுமதித்தால், அவை திருஅவையை வளரச் செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இணக்கமான இந்த வளர்ச்சி, எந்த கட்டுப்பாட்டு நெறிமுறையையும் விட, கிறிஸ்தவ கோட்பாட்டை மிகவும் திறம்பட பாதுகாக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பேராயர் Víctor Manuel Fernández அவர்கள் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடையில் இருந்து நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறைத் தலைவராக பொறுப்பேற்று செயல்பட உள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்